நிஜ நாயகன்.
குறித்த நேரத்தில் சரியாக வெடிக்கும்படியான வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் ஓரிடத்தில் மறைத்து வைப்பார்கள். தீவிரவாதிகள் மட்டுமே இதனை செய்வார்கள். கதாநாயகர்கள் அதனை எப்படியோ மோப்பம் பிடித்துவிடுவார்கள். தேடிக் கண்டுபிடித்த வெடிகுண்டின் அருகே நாயகன் பதற்றத்துடன் இருப்பார். புஜபலபராக்கிரமசாலி என்றால் சட்டையை கழற்றிவிடுவார். டிக்...டிக்... டிக்... வெடிகுண்டில் வெடிக்கப்போகும் நேரம் குறைந்துகொண்டே வரும். வியர்வை சொட்ட சொட்ட நாயகன் அதிலிருக்கும் சிவப்பு பச்சை ஒயர்களில் எதை வெட்டுவதென்று யோசிப்பார். பின்னணியில் தேசியகீதம் ஒலிக்கும். வெடிக்கும் நேரத்திற்கு சில மணித்துளிகளே இருக்க நாயகன் ஏதாவது ஒரு ஒயரை துண்டிப்பார். பீப்... பீப்... பீப்... என்ற சத்தத்துடன் வெடிகுண்டு செயலிழந்து போகும். இதனை பார்க்கும் அனைவரும் ஆர்ப்பரிப்பார்கள். நாயகி உடனிருக்கும் பாக்கியம் இருந்தால் ஓடிவந்து கட்டியணைக்க ஆல்ப்ஸ் மலையில் அழகிய டூயட் பாடலை தரிசிக்கலாம். இந்தியா மட்டுமல்லாமல் உலக சினிமாக்களில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் மாற்றமே இல்லாத மாற்றவே முடியாத காட்சி வடிவம் இது. ஆனால் நிஜத்தில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் யுக்தி அவ்வாறு எளிதான காரியமில்லை. தனது உயிரையும் பொருட்படுத்தாது அதனை செய்து முடிக்கும் நிஜ நாயகர்களின் முகம் கூட தெரிவதில்லை. அத்தகைய பணியைச் செய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய நிஜ நாயகர்களில் ஒருவர்தான் கர்னல் ஃபாஹிர் பெர்வாரி (Col Fahir Berwari).
எட்டு குழந்தைகளுக்கு தந்தை மற்றும் குர்திஷ் இராணுவ அதிகாரியான ஃபாஹிர் 2003 மற்றும் 2008 இடைப்பட்ட ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்க இராணுவத் தொடர்பாளராக இருந்தார். பின்னர் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு ஈராக்கின் குர்திஷ் பகுதியில் கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அவர் தன்னை அற்பணித்துக் கொண்டார். ஒரு கத்தி மற்றும் ஒயர் கட்டர் என சொல்லக்கூடிய எளிமையான சாதனத்தை வைத்தே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளையும் வெடிகுண்டுகளையும் அவர் அகற்றினார். அதற்காக அவர் தனது கால்களையும் உச்சகட்டமாக தனது உயிரையும் விலையாக கொடுக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் அவர் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய எந்தவித பயிற்சியும் மேற்கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் வாழும் பகுதியில் வெடிகுண்டுகளால் ஒரு உயிர் போவதை நான் அனுமதிக்க மாட்டேன் என தனது வாழ்க்கையையே அதற்கென ஒப்படைத்த அவரைப்பற்றிதான் இந்த டாகுமெண்டரி விவரிக்கிறது.
ஃபாஹிர் கண்ணிவெடிகளை அகற்ற தனியாளாக புறப்பட்டதிலிருந்து பின்னர் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது வரை தான் மேற்கொண்ட செயலை தனது வீடியோ கேமராவால் படம்பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவரது மறைவிற்கு பின்பு அந்த வீடியோக்கள் அவரது மகன் அப்துல்லா என்பவருக்கு கிடைக்க தன் தந்தையின் வீரதீர செயல்களை இந்த டாகுமெண்டரி மூலம் உலகத்திற்கு அவர் காட்டியிருக்கிறார். சொல்லப்போனால் இந்த டாகுமெண்டரியின் நாயகனும் இயக்குனரும் ஃபாஹீரே ஆவார்.
இந்த டாகுமெண்டரி ஃபாஹிரின் மகனிடமிருந்து மெல்ல தொடங்குகிறது. பின்னர் தனது ஆறாம் அறிவுதான் ஆயுதம் என பயிற்சி எதுவும் இல்லாமல் தனியாளாக கண்ணிவெடிகளை அகற்ற அவர் தெருவில் இறங்கியதும் வேகமெடுக்கிறது. ஒவ்வொரு முறையும் கண்ணிவெடிகளையும் மற்ற வெடிகுண்டுகளையும் அவர் செயலிழக்கச் செய்யும் காட்சிகள் நம்மை நகம் கடிக்கச் செய்கிறது. இறுதியாக அவர் உயிரிழக்க காரணமான வெடிவிபத்து காட்சி கண்ணீரையும் ஏதோவொரு வெறுமையையும் வரவழைக்கிறது.
இன்று ஈராக்கின் டுஹோக் மகாணத்தின் தெருக்களில் நடந்து சென்றால் அங்கிருக்கும் வீடுகளிளும் கடைகளிலும் ஃபாஹீரின் புகைப்படங்களை காணலாம். ஆரம்பத்தில் இவரை கிரேஸி ஃபாஹிர் (Crazy Fakhir) என அமெரிக்க இராணுவம் அழைக்க இன்று கிரேஸி பாஹிரை அங்குள்ள அனைவரும் தெரிந்து வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட வாழ்ந்து மறைந்த ஒரு நிஜ நாயகனை இந்த டாகுமெண்டரியின் மூலம் சந்தியுங்களேன்.
The Deminer
Directed by - Hogir Hirori, Shinwar Kamal
Music by - Mohammed Zaki
Cinematography - Hogir Hirori, Shinwar Kamal, Eric Vallsten
Country - Sweden
Language - Kurdish
Year - 2017
🔗டாகுமெண்டரியைக் காண: