அவன் காட்டை வென்றான்.



ந்த உலகம் மாபெரும் காடு. இதில் மனிதன் அந்தரங்கத்தில் தனியாள். 

உணவும், உறக்கமும், கலவியும், எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாகத் தேவையானவையே! ஆனால் இதில் அவற்றை அடைய மனிதன் மட்டும் படாதபாடு படவேண்டியிருக்கிறது. அதற்கென அன்பு, காதல், காமம், மோகம், கோபம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் அனுபவித்து அவன் கடக்க வேண்டியிருக்கிறது. இந்த முரண்பாட்டையும், அதற்கென செய்யும் போராட்டத்தையும், மனித வாழ்வியலின் தத்துவத்தையும் இந்த குறுநாவல் தாங்கியிருக்கிறது.

இந்த குறுநாவல் பன்றி மேய்க்கும் ஒரு கிழவனின் கதையே. தினமும் காட்டிற்குள் மேய்ச்சலுக்கு செல்லும் அவனது பன்றி கூட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான தாய்ப்பன்றி ஒன்று மட்டும் திரும்பி வராமல் இருக்கிறது. பிரசவிக்கும் நேரத்தில் அது காட்டிற்குள் சென்று எங்கோ மறைந்து கொள்கிறது. அதனைத் தேடி அந்த நாளின் இரவில் கிழவன் தனியாளாக காட்டிற்குள் செல்கிறான். தாய்ப்பன்றியை பத்திரமாக பிடித்துக்கொண்டு வரும் பொறுப்பு அவனுக்கு ஏற்படுகிறது. அதைவிட அந்த இரவில் காட்டை புரிந்துகொள்ளும் சுமையும் கூடுகிறது. கிழவன் அந்த தாய்ப்பன்றியை கண்டுபிடித்து தனது பொறுப்பை காப்பாற்றினானா? அவன் காட்டை வென்றானா? என்பதுதான் இந்த குறுநாவலின் கதை.

இந்த குறுநாவலின் கதாபாத்திரம் என்றால் ஒத்த செருப்பாக இருக்கும் கிழவன் ஒருவன் மட்டுமே. அவனுக்கு பெயர் எதுவும் கிடையாது. அவனது இருப்பிடமும் எந்த ஊரென தெரியாது. கதை முழுவதும் அவனைச் சுற்றியே சுழல்கிறது. அந்த கிழவன்தான் இந்த குறுநாவலை வாசிக்கும் நம்மையும் கைபிடித்து காட்டிற்குள் அழைத்துச் செல்கிறான். காட்டில் அவனுக்கு ஏற்படும் அனுபவத்தை நமக்கு சொல்லித் தருகிறான். அந்த அனுபவத்தில் கிழவனும் கடலும் சான்டியாகோவைப் போல வாழ்வியலை போதிக்கிறான்.

இந்த குறுநாவல் ஒரு இரவில் தொடங்கி விடிவதற்குள் முடிந்துவிடுகிறது. இதில் மனிதனைத் தவிர்த்து மற்ற முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறதா? என்றால் காணாமல் போகும் தாய்ப்பன்றியைச் சொல்லலாம். மேலும் காடும் காட்டிலிருக்கும் மலைகள், மடுக்களும், நீரோடைகளும், பள்ளத்தாக்குகளும், கல், மண், மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகளும் மற்ற கதாபாத்திரங்களாக இக்கதையில் உலாவருகின்றன. காட்டில் காற்றும் ஒரு பாத்திரமாகும் அதனோடு பஞ்ச பூதங்களும் இக்கதையில் விளையாடுகின்றன. இரவிற்கும், நிலவிற்கும், நட்சத்திரங்களுக்கும், இருளிற்கும் கூட இந்த கதையில் இடமிருக்கிறது.

காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது - என இக்கதையில் வரும் அந்த கிழவன் ஒருமுறை குறிப்பிடுகிறான். காட்டிற்கு மட்டுமல்ல மனித வாழ்க்கைக்கும் அது பொருந்திப் போகிறது. வாழ்க்கை எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது.

மனிதன் அறிவியல் பூர்வமாக இருக்கமாட்டான். அதேபோல காடும் அறிவியல் மயமாக இருக்காது. காட்டிற்குள் சமூகநீதி என்பதெல்லாம் செல்லுபடியாகாது. அங்கு காட்டின் நீதி மட்டுமே நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட காட்டை ஒருவன் வென்றான் என்றால் தன்னைத்தானே அவன் வென்றதற்கு சமம். இந்த குறுநாவலில் வரும் கிழவனுக்கு இறுதியில் சூன்யமே மிஞ்சினாலும் அவன் காட்டை வெல்கிறான்.


ஒரு சிறிய கதைக்களத்தை எடுத்துக்கொண்டு காட்டையும் மனித வாழ்க்கையின் சித்தாந்தத்தையும் விஸ்வரூபமாக காட்டிய இந்த குறுநாவலை எழுதியவர் டாக்டர் கேசவ ரெட்டி. தெலுங்கு மூலத்திலிருந்து அதனை ஏ.ஜி. எத்திராஜுலு தமிழில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். தவறாமல் வாசித்துப் பாருங்கள்.

அவன் காட்டை வென்றான்
(Atadu Dadavani Jayichaadu - தெலுங்கு)
கேசவ ரெட்டி
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு
நேஷனல் புக் டிரஸ்ட்.