ஹேராம்.

லையுலக பிரபலங்களை கூட்டி, அரசியல் தலைகளை கழித்து, ஞானியை வைத்து கலைநிகழ்சிகளை வகுத்தால், பார்வையாளர்களை கவர்ந்து கல்லாப்பெட்டியை பெருக்கலாம் என பாராட்டு விழா நடத்தாமல் விட்டிருந்தாலும், கமல் என்பவர் இந்திய சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் என்பது சந்தேகமே இல்லை. ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை உற்று ஆராய்ந்தால் அந்த துறையில் அவர்களுக்கு இருக்கும் பசித்த தேடல் விளங்கும். அதற்கு நான் இன்னமும் சினிமாவின் குழந்தைதான் என சொல்லிக்கொண்டு இன்றுவரை ஏதாவது ஒரு தேடலுடன் இருக்கும் கமல் ஒரு எடுத்துக்காட்டு. அவரது தேடலில் விழைந்த திரைப்படங்களை படங்கள் என சொல்வதைவிட பாடம் என சொல்வது பொருத்தமாக இருக்கும். அத்தகைய கமல் என்ற கலைஞனின் கலைப் படைப்பில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேராம் திரைப்பாடம்.


நாம் எப்போதாவது சோர்வடைந்து அமரும்போதோ, அல்லது படுக்கும்போதோ, ஆசுவாசப்படும்போதோ அம்மாடா, அப்பாடா, என்று சொல்வது வழக்கம். அதுவே பக்தியுடன் முருகா, சிவசிவ, யேசுவே, யா அல்லா, எதையாவது சொல்லி பெருமூச்சு விடுவோம். வடக்கே இருக்கும் பெரும்பாலான இந்துக்கள் இதைபோல 'ஹே'ராம் என சொல்லவதுண்டு. அந்த கிழவனும் அதைத்தான் அடிக்கடி உச்சரிப்பார். அதை சொல்லியே உயிரையும் விட்டார். அந்த வார்த்தைக்கு அவ்வளவு மகிமை இருந்து உண்மைதான் என்றாலும் பின்நாளில் அது மதவெறியின் அடையாளமாக மாறிப்போனது வேறு கதை. அந்த வார்த்தையையே கமல் இந்த திரைப்படத்தின் தலைப்பாக வைத்திருந்தார்.

ஹேராம் ஒரு அரசியல் திரைப்படம், இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வை சித்தரித்த ஆவணப்படம், உலகெங்கிலும் வேறெங்கும் நிகழ்ந்திராத அளவிற்கு சுதந்திரத்திற்கு பிறகு அதுவரை சகோதர்களாக இருந்த இரண்டு மதத்தை சேர்ந்த மனிதர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டு மிருகங்களாக மாறியதை காட்டிய திரைப்படம். இந்து முஸ்லீம் தகராறு தாத்தா... என இளைய ராம் சொல்லும்போது, வயதான ராம் நொந்துபோய்...இன்னுமா!... என சொல்லிவிட்டு கண்மூடும் திரைப்படத்தில் வரும் காட்சியைப்போல் இன்றுவரை தொடரும் இந்து முஸ்ஸீம் மதக்கலவரத்தின் ஆரம்பகாலகட்டத்தை விவரித்த திரைப்படம். மேலும் சுதந்திரத்திற்கு பிறகு அதற்காக அற்பணித்த ஒருவரை பாதுகாக்கத் தவறிய அரசியல் கையாளாகாதத் தனத்தை காட்டிய திரைப்படம். காந்தியடிகள், அவரை கொல்ல புறப்பட்ட ஒருவன், அவனுக்கு பின்னால் இருந்த இயக்கம், சுதந்திர இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, இந்து, முஸ்ஸீம், சீக்கியர் என கத்திமேல் நடக்கும் களத்தை கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை எடுத்தது அவ்வளவு சுலபமான காரியமாக இருந்திருக்க முடியாது. அதைவிட கத்தரிகளுக்கு சிக்காமல் அதை வெளிக்கொண்டு வந்ததும் சுலபமாக இருந்திருக்காது. ஆனால் கமல் அதை செய்து காட்டியிருந்தார். தனக்கே உரித்தான புத்திசாலித்தனத்தால் அத்தனை தடைகளையும் அவர் கடந்திருந்தார்.

சுதந்திரத்திற்கு பின்பு இந்தியா முழுவதும் ஒருகூட்டம் காந்தியை கொல்ல தயாராக இருந்தது. அந்த கூட்டத்தை சேர்ந்த ஒருவன் காந்தியை கொல்லத்துணிந்து பிறகு மனம் மாறுவதே இந்த திரைப்படத்தின் கதை. எளிதாக சொல்லவேண்டும் என்றால் காந்தியை கொல்ல புரப்பட்ட ஒருவன் காந்தியான கதை. இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அது எழுத்தாளர் கமலின் அற்புதமான வசணங்கள். உதாரணத்திற்கு...

இங்க சாவகாசமா என் கல்யாணம் நடந்திண்டிருக்கு. டெல்லில ஒரு பெரிய விவாகரத்தே நடந்திண்டிருக்கு. 'வோர்ல்ட்ஸ் பிக்கஸ்ட் பொலிட்டிகள் டிவோர்ஸ்'

❤மைதிலி : இது என்ன கெட்ட வார்த்தை புத்தகமா?...
(ராம் சற்று கோபமுற)...
மைதிலி: அட்டை போட்டு மறைச்சு படிக்றேளேன்னு கேட்டேன்...
(சுற்றும் முற்றும் பார்த்து)...
ராம்: சம்திங்க்ஸ் ஆர் பெட்டர் டன் அன்டர் கவர்....
மைதிலி: மகாத்மா,எதையும் மூடி மறைக்கறது தப்புன்னு சொல்றாரே...
ராம்: மூடி மறைச்சாலும் ஒன் ப்ளவுஸ் நன்னா இருக்கு...

❤மகாத்மாவச் சுத்தி மூணுவிதமான குரங்குகள் இருக்கு. அதில ஒண்ணு, காதப் பொத்திண்டு, மகாத்மா சொல்றதைத் தவிர வேறு எதையும் கேக்கமாட்டேங்கறது. இன்னொண்ணு, மகாத்மாக்கு எதிர்வாதம் பேச மாட்டேன்னு வாயப் பொத்திண்டுடுத்து. மூணாவது, உலக நடப்பைப் பார்க்காம கண்ணை மூடிண்டு காந்தியோட கற்பனை லோகத்தில இருக்கு. இதுல நீ எந்த மாதிரி கொரங்கு? 

❤மைதிலி: ஒரு ஓநாய் சாப்பிடறதுக்குன்னு உங்க குழந்தையைத் தூக்கிண்டு போச்சுன்னா அது நியாயம்பேளா?

அபியங்கர்: ஓநாய இருந்து பாத்தாத்தான், அந்த நியாயம் புரியும்.

❤ராம்: என்...என் கை, கறைபடிஞ்ச கை. அதுவும் ரத்தத்துல.

மைதிலி: ஒங்களுக்கு வேட்டை பிடிக்கும். அதானே? அது பாவமில்லை. புலியோட தர்மம் வேட்டையாடறது. 'ஐ லவ் யூ மை டைகர்'. 

❤ராம்: உன் நாடா? கைபர் கணவாய் வழியா வந்த விதேசி நீ... எழுநூறு வருஷமா எங்களை ஆண்ட திமிரு உங்களுக்கு.

அம்ஜத்: அப்ப நான் பொறக்கலய.. நான் ஒங்கூடப் பொறந்தவன்டா. 'மெனி கேம் ஃப்ரம் த கைபர். ஒய் பிக் ஆன் மீ, திஸ்வே?' நான் விதேசி, நீ சுதேசி ஆங்? ஒன் ராமச்சந்திர மூர்த்தியே கைபர் வழியா வந்ததா சொல்றாங்களே...ஷ்..ஷ்..

மேலும் இயக்குனர் கமல் பயன்படுத்திய மறைபொருள் குறியீடுகளைக் கொண்ட பின்னணி காட்சிகள் ஹேராம் திரைப்படத்தை இதுவரை யாரும் எடுத்திராத திரைப்படம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. எடுத்துக்காட்டாக கொல்கத்தாவிலும், மன்னார்குடியிலும் தென்படும் யானை, முதலிரவு அறையில் சத்தியசோதனை படிக்கும் காட்சி, காளி புகைப்படத்தில் கல்கத்தா தெரு தெரியும் காட்சி, உடைந்து விழும் பியானோ,  தீர்க்கதரிசனமாக ஹிட்லரின் ஸ்வஸ்திக் வடிவம் சுழற்று தாமரையாக மாறும் காட்சி, என திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைப் பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகமே எழுதலாம்.

ஹேராம் திரைப்படம் வெளிவந்த போது அது வசூல் ரீதியாக எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை. மருந்திற்கு விமர்சனத்திற்கும் உட்படவில்லை. ஒரு திரைக்கலைஞன் தனது படைப்பில் என்னவெல்லாம் வைத்திருக்கிறான், அவன் திரைமொழி என்ன? அதிலிருக்கும் கவிதைத்துவம் எத்தகையது? என்பதை ஆராயாமால் ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்கவேண்டும் எனத் தெரியாத நமக்கு ஹேராம் புரியாமல் இருந்ததும் ஆச்சரியமில்லை. ஆனால் பின்வந்த காலங்களில்தான் நிதர்சன உண்மை விளங்கியது. ஹேராம் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் பொக்கிஷம் என புரிந்தது. அந்த ஹேராம் திரைப்படத்தின் திரைக்கதை வடிவம்தான் இந்த புத்தகம்.

இளைய ராம்: ஐ ஹேட் திஸ் ரிலிஜன் பாலிடிக்ஸ்.

டாக்டர் முன்னு: சோ டஸ் காட்.

இளைய ராம்: மதமும் அரசியலும் சேரவே கூடாது. செக்ஸ் அண்ட் வயலன்ஸ் மாதிரி இது டேஜ்சரஸ் கலவை.

டாக்டர் முன்னு: பட், கமர்சியல் கலவை. சிட்டிலேருந்து கிராமம் வரைக்கும் புரியுமே. 


ஹேராம் முழுக்கமுழுக்க கமல் என்ற கலைஞனின் திரைப்படம். இதன் திரைக்கதையை கமல் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதாவது படம் எடுப்பதற்கு முன்பே அதனை முடித்திருந்தார். ஒரு திரைப்படம் எடுக்கும் முன்பு அதனை திரைக்கதையாக எழுதுவது என்பது ஆழம் தெரியாத ஆற்றில் அதுவும் முதலை இருப்பது தெரிந்தே காலை விடும் புதிய முயற்சி. அதற்கும் அவர் துணிந்திருந்தார். திரைக்கதை ஹைக்கு கவிதை மாதிரி படிப்பவர்கள் கோணத்திற்கு உருமாறும் பச்சோந்தி அது, அதனை காப்பியடித்தாலும் பரவாயில்லை கல்லால் அடிக்காதீர்கள் என ஹேராம் திரைக்கதையை தன் நண்பர்களின் உதவியுடன் புத்தகமாக அவர் வெளியிட்டிருக்கிறார். முன்பே குறிப்பிட்டதுபோல் ஹேராம் ஒரு படம் அல்ல, அது ஒரு பாடம். தற்போது அது புத்தக வடிவிலிலும் கிடைக்க, உன்னத சினிமாவை நேசிப்பவர்களுக்கும், அந்த துறையை சுவாசிப்பவர்களுக்கும் நிச்சையம் உதவக்கூடும். நீங்கள் ஹேராம் திரைப்படத்தை திரையில் பார்த்திருந்தால் இந்த புத்தகத்தை வாசித்துவிட்டு மறுபடியும் ஒருமுறை பாருங்கள். அல்லது நீங்கள் இந்த திரைப்படத்தை இதுவரை பார்த்ததில்லை என்றால் முதலில் திரையில் பார்த்துவிட்டு புத்தகத்தை கையில் எடுங்கள்.


ஹேராம்
கமல்ஹாசன்
சப்னா புக் ஹவுஸ்.