மாயக் கனவு.
முதன்முதலாக இரயில் பார்த்த தருணமும் அதில் பயணம் செய்த அனுபவமும் சென்ற தலைமுறையினருக்கு நிச்சையம் நினைவில் இருக்கும். இன்றைய தலைமுறையினருக்கு இரயில் என்பது அற்பமான ஒன்றாகிப் போனாலும் கூட, வாழ அசாதாரணமான நாடுகளில் இருக்கும் புதிய தலைமுறையினருக்கு இரயில் மட்டுமல்லாது அற்பமான அனைத்துமே அதிசயமாகத்தான் இருக்கும். இந்த குறும்படம் ஒரு சிறுவனின் இரயில் பற்றிய ஏக்கத்தோடு அவன் வாழும் நாட்டின் நிலமையை அழகாக விவரிக்கிறது.
சற்று அதிர்ச்சியாகவும் விமர்சனத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும் இந்த குறும்படத்தின் கதைக்களம் இலங்கை. அங்கு நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில் இந்த குறும்படம் தொடங்குகிறது. யுத்தத்திற்கு பின்பு பிறந்த ராசா என்ற பத்துவயது சிறுவன் தன் தாயுடன் அந்த பகுதியில் வசிக்கிறான். ஒருநாள் தன் தாயுடன் யுத்தம் நடந்த பகுதியில் காய்ந்த பனை ஓலைகளை பொறுக்கச் செல்லும் அவன் அங்கிருக்கும் சிதைந்த இரயில் நிலையம் ஒன்றினை காண்கிறான். அதைப்பற்றி அங்கு வரும் உணமுற்ற இளைஞனிடம் கேட்டு முதன்முதலாக தான் இதுவரை பார்த்திராத இரயிலைப் பற்றிய அறிமுகத்தைப் பெறுகிறான்.
தூரத்தில் அவனது தாய் ராசா...ராசா... என கூப்பிடும் சப்தம் கேட்கிறது. ஓடிவரும் சிறுவனை அவனது தாய்... எங்கு போனாய்... ரொம்பதூரம் போகாதே... உன்னை கடத்திக்கொண்டு போய்விடுவார்கள்...இங்கேயே இருந்து எனக்கு உதவி செய்... என்கிறாள். சிறுவன் தன் தாயிடம்... இரயில் எப்படி இருக்கும் அம்மா... என்கிறான்? ... அதனை அவள் விளக்குகிறாள். பிறகு... சிப்பாய்கள் மட்டும்தான் இரயிலில் போக முடியுமா?... என கேட்கிறான். எல்லோரும் இரயிலில் போகலாம்... என அவனது தாய் சொல்ல... குழந்தைகளும் இரயிலில் போகலாமா?... என்கிறான். அதற்கும் ஆமாம்... என்கிறாள். ரயில் எப்ப இங்கு வரும்?... என அப்பாவியாக கேட்கிறான். ரயிலெல்லாம் இனிமேல் வராது...என அவனது தாய் கூறுகிறாள். சிறுவன் இரயிலைப் பற்றி கனவு காண்கிறான். அதனை சுவற்றில் கிறுக்குகிறான். இதனை பார்க்கும் அவனது தாய்... இரயிலெல்லாம் இங்கு வராதுன்னு சொன்னேன்ல... என அவனை கண்டிக்கிறாள்.
சிறுவன் ஏக்கத்துடன் அந்த பகுதியில் குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட இரயில் பாதையில் நடக்கத் தொடங்குகிறான். சிதைந்த இரயில் நிலையம் ஒன்றினை அடையும் அவன் அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவ வீரனால் துரத்தியடிக்கப்படுகிறான். அங்கிருந்து செல்லும் அவன் இரயில் பாதையில் கைவிடப்பட்ட இராணுவ வீரனின் பழைய காலணி ஒன்றை கண்டெடுக்கிறான். அதனை சிறிது தூரத்திற்கு எடுத்துச் செல்லும் அவன் அங்கிருக்கும் சிதைந்த இரயில் பாலத்தில் ஏறி கீழே ஆற்றில் வீசியெறிகிறான். பின்பு இரயில் பற்றிய மாயக் கனவோடு கையில் பூ ஒன்றை பறித்துக்கொண்டு வீடு திறும்புகிறான். வழியில் அவனுக்கு முன்பு சில விடுதலைப் போராளிகள் தென்படுகின்றனர். அவர்களைக் கண்டதும் அவன் அச்சத்தில் உறைகிறான். சிறுதுநேரத்திற்கு பின்பு அமைதி நிலவ, சிறுவனின் தாய் அவனை காணாது தேடிக்கொண்டு வருகிறாள். அந்த சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் இந்த குறும்படத்தின் மீதிக்கதை.
ஒரு இனத்திற்கும் அந்த இனத்தை சேர்ந்த அடுத்த தலைமுறையின் சுதந்திர வாழ்விற்காகவும் புரட்சி, போராட்டம், யுத்தம் போன்றவை தொடங்கப்படுகிறது. ஆனால் அதன் முடிவில் அதனை அனுபவிக்க யாரும் இல்லாதுபோகும் நிலை வரும்போது அனைத்தும் அர்த்தமற்றவையாக அந்த சிறுவன் கானும் இரயில் பற்றிய மாயக் கனவு போல மாறிவிடுகிறது. இந்த குறுப்படம் ஒரு சிறுவனின் இரயில் பற்றிய ஏக்கத்தோடு, ஒரு நாட்டின் யுத்தத்தால் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையும், குழந்தைகள் எவ்வாறு தங்களது குழந்தைப் பருவத்தை இழந்து நிற்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
Dumriya Enathuru
(Awaiting a Train)
Written & Direct by - Upali Gamlath
Cinematography - Upali Gamlath
Art - Poorna Jayasiri
Country - Sri Lanka
Language - Sinhala
Year - 2007
(Awaiting a Train)
Written & Direct by - Upali Gamlath
Cinematography - Upali Gamlath
Art - Poorna Jayasiri
Country - Sri Lanka
Language - Sinhala
Year - 2007