முதுமக்கள் தாழி.

கீழடி ஒரு சகாப்தம். இதுவரை நாமறிந்த மனிதகுல வரலாற்றை சற்று மாற்றியமைக்கக் கூடிய தொல்பொருட்கள் அங்கு கிடைத்திருக்கிறது - கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு இதுபோன்ற அகழ்வாராச்சிகளில் கிடைக்கப்பெறும் பழங்கால பொருட்களில் குறிப்பிடத்தக்கது முதுமக்கள் தாழி

பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைக்கப்படும் கலங்கள் ஈமத்தாழிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஈமப்பேழை,  மதமதக்கா பானை, புதைதாழி, பிணத்தாழி, ஆங்கிலத்தில் Jar burial என்ற பெயர்களும் இதற்கு இருக்கிறது. நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்தியதால் அது முதுமக்கள் தாழியானது. 

தாழி என்றால் அகன்ற வாயுடைய பானை என்று பொருள்.


முதியவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள், அவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கை உலகெங்கிலும் இருக்கிறது. அதனை பின்பற்றி அவர்கள் இறந்ததும் நடத்தப்படும் பல்வேறு வகையான இறப்பு சடங்குகளும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த தாழி அடக்க முறை.
இதுவரை அகழ்வாராச்சிகளில் இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாலஸ்தீனம், தைவான், ஜப்பான், கம்போடியா, ஈரான், சிரியா, சுமத்ரா, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், வனாட்டு போன்ற நாடுகளில் முதுமக்கள் தாழிகள் கிடைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் இந்தியாவில் அதுவும் தமிழக பகுதியில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகளே சிறப்பு வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு, மாங்குடி, பல்லாவரம், திருக்கழுகுன்றம் போன்ற இடங்களில் முதுமக்கள் தாழி கிடைத்திருக்கின்றன. இதில் ஆதிச்சநல்லூரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழிகள் கிடைக்க அந்த பகுதி தாழிக்காடு என அழைக்கப்படுகிறது.

தமிழர்களை பொருத்தவரை அவர்களது வாழ்வியலில் மட்பாண்டங்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவற்றிற்கிடையே இன்றுவரை தொடரும் உறவு மகத்தானது. ஆகவே நம் முன்னோர்கள் இத்தகைய இறப்பு சடங்கில் அடக்கம் செய்ய மண்ணால் செய்யப்பட்ட தாழிகளை பயன்படுத்தியிருக்கின்றர். அவைகள் ஒரு மனிதன் தாயின் கர்ப்பப்பையிலிருந்து பிறக்கிறான் என்பதை நினைவுபடுத்த அந்த கர்ப்பப்பையின் வடிவத்தை கொண்டவையாக இருக்கின்றன.

நம் முன்னோர்களின் இந்தகைய தாழி அடக்க முறையில் மூன்று வகைகள்  இருந்திருக்கின்றன. முதலாவதாக ஒரு பெரிய பானையில் இறந்தவர்களை சம்மணமிட்டு அமர வைத்து அதனை மூடி அப்படியே புதைத்திருக்கிறார்கள். இதில் சாவா?.. எனக்கா?.. எவன் அவன் எமன்?.. என செஞ்சுரி தாண்டி சாக அடம்பிடித்தவர்களை நல்லநாள், நல்லநேரம் பார்த்து சென்ட் ஆஃப் பார்ட்டி கொடுத்து டாட்டா காட்டி உயிருடன் புதைத்ததும் நிகழ்ந்திருக்கிறது.  இரண்டாவதாக இறந்தவர்களின் உடலை வெட்ட வெளியில் கிடத்தி அல்லது மண்ணில் புதைத்து அந்த உடல் அழுகியதும் எஞ்சிய எலும்புத் துண்டுகளை சேகரித்து அதனை பானையில் வைத்து  புதைத்திருக்கிறார்கள். மூன்றாவதாக  இறந்தவர்களை எரியூட்டி சாம்பலை மட்டும் எடுத்து சிறிய பானையிலிட்டு புதைத்திருக்கிறார்கள். இறந்தவர்கள் செல்வச் செழிப்போடுபோடு வாழ்ந்திருந்தால் அவர்களோடு சேர்த்து அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், கருவிகள், தாணியங்கள் இவற்றையும் புதைத்திருக்கிறார். புதைத்த இடத்தில் நடுகள் வைத்து அடையாளப்படுத்தி வணங்கியும் வந்திருக்கிறார். போர் மற்றும் கொடிய நோயில் இறந்தவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் புதைத்ததும் நடந்திருக்கிறது.
   
தாழியிற் பிணங்களுந்தலைப் படவேறுத்தப்
பாழியிற் பிணங்களுந் துளபெழப் படுத்தியே

- இது ஒட்டகூத்தர் பாடிய தக்கயாகப்பரணியில் வருகிறது.

தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை

- இது நச்சினார்க்கினியார் எழுதிய தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணை உரை.

சித்த மகிழ்ந் தீனமறச் செங்கோன டாத்த நமன்,
உத்தம னென்றந் நாளுயிர் கொடு போகாமையினால்
மொய்த்த முதியோர்க்கு முதுமக்கட்ச்சாடி பல
வைத்த குலதீரனே மன்னர்கோ மன்னர்கோ

- என்ற திருவெண்காட்டு புராணம் சோழ மன்னன் ஒருவன் முதியவர்களை சாடியிலிட்டு புதைப்பதற்கு உதவியதாக (ஒருவகையில் கருணைக் கொலை) ஆவணப்படுத்துகிறது. இவற்றைவிட ஐயூர் முடவனார் இயற்றிய புறநானூற்று பாடல் ஒன்றின் மூலம் சங்ககாலத்திலேயே இத்தகைய இறப்பு சடங்கு இருந்திருக்கிறது என்பதனையும், முதுமக்கள் தாழியினைப் பற்றியும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். 

அந்த பாடல்.


கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கா குவைகொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
விரிகதிர் ஞாயிறு விசும்புஇவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

பொருள்:

மட்பாண்டம் செய்யும் குயவனே! மட்பாண்டம் செய்யும் குயவனே! அகன்ற பெரிய ஆகாயத்தில் இருள் திரண்டதுபோல பெருமளவில் புகை வெளியிடும் சூளையை உடைய பழைய ஊரில் மட்பாண்டம் செய்யும் குயவனே! கிள்ளிவளவன் நிலமெல்லாம் பரந்துவிரிந்த பெரும் படையை உடையவன். புலவர்கள் பலரால் பாடப்பெற்ற பொய்யில்லாத நல்ல புகழை உடையவன். விரிந்த கதிர்களையுடைய சூரியன் தொலைதூரத்தில் வானில் விளங்குவதைப் போன்று இருக்கும் சோழர் குலத்தின் வழித்தோன்றலான அவன் கொடி அசைந்தாடும் யானைகளை கொண்டவன். அவன் தேவலோகம் சென்றான். அவனை அடக்கம் செய்வதற்கு பெரிய தாழியினை செய்ய நீ விரும்பினாய் என்றால் எப்படிச் செய்வாய்? இந்த பெரிய உலகை சக்கரமாகவும், இமயமலையை மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்த தாழியைச் செய்ய முடியுமா? அதை செய்வதற்கு நீ என்ன பாடுபடுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.


சோழ மன்னர்களில் ஒருவன்  கிள்ளிவளவன். இந்த கிங் கிள்ளியைப்பற்றி முன்னரே பார்த்திருக்கிறோம். அந்த கிள்ளிவளவன் போரில் இறந்ததும் அதனை அறிந்து அவன் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் வருத்தத்துடன் பல பாடல்களை இயற்றியுள்ளனர். ஐயூர் முடவனார் தன் பங்கிற்கு இயற்றிய பாடல்தான் இது. மேலும் இதே போன்று தொடங்கும் மற்றொரு புறநானூற்று பாடலும் முதுமக்கள் தாழியினைப் பற்றி நமக்கு தெரிவிக்கிறது. அந்த பாடலில் ஒரு பெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருக்கிறாள். வழியில் அவளது கணவன் இறந்துவிடுகிறான். அவனை புதைப்பதற்கு தாழியினை செய்யும் குயவனிடன் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு வந்த பல்லியைப் போல கணவனுடன் இதுவரை ஒட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். தற்போது அவன் இறந்துவிட்டான். ஆகவே அவனுக்கு செய்யும் தாழியை அவனோடு சேர்ந்து நானும் அடங்கும் அளவிற்கு பெரிதாக செய்வாயாக என பாடுகிறாள்.

அந்த பாடல்.


கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

பொருள்:

மட்பாண்டம் செய்யும் குயவனே! மட்பாண்டம் செய்யும் குயவனே! இந்த பெரிய நிலத்தில், பெரிய இடங்களையுடைய பெரிய ஊரில்
மட்பாண்டம் செய்யும் குயவனே! வண்டியின் அச்சுடன் பொருந்திய ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லியைப் போல, என் கணவனுடன் பல வழிகளையும் (பல வலிகள் என்பதும் பொருத்தமாக இருக்கும்) கடந்து வந்த எனக்கும் சேர்த்து அருள் கூர்ந்து பெரிய தாழி ஒன்றைச் செய்வாயோ!


இவ்விரு பாடல்களும் தாழி அடக்கமுறை சங்ககாலத்தில் இருந்ததற்கு ஆதாரமாக இருக்கின்றன. இதுவரை நமக்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றன. அதில் இருந்த எலும்புகளும் பிற பொருட்களும் பல்லாயிரம் வருடங்கள் பழமையானது என நிருபிக்கப் பட்டிருக்கின்றன. முதுமக்கள் தாழி என்பவை நம் முன்னோர்களின் இறப்பு சடங்கின் அடையாளம் மட்டுமல்ல நம் ஆதிமூலத்தை தன்னகத்தே கொண்டதாகும்.