பயங்கரவாதி என புனையப்பட்டேன்.

1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் புகழ்பெற்ற சோனாபேட், ரோதத் ஆகிய நகரங்களில் இருக்கும் பஜார்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் பலர் உயிரிழந்தனர். வழக்கம்போல இந்திய அரசு இது பாகிஸ்தானின் சதிவேலை என கர்ஜித்தது. வழக்கம்போல சந்தேகத்தின் பேரில் இரண்டு காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டனர். பிரதமர் கோபமாக டிவியில் தோன்றினார். உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தது. பிறகு இந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியாவில் செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பு உள்ளேன் அய்யா என பொறுப்பேற்றது. ஆனால் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு காஷ்மீரிகளின் கதி என்ன? என இதுவரை யாருக்குமே தெரியாது.


இதுவும் கடந்துபோகும் என்ற இயற்கையின் விதிப்படி இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அனைவரும் மறந்திருக்க இது நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் பழைய டெல்லியில் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் மசூதிக்கு இரவு தொழுகைக்காக சென்று திரும்பிய 19 வயது நிரம்பாத மொகமது ஆமிர் கான் என்ற இளைஞன் கடத்தப்பட்டார். அவரை கடத்தியது இந்திய உளவுத்துறையும் வெளி மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை விசாரிக்கும் பிரிவும் ஆகும். கடத்தப்பட்ட ஆமிர் கான் எட்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டார். வன்கொடுமைக்கும் வதைகளுக்கும் ஆளான அவரிடமிருந்து 150 வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. பற்றாக்குறைக்கு நாட்குறிப்பு என போலியாக அதிகாரிகள் கூறிய கதையும் எழுதி வாங்கப்பட்டது. கடைசியில் 19 குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவன் எனவும், பாகிஸ்தான் உளவாளி எனவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறை வாழ்க்கை அவருக்கு மனித நேயம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் இவற்றை கற்றுத் தந்தது. அதைவிட இந்த நாட்டில் - இந்திய நாட்டில் சிறுபான்மை இன மக்களின் வாழ்க்கை எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதையும் சிறை அவருக்கு போதித்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் அவர் தன் வாழ்க்கையை சிறையில் கழித்தார். தனக்கு என்ன நிகழ்கிறது என தெரியாமல் சிறைக்குள் சென்ற அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தன்மீது போடப்பட்ட பொய் வழக்குகளிலிருந்து தனது குற்றமற்ற தன்மையை நிரூபித்து பின்னர் விடுதலையானார்.


சிறையிலிருந்து வெளிவந்த அவருக்கு வாழ்க்கை எளிதானதாக அமையவில்லை. அவர் வெளிவந்தபோது அவரது உலகம் வெகுவாக மாறியிருந்தது. அவரது விடுதலைக்காக போராடிய அவரது தந்தை இறந்திருந்தார். தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கியிருந்தார். அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டிருந்தன. சமுதாயமும் அவரை ஒதுக்கி வைக்கத் தொடங்கியிருந்தது. இருந்தும் அவர் தனது வாழ்க்கையை வாழ தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் தன்னைப்போல ஒடுக்குமுறைக்கு ஆளான சிறுபான்மையினர்களுக்காக போராடத் துணிந்தார். இன்று அவர் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள், கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், எல்ஜிபிடி, விளிம்பு நிலை மக்கள் இவர்களின் உரிமைகளின் அங்கமாக இருக்கிறார். இந்த புத்தகம் பயங்கரவாதி என புனையப்பட்ட அந்த ஆமிர் கானின் தன் வரலாறு ஆகும்.

அன்றைய இரவில் என்னால் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை அலையாக என் கண்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர் இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னை கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச் சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன் என குறிப்பிடும் ஆமிர் கான், பிரபல மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளரான நந்திதா ஹக்ஸருடன் இணைந்து இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழில் அப்பணாசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.


இந்த புத்தகத்தில் அம்மா, அப்பா, அக்கா, தான் வசித்த தெரு, தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, ஹம் ஆப்கே ஹைன் கௌன் இந்தி சினிமா இவையே உலகம் என நம்பியிருந்த அப்பாவி இளைஞன் ஒருவன், எவ்வாறு பயங்கரவாதி என புனையப்பட்டான் என்ற கதை சொல்லப்பட்டிருந்தாலும், அதனூடே தன் மகன் குற்றமற்றவன் என்பதை நிருபிக்க வழக்குகள் நடைபெறும் நாட்களை பேருந்து பயணச்சீட்டுகளின் பின்புறம் குறித்து வைத்துகொண்டு நீதிமன்றங்களின் படிகளில் ஏறியிறங்கி சோர்ந்து ...பேட்டா...மெய்ன் தும்ஹாரி தரீக் பார் நஹி ஆசகா...என வேதனையுடன் இறந்துபோன ஒரு தந்தையின் கதையும் இதில் இருக்கிறது. மேலும் அவருக்குப்பின் ஒரு பெண்ணாக தனது மகனின் விடுதலைக்காக போராடி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மகன் விடுதலையானதும் அவனது வாய்க்கு ருசியாக சமைத்துப்போட நினைத்து செயலற்ற கைகால்களுடன் முடியாமல் தோற்றுப்போன ஒரு தாயின் கதையும் இருக்கிறது. அதுபோல சிறு வயதில் வானம்பாடியாக சுற்றித் திரிந்த ஜோடிக் குருவியில் ஒன்று மட்டும் கூட்டிற்குள் அடைபட, அது எப்போது வெளிவரும் என அதன் நினைவுகளோடு அதற்காகவே காத்திருத்து, அது வெளிவந்ததும் மீண்டும் வானம் அளக்க போராடி அதனுடன் சிறகடித்து புறப்பட்ட ஒரு பெண் குருவியின் காதல் கதையும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.


இந்த புத்தகத்தை சுவரசியமானது, படிக்க நாவல் போல இருக்கிறது, திரைப்படமாக எடுக்கலாமே என்றெல்லாம் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. இன்றைய நிலவரப்படி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் என பலர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களில் எத்தனை பேர் தண்டனை பெற்றார்கள்? அவர்களில் யார் குற்றவாளி? யார் நிரபராதி? அவர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளை இந்த புத்தகம் எழுப்புகிறது. மேலும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களை குற்றவாளி என சித்தரித்து மக்களின் மனதில் பதிவைக்கும் ஊடகங்களின் போக்கையும், சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களை அழிக்க நினைக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டையும், ஜனநாயக நாட்டில் தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்க தனி ஒருவனின் வாய்ப்புகள் எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதையும், இந்திய நீதி அமைப்பின் இருண்ட பக்கங்களையும் இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தவறாமல் வாசித்துப் பாருங்கள். 

Framed as a Terrorist
பயங்கரவாதி என புனையப்பட்டேன்
மொகமது ஆமிர் கான் - நந்திதா ஹக்ஸர்
தமிழில் - அப்பணசாமி
எதிர் வெளியீடு

🔗ஆமிர் கானைப் பற்றிய ஒரு சிறிய டாகுமெண்டரி