Wi - Fi free நடிகை.

ம்மைச் சுற்றியிருக்கும், நாம் அன்றாடம் புழங்கும் இடங்களான அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், மால்கள், பேருந்து - இரயில் - விமான நிலையங்கள், கேளிக்கை அரங்கங்கள், ஆலயங்கள், மருத்துவமனைகள், அட! ஏன்? பொது கழிவறைகள், மின்மயானங்களில் கூட Wi - Fi free என்ற வாசகத்தை பார்த்திருக்கக்கூடும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்குதோ இல்லையோ இங்கெல்லாம் இது இலவசமாக கிடைப்பது நவீன வளர்ச்சியே. இது ஒருபுறமிருக்க ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் கம்பிகள் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகளைக்கொண்டு வெவ்வேறு சாதனங்களை இணைக்கும் இந்த அமைப்புமுறை அறிய கண்டுபிடிப்பு ஆகும். முதலுதவி செய்வது எப்படி என அறிந்திராத நாம்கூட இதனை சுலபமாக கையாளத் தெரிந்திருப்பதும் அதிசயம்தான். அவ்வாறு நாமெல்லாம் இந்த Wi - Fi தொழில்நுட்பத்தை மிக எளிதாக பயன்படுத்திவரும் வேளையில் எடி இலமார் என்ற நடிகைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.


நடிகை என்றால் சினிமாவில் நடிப்பார், அவருக்கு ஜொல்லமான ரசிகர்கள் இருப்பார்கள், அவரைப் பற்றி கிசுகிசுகள் வரும், அவரா? இவரா? எவரா இருக்கும்? என யோசிக்க யாரோ ஒரு தொழிலதிபரை மணந்துகொள்வார், சில வருடங்கள் காணமல் சென்று திடீரென அடையாளம் தெரியாமல் ஒரு டிவி சீரியலில் தோன்றுவார். காண சகிக்காத கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடுவராவார், ஏதோவொரு கட்சியில் சேர்வார், பிரச்சாரம் செய்வார், ராசி உச்சமெனில் நாடாழ்வார். அப்படியிருக்கும் நடிகைக்கும் Wi - Fi என்ற தொழில்நுட்பத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்றால்?  இந்த நடிகையே Wi - Fi தொழில்நுட்பத்தின் சூத்திரதாரி ஆவார்.


எடி இலமார் (Hedy Lamarr - Hedwig Eva Maria Kiesler ஹெடி லாமர்) November 9 1914 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்தார். சிறுவயதிலேயே இவருக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட, திரைப்படத்துறை வளர்ச்சியடையத் தொடங்கிய காலகட்டத்தில் 16 வயதில் மயிலாக ஜெர்மன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது எக்ஸ்டஸி என்ற திரைப்படம் சர்ச்சைக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக ஜெர்மனியிலிருந்து பாரிஸுக்கு தப்பிச் சென்றார். பிறகு இவர் MGM ஸ்டுடியோ தலைவர் லூயிஸ் மேயரின் புண்ணியத்தில் ஹாலிவுட்டில் இணைய, லேடி ஆஃப் தி டிராபிக்ஸ், பூம் டவுன், எச்.எம். புல்ஹாம், எஸ்க், வைட் கார்கோ, சாம்சன் மற்றும் டெலிலா போன்ற திரைப்படங்களில் நடித்து பலரது தூக்கத்தை கெடுத்தார். இரண்டாம் உலகப்போர் உச்சம் தொட்ட வேளையில் இவர் தனது ஆர்வத்தை பயன்பாட்டு அறிவியல்  கண்டுபிடிப்புகளின் மீது திருப்பினார். குறிப்பாக ரேடியோ அலைகளை ஆராய்ந்த இவர், கடற்படை போரில் அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ தொழில்நுட்ப முறையில் சில மாற்றங்களை செய்ய நினைத்தார். அதன்படி யாரும் கண்காணிக்காத அல்லது ஒட்டுக்கேட்க முடியாத அதிர்வெண் துள்ளல் சமிக்கையை உருவாக்கினார். இதனை அவர் தன் நண்பர் மற்றும் இசையமைப்பாளரான ஜார்ஜ் ஆந்தில் (George Antheil) என்பவருடன் இணைந்து ஒரு சாதனமாக உருவாக்க முயன்றார். இவரது கண்டுபிடிப்பு சிறந்ததாக இருந்தபோதிலும் அன்றைய நிலவரப்படி ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டுமே அந்தகைய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதால் அது நிராகரிக்கப்பட்டது. ஆனால் முப்பது வருடங்களுக்கு பிறகே அதன் மகத்துவம் புரியத் தொடங்கியது. எடி இலமாரின் அந்த ரகசிய மின்காந்த அலை கண்டுபிடிப்பே இன்றைய தகவல் தொடர்பு முறையான Frequency Hopping Spread Spectrum (FHSS) என்பதற்கு அடிப்படையாக அமைந்தது. இம்முறையே GPS, Bluetooth, CDMA மற்றும் செல்லுள்ளோருக்கு சென்ற இடமெல்லாம் இலவசமாக கிடைக்கும் அந்த Wi - Fi என்ற தொழில்நுட்பத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

பின்குறிப்பு:

எடி இலமாரின் கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்காவிட்டாலும் பின்நாட்களில் அவர் சிறந்த கண்டுபிடிப்பாளராக போற்றப்பட்டார். அதற்கு சாட்சியாக ஜெர்மன் மொழி பேசும் நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவரது பிறந்த நாளை கண்டுபிடிப்பாளர்கள் தினமாக (Inventor's Day) இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.