வாழ்க்கை விளையாட்டு.
இந்த திரைப்படத்தின் பெயரையும் அதன் போஸ்ட்டரையும் பார்த்துவிட்டு அஹா! விளையாட்டு தொடர்பான திரைப்படமாக இருக்கும் போல, விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது, வியர்வை சொட்ட சொட்ட, புழுதி பறக்க, மைதானத்தில் உருண்டு புரளும் கதை இருக்கும். கடைசியில் தங்க பதக்கத்தையோ அல்லது வெள்ளிக் கோப்பையையோ அல்லது வெங்கல கிண்ணியையோ வாங்கியவுடன் சுலபமாக சுபமாக முடியும், நாம பிகிலடிக்கலாம் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். இது விளையாட்டு தொடர்பான திரைப்படம் கிடையாது ஆனால் விளையாட்டான திரைப்படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெகு இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாள் இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு சென்ற ஹேண்ட்பால் விளையாட்டு குழுவைச் சேர்ந்த 23 நபர்கள் தெற்கு ஜெர்மனியின் விட்டிஸ்லிங்கன் நகரில் திடீரென காணாமல் போயினர். ஜெர்மன் நாட்டில் வருடா வருடம் நடைபெறும் ஹேண்ட்பால் போட்டிக்காக முதன்முறையாக அவர்கள் இலங்கையின் சார்பாக கலந்துகொண்டனர். முதல் போட்டியில் அவர்கள் ஜெர்மனியின் உள்ளூர் அணியுடன் மோதி படுதோல்வி அடைந்திருந்தனர். அடுத்த போட்டி தொடங்கும் நிலையில் அதிகாலையில் அந்த குழுவிலிருந்த வீரர்கள், பயிற்சியாளர், மேலாளர், உதவியாளர் என அனைவரும் மாயமானது ஜெர்மனி நாட்டிற்கு தலைவலியானது. எங்கே! 1972 -ல் முனிச் நகர ஒலிம்பிக் போட்டியில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதா? என அவர்கள் அஞ்சினார். ஆகையால் காதும் காதும் வைத்ததுபோல் ஜெர்மன் போலிசார் ஒருபக்கம் காணாமல் போனவர்களை தேடத் தொடங்கினர். மறுபக்கம் விஷயத்தை இலங்கையிலிருக்கும் ஜெர்மன் தூதரகத்திற்கு தெரிவித்து இலங்கை அரசை தொடர்பு கொண்டனர். அப்போதுதான் இலங்கையில் ஹேண்ட்பால் போட்டிக்கென அதிகாரப் பூர்வமாக எந்த குழுவும் கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அப்படி என்றால் காணாமல் போனவர்கள்?
காணாமல் போன அனைவரும் சட்ட விரோதமாக ஜெர்மனிக்கு நுழைந்தவர்கள். அங்கு நுழைய அவர்கள் இந்த ஹேண்ட்பால் போட்டியினை பயன்படுத்திக் கொண்டது பிறகுதான் தெரியவந்தது. அத்தனை கெடுபிடிகள் இருந்தும் அவர்களால் அங்கு செல்ல எப்படி முடிந்தது? என்பதையையே இந்த திரைப்படம் நகைச்சுவையாக காட்டுகிறது.
இலங்கை என்றதும் உள்நாட்டு போர் என்ற கருத்திற்கு மாற்றாக இந்த திரைப்படம் கொழும்பு நகரத்தின் சேரிப்பகுதிக்குள் தொடங்குகிறது. அந்த சேரிப்பகுதியில் வசிக்கும் மனோஜ் மற்றும் ஸ்டான்லி இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். மனோஜ் நகரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பதுபான பகுதியில் வேலை செய்கிறான். ஸ்டான்லி சாலையில் பழங்களை விற்பனை செய்பவனாக இருக்கிறான். இருவரும் தங்கள் வேலை மற்றும் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பணத் தேவைக்காக ஜெர்மனி நாட்டிற்கு செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜெர்மன் தூதரகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் பவேரியாவில் நடைபெறவிருக்கும் ஹேண்ட்பால் என்ற விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை இவர்கள் காண்கிறார்கள். அந்த போட்டியினை வைத்து சட்டவிரோதமாக ஜெர்மனிக்குள் நுழைய முடிவு செய்கின்றனர். இவர்களது திட்டத்திற்கு மனோஜ் வேலை செய்யும் ஹோட்டலில் இருக்கும் விஜித் என்பவன் உதவி செய்கிறான். அந்த ஹோட்டலுக்கு வரும் ஜெர்மன் சுற்றுலா பயணிகளின் உதவியுடன் அந்த போட்டியினைப் பற்றி இவர்கள் தெரிந்துகொள்கின்றனர். விளையாட்டு என்றால் ஒரு குழு வேண்டும் அல்லவா? அதனால் இவர்களைப் போலவே வெளிநாடு செல்லும் மோகத்திலிருக்கும் சிலரை கண்டுபிடிக்கின்றனர். தங்கள் அணிக்கு இலங்கை தேசிய ஹேண்ட்பால் அணி என பெயர் வைக்கின்றனர். ஜெர்சி எனப்படும் விளையாட்டு உடையை இலங்கையின் அதே மஞ்சள் கலந்த நீல வண்ணத்தில் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வபோது பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். இதனையும் தவிர்த்து விசா விண்ணப்பத்திற்காகவும், ஜெர்மன் நாட்டின் ஒப்புதலுக்காகவும் உள்ளூர் மற்றும் அரசின் விளையாட்டுதுறையின் கையெழுத்துகளை போலியாக பெறுகின்றனர். உச்சகட்டமாக இலங்கையின் ஒலிம்பிக் சங்கத்தின் சான்றிதழ்களையும் போலியாக தயாரிக்கின்றனர். ஒருவழியாக ஜெர்மன் அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைக்க, புறப்படும் நேரத்தில் அந்த குழுவிலிருந்து மனோஜ் மட்டும் விலகுகிறான். மற்ற அனைவரும் ஜெர்மனிக்கு பறக்கின்றனர்.
ஜெர்மனியில் ஹேண்ட்பால் போட்டி தொடங்குகிறது. முதன்முறையாக போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் இலங்கை அணிக்கு அங்கு உற்சாக வரவேற்பு கிடைக்கிறது. முதல் போட்டியில் உள்ளூர் அணியுடன் விளையாட அழைப்பு விடுக்க அந்த குழுவிலிருக்கும் அனைவருக்கும் தயக்கம் ஏற்படுகிறது. முதல் போட்டியும் நடைபெறுகிறது. அதில் அந்த குழு படுதோல்வியடைகிறது. இதற்கிடையில் இலங்கையிலிருந்து வந்த அந்த விளையாட்டு அணியின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுகிறது. அதை உறுதிசெய்ய அடுத்தநாள் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் போலீசார் நுழைய, இலங்கையிலிருந்து போலியாக வந்திறங்கிய அந்த குழுவிற்கு என்ன நேர்ந்தது? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
வளர்ந்த நாடுகளில் கவர்ச்சிகரமான வாழ்க்கையைத் தேடும் இளைஞர்கள் எல்லா வளரும் நாடுகளிலும் இருக்கின்றனர். அதற்காக அவர்கள் எத்தகைய அபாயத்தையும் எதிர்கொள்ளத் துணிகிறார்கள். இந்த திரைப்படம் அத்தகைய இளைஞர்களைச் சுற்றியே நகர்கிறது. இது ஒரு உண்மைக்கதை. உண்மை நிகழ்வை அப்படியே காட்டாமல் சூழ்நிலையோடு பொருந்தும் வகையில் நாடகத்தன்மையில்லாமல் நகைச்சுவை கலந்து பார்வையாளர்களை நகரவிடாமல் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது. அதற்கு நடிகர்களின் தேர்வு பெரிதும் உதவியிருக்கிறது. குறிப்பாக... ஆமாம்! ஹேண்ட்பால்னா என்ன?..என அப்பாவியாக கேட்கும் ஸ்டான்லியாக நடித்த தர்மபிரியா டயஸ் மனதை கவர்கிறார். இன்று உலகமெங்கும் சட்டவிரோதமாக குடியேறுதல் என்பது தடை செய்யப்பட்டிருக்கிறது, சொந்த நாட்டில் வாழ்வோரின் குடியுரிமை கூட கேள்விக்குறியாக தொங்கி நிற்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதெல்லாம் வெறும் வாசகமாக பார்க்கப்பட, அனைவருக்கும் உரிமை என்பதை ஒப்புக்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டதிட்டங்கள் மறுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தீவிரமான விஷயத்தை இந்த திரைப்படத்தில் மிக எளிமையாக கையாண்ட இயக்குனரை நிச்சையம் பாரட்டத் தகும். நண்பர்கள் இயல்பாக பேசிக்கொள்ளும்போது வெளிப்படும் மச்சான் என்ற தமிழ் வார்த்தைதான் இந்த திரைப்படத்தின் தலைப்பு என்பது கூடுதல் அழகு. தவறாமல் பாருங்கள்.
Machan
Directed by - Uberto Pasolini
Written by - Ruwanthie De Chickera and Uberto Pasolini
Music by - Lakshman Joseph De Saram and Stephen Warbeck
Cinematography - Stefano Falivene
Country - Italy and Sri Lanka
Language - Sinhala
Year - 2008.
Directed by - Uberto Pasolini
Written by - Ruwanthie De Chickera and Uberto Pasolini
Music by - Lakshman Joseph De Saram and Stephen Warbeck
Cinematography - Stefano Falivene
Country - Italy and Sri Lanka
Language - Sinhala
Year - 2008.