சாமியார்.

டவுளைப் பற்றி கதை எழுதப்போய் வம்பில் மாட்டிக்கொண்டதுதான் மிச்சம். அதிலும் குறிப்பாக பிரைவேட் லிமிட்டேட் சாமியார்களின் சிஷ்ய கோடிகள் அடியேனை வறுத்தெடுத்துவிட்டார்கள். பற்றாக்குறைக்கு சாபம் வேறு. நல்லவேளை வரங்களைப் போலவே சாபங்களும் பலிப்பதில்லை. அவர்கள் மீது கோபம் எதுவும் எழாமல் அதற்கு பதிலாக அடுத்த கதைக்கான அழகிய தலைப்பு ஒன்று கிடைத்தது. ஆமாம் அவர்களின் புண்ணியத்தில் கிடைத்த இந்த கதையின் தலைப்பு சாமியார்.
சாமியார் யார்?...


வாழ்வில் உள்ள பிணைப்புகளை துறக்கும் செயல் துறவறம். அதை மேற்கொண்டவர்கள் முனிவர்கள் அல்லது துறவிகள் அல்லது நவீன யுகத்தில் சாமியார்கள். அப்படி என்றால் பந்தம் - பாசம், சொத்து - பத்து, ஆடை - அலங்காரம், காதல் - காமம் (double binding) என சுற்றி இருப்பதையெல்லாம் துறந்தால் சாமியார் ஆகிவிட முடியுமா? என்றால் நிச்சையம் முடியாது. ஒருவனது வாழ்வின் பிணைப்புகள் அவனது நானில் கட்டப்பட்டிருக்கிறது. எவன் ஒருவன் தன்னிடமிருக்கும் பிணைப்புகளோடு சேர்த்து அந்த நானையும் அறுத்தெறிகிறானோ அவனே துறவறத்திற்கு பொருத்தமானவனாகிறான்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

இது வள்ளுவரின் வாக்கு. அவரிடம் இல்லாத மேற்கோள்களே இல்லை எனலாம். அனால் தற்போது அவரையும்

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

என்பதை உணராமல் வம்பிழுத்து வச்சி செய்வது காலக் கொடுமை.

சரி! இந்த நானை எப்படி அறுத்தெறிவது? நிஜ சாமியார் யார்? கதைக்கு செல்வோம் வாருங்கள்.

ஒரு திருடன் நள்ளிரவு நேரத்தில் திருடுவதற்காக அரண்மனைக்கு சென்றான். காவல் காப்பவர்கள் உட்பட அனைவரும் தூங்கிக்கொண்டிருக்க அந்தப்புரத்தில் யாரோ இருவர் பேசிக்கொண்டிருப்பது அவனுக்கு கேட்டது. திருடன் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை கேட்டான்.

அந்த நாட்டின் ராஜாவும் ராணியும் தங்களது மகளின் திருமணத்தைப் பற்றிதான் அந்த நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தனர். என்னதான் ரா-ரா ஆனாலும் எல்லோரையும் போல பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கவலை அவர்களுக்கும் இருந்தது.

இந்த ராஜா வாழ்க்கை சலிப்புத் தட்டிவிட்டது...அதனால் பதவி, ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் இல்லாத ஆசையில்லாத ஒருவனுக்கே நம்ம மகளை கட்டிக் கொடுக்கலாம் என நினைக்கிறேன்... நீ என்ன நினைக்கிற... என்றார் ராஜா.

ராணி அதற்கு தலையாட்டினாலும், ஆசையில்லாத ஒருவனை, அதிலும் ராஜ வாழ்க்கு இணங்காத ஒருவனை கண்டுபிடிப்பது எப்படி? என அவரிடம் கேட்டார்.

அதற்கு ராஜா...ஏன் இல்லை! முனிவர்கள், சாமியார்கள் எல்லாம் ஆசையை துறந்தவர்கள்தான். ஆகையால் அதில் ஒருவரை தேர்தெடுத்து நமது மகளை திருமணம் செய்துகொடுப்போம். விடிந்ததும் அத்தகைய ஒருவரை தேடச் சொல்லி கட்டளையிடுவோம் என்றார்.
இவர்களது பேச்சை ஒட்டுக்கேட்ட திருடனுக்கு புதுவித யோசனை தோன்றியது. எவ்வளவு காலம்தான் திருடனா தலைமறைவாக சுற்றுவது, அதற்கு பதிலாக சாமியாராக வேடமிட்டு, இளவரசியை திருமணம் செய்துகொண்டு, மிச்ச காலத்தை ராஜ போகமாக ஓட்டினால் என்ன?... என அவன் திட்டம் தீட்டினான். அதன்படி விடிந்ததும் ஒரு நிஜ சாமியாரைப் போல அச்சு அசலாக வேடமிட்டு ஊருக்கு வெளியிலிருக்கும் ஆற்றங்கரை மரத்தடியில் தவம் செய்வதைப்போல காத்திருத்தான்.

அந்த நேரத்தில் அரண்மனை காவலர்கள் இருவர் சாமியார் வேடமிட்டிருந்த திருடனை நோக்கி வந்தனர். அவர்கள் திருடனுக்கு மிகவும் பரிச்சியமானவர்கள். பலமுறை அவர்கள் துரத்த அவன் ஓட, அவன் ஓட அவர்கள் துரத்த நிகழ்ந்திருக்கிறது. இருந்தாலும் திருடன் தற்போது சாமியார் வேடத்தில் இருந்ததால் அவனை காவலர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. திருடனிடம் வந்த அவர்கள் அவனை வணங்கி அரண்மனைக்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். திருடன் அதற்கு எதுவும் பேசாமல் தியானம் செய்வது போல பாசாங்கு செய்து நடிப்பை இன்னும் மெருகூட்டினான். அதைவிட காவலர்கள் இருவரும் அவனை பவ்யமாக வணங்கி கெஞ்சுவது திருடனுக்கு பேரானந்தமாக இருந்தது.

காத்திருந்த காவலர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து செல்ல, சிறிது நேரத்திற்கு பின்பு ஒரு பெரும் படையே திருடன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தது. அதனை பார்த்ததும் திருடனுக்கு உள்ளுக்குள் சற்று உதறல் எடுக்கத் தொடங்கியது. இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான். அந்த படையில் நாட்டின் தளபதியும் வந்திருந்தார். அவரும் திருடனை வணங்கி அரண்மனைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். அந்த இடத்தில் மக்கள் கூட்டமும் கூடியது. கூட்டம் கூடுவதைப் பற்றி சொல்லவா வேண்டும். கூட்டத்திலிருந்த மக்களும் இந்த புது சாமியாரை வணங்கிச் சென்றபடி இருந்தனர்.

நேரம் கடந்தது அந்த நாட்டின் அமைச்சரும் வந்து சேர்ந்தார். அவரும் திருடனின் காலில் விழுந்து ஆசிபெற்று... அய்யா! தங்கள் பாதம் பட என்ன தவம் செய்தோம், அரண்மனைக்கு வாருங்கள்... என அழைத்தார்.

ஏதோ தெரியாத்தனமாக சாமியார் வேடமிட்டு இளவரசியை திருமணம் செய்து வாழலாம் என நினைத்திருந்த திருடனுக்கு தன்னை சுற்றியிருக்கும் கூட்டத்தை கண்டதும் பயம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. மூச்சு பேச்சு இல்லாமல் எதற்கும் அசையாமல் இருந்த அவன், சிக்கினால் சோலி சுத்தம், கூட்டம் கலைந்ததும் ஓடிவிட வேண்டும் என நினைத்தான். அவன் நினைத்த வேளையில் ராஜாவும் ராணியும் கடைசியாக அங்கு வந்து சேர்தனர்.

ஊரே ஒருவனின் காலில் விழும்போது ராஜா விழமாட்டாரா என்ன?. அவரும் திருடனின் காலில் விழுந்தார். தனது பதவியும் ராஜ்ஜியமும் செல்வமும் தனது மகளும் தங்களுக்கே அர்ப்பணம் தயவு செய்து அரண்மனைக்கு வந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என தான் வந்த நோக்கத்தை திருடனிடம் தெரிவித்தார்.

திருடனுக்கு தெரிந்த விசயம்தான். ஆனாலும் அவன் ராஜாவின் வேண்டுதலுக்கும் எதுவும் பேசாமலே இருந்தான். இருட்டத் தொடங்கியது. அனைவரும் அங்கிருந்து சென்றனர். அப்பாடா! தப்பித்தோம் பிழைத்தோம் என திருடன் சாமியார் வேடத்தை கலைத்துவிட்டு வழக்கமாக தான் போகும் திருட்டு தொழிலுக்கு புறப்பட்டு சென்றான்.

திருடச் சென்ற இடத்தில் அவனுக்கு மனம் ஒட்டவில்லை. காலையில் நிகழ்ந்ததை கொஞ்சம் நினைவுபடுத்தி பார்த்தான். ஒரு நாட்டின் காவலர்களும், படைத்தளபதியும், அமைச்சரும், ராஜாவும் ராணியும் என அனைவரும் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தும் அளவிற்கு ஒரு சாமியாருக்கு இருக்கும் மதிப்பை அவன் உணர்ந்தான். இந்த தாக்கம் அவனுக்குள் கொஞ்ச நாட்கள் நீடித்தது. பிறகு தனது திருட்டு தொழிலை கைவிட்டான். துறவு என்பது என்ன என தேடிப்போனான். தன்னிடமிருக்கும் திருடன் என்ற நானை அறுத்தெரிந்தான். பின்நாட்களில் ஒரு நிஜ சாமியாரகவே மாறினான்.

இது ஒரு திருடன் சாமியாரான கதை. அடுத்து ஒரு சாமியார் திருடனனான கதை சொல்லட்டுமா?

அட!... உங்களுக்கு தெரியாத சாமியார் திருடன் கதையா என்ன?