நானும் உன் பொல்லாத நினைவுகளும்.







இதிலிருக்கும் ஒவ்வொரு கிறுக்கல்களிலும் நினைவு என்ற வார்த்தை வருமாறு கிறுக்கியது. அதாவது நினைவு வரவேண்டும் என்று நினைத்து கிறுக்கியது.


எலிபோல்
உருண்டோடி விளையாடும்
உன் நினைவுகளை
பூனைபோல்
பின்தொடர்கிறது
என் பின்னிரவு
விழிப்புகள்.
 

இதற்குமேல்
இன்னும் எத்தனை தூரம்?
ஒரு கை 
பார்த்துவிடுகிறேன். 
உன் 
நினைவு விரல்கள்
பிடித்தபடி.
 

காலமெனும் 
யாசகத் தட்டில் விழும்
உன் நினைவுச் சில்லரைகளை
தொட்டு
தடவி
எண்ணி
சரிபார்த்து
பத்திரப்படுத்தி
வைத்துக்கொள்கிறது
இந்த குருட்டு காதல்.
 

தலைகோதும்
உன் நினைவு விரல்களின்
ஸ்பரிசத்தில்
சற்றுமுன்புதான் 
உறங்கியது
நம் காதல்.
 

கரித்தூண்டு
சாக்குக்கட்டி
முனை மழுங்கிய
பெல்சிலில்
கிறுக்கியிருந்தால்
ஒரு நொடியில் அழித்திருப்பேன்
உன் நினைவுகளை
பாழாய்போன மனது
பச்சையல்லவா
குத்தியிருக்கிறது.
 

ஒட்ட வெட்டியிருந்தேன்
உன் நினைவுகள் 
பூக்கும் மரத்தை
நேற்றிரவு பெய்த மழையில்
லேசாக
துளிர்விட்டிருக்கிறது.
 

கழுத்தை இறுக்கி
பற்றிக்கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
திருவிழா குழந்தையென
உன் நினைவுகள்
இறங்கவே அடம்பிடிக்கிறது
சரி..வா...
என் தனிமையை
சுற்றிக் காட்டுகிறேன்.
 

ஒற்றை மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில்
உனக்காக காத்திருந்துவிட்டு
தற்போதுதான்
உறங்கச் சென்றது
என் இரவு
நினைவுகளை
இ.....ழுத்து
போர்த்தியபடி.
 

பகல் முழுவதும்
சிறகடித்து பறந்து
அலைந்து திரிந்து
இரவானதும்
கூட்டிற்கு திரும்புகிறது
உன் நினைவு என்னும்
சிறிய பறவை.
 

வலிகளுக்கும்
நினைவுகளுக்கும் 
இடையில்
...
...
...
சற்று இடைவெளிவிட்டு
அமர்ந்துகொ(ல்)ள்.
 

சன்னலோர இருக்கை
கிடைக்கும் தருணங்களில்
யார் அமர்வதென
சிறுபிள்ளையாக
சண்டையிட்டுக் கொள்கிறோம்
நானும் 
உன் பொல்லாத நினைவுகளும்.