ஜப்பானிய கட்டிடக்கலை.

ழைப்பு, தன்னம்பிக்கை மட்டுமல்லாமல் தங்களுடைய மரபுகளை கட்டிக்காப்பதிலும் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள். நவீனமும் மேற்கத்திய கலாச்சாரமும் ஒருபக்கம் அழுத்தம் கொடுத்தாலும் தங்களுடைய வாழ்க்கை முறையில் பழமையான மரபுகளை அவர்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். இதற்கு அவர்களின் கட்டிடக்கலையை குறிப்பிட்டு சொல்லலாம். சுனாமி மற்றும் நிலநடுக்கங்களின் அபாயத்தை உணர்ந்து புதிய தொழில்நுட்பத்தில் உலகமே வியக்கும் அளவிற்கு அவர்களின் கட்டிடங்கள் இருந்தாலும் அந்த கட்டிடங்களில் நம் கண்ணுக்கு தெரியாத சில ஜப்பானிய மரபுகள் ஒளிந்திருக்கின்றன. அத்தகைய மரபுகளை கொண்ட நவீன ஜப்பானிய கட்டிடக்கலையைப் பற்றி இந்த டாகுமெண்டரி அலசி ஆராய்கிறது.


கொச்சு என்பதற்கு ஜாடி என்று பொருள். ஜப்பானிய கட்டிடக்கலையில் அங்கமான இது சிறிய இடத்தில் ஒரு தனி பிரபஞ்சம் என்ற தோற்றத்தை உருவாக்குவதாக இருக்கிறது. அதாவது இந்தகைய கட்டிடக்கலையில் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களின் வேறுபாட்டை குறைத்தல், சமச்சீரை மாற்றுதல், சுவர்கள், தரைகள் போன்றவற்றின் கட்டுமானத்தை சீர்செய்தல், மரங்களை வெகுவாக பயன்படுத்துதல், காற்று, நீர், ஒளி என இயற்கையோடு இணைதல் என்பதை கொண்டதாக இருக்கிறது. அவற்றிற்கு சாட்சியாக ஜப்பானில் இருக்கும் புகழ்பெற்ற கட்டிடங்களான இம்பீரியல் கட்சுரா அரண்மனை, டோடாய் ஜி கோவில், நவோஷிமா அருங்காட்சியகம், சோனி டவர் மற்றும் சில ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவை விளங்குகின்றன. அத்தகைய கட்டிடக்கலை அமைப்பை பற்றியும் அது எவ்வாறு மேற்கண்ட கட்டிடங்களோடும் பழமையான நோர்டிக் கட்டிட அமைப்புமுறையோடும் தொடர்புடையதாக இருக்கிறது என்பதனைப் பற்றியும், ஜப்பானின் முன்னணி கட்டிடக்கலைஞர் சிலருடன் தடாவோ ஆண்டோ, ஸ்வெரே பென், டோயோ இடோ, கஸுவோ ஷினோஹாரா, கிரிஸ்டியன் குல்லிசென், ஜுஹானி பல்லாஸ்மா போன்ற உலக புகழ்பெற்ற ஆய்வாளர்களின் நேர்காணலுடன் இந்த டாகுமெண்டரி நமக்கு அழகாக காட்டுகிறது.


இந்த உலகை கான்கிரீட் காடுகளாக மாற்றி, அந்த காடுகளுக்குள் ஒரு தீப்பெட்டி அளவிற்கான இடத்தில் ஜெர்ரி எலியைப்போல இருந்துகொண்டு, டாம் பூனைக்கு தண்ணிகாட்டி வாழும் நமக்கு வசிப்பிடத்தின் அருமையையும், அதன் சூழல் அமைப்பு முறையும், மறந்துபோன நமது பாரம்பரிய மரபுகளையும் இந்த டாகுமெண்டரி உணர்த்துகிறது.



📎
Kochuu
Written & Directed by - Jasper Wachtmeister
Music - Benny Nilsen
Cinematography - Askild Edvardsen
Visual Effect - Rickard Anlback
Country - Sweden
Language - Swedish, Japanese,  Finnish
Year - 2003