லடாக்கிலிருந்து கவிழும் நிழல்.

நீங்கள் இயந்திரங்களுக்கு எதிரியா? என கேட்டபோது தன்னிடம் இருந்த ராட்டையை சுட்டிக்காட்டி நான் இயந்திரங்களை நம்பவில்லை என்று சொல்வது மிகவும் தவறு. இந்த சுழல் சக்கரம் அழகான ஒரு இயந்திரம் என சொன்னவர் மகாத்மா காந்தி. அவர் தனது பார்வையில் மக்களை சோம்பேறியாக, சுயநலவாதியாக, பேராசை பிடித்தவர்களாக மாற்றாத இயந்திரங்களே தேவையெனக் கருதினார். அதனால்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் கொண்டுவந்த தொழில்துறை வாழ்க்கைக்கும் காந்தி தனது நாட்டு மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று விரும்பிய மிக எளிமையான கிராமப்புற வாழ்க்கைக்கும் ஒரு பெரிய வேறுபாடே இருந்தது. ஆனாலும் காந்தி தனது கொள்கையின் பிடிமானத்தில் தற்சாற்பு கொள்கையைக் கொண்ட கிராமங்களை உருவாக்க முயன்றார். அப்படி காந்தியின் மறைவிற்கு பின்பு அவரது கொள்கையின்படி இருக்கும் ஒரு கிராமத்திற்கும் அதன் அருகிலிருக்கும் இரும்பு ஆலைக்கும் இடையில், அதாவது ஒரு பழமைவாதியின் சமூக அறத்திற்கும் சுதந்திரமடைந்த ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையில் நிகழும் மோதலையும் முரண்பாட்டையும் இந்த நாவல் தாங்கியிருக்கிறது. 


இந்திய கிராமப்புற வாழ்வை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்துவரும் சத்தியஜித் என்னும் காந்தியவாதியை தலைமையாகக் கொண்டிருக்கிறது ஒரு கிராமம். காந்தியின் கொள்கையின் அடிப்படையில் தற்சாற்பு நிலையிலிருக்கும் அந்த காந்திகிராமத்திற்கு அருகில் ஒரு இரும்பு ஆலை செயல்படுகிறது. நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் இரும்பு உற்பத்தியினை அதிகரிக்க இரும்பு ஆலையை விரிவுபடுத்தும் பணி தொடங்குகிறது. அந்த ஆலையின் வளர்ச்சிக்கு தடையாக காந்திகிராமம் இருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் பயிற்சி பெற்று இளம் வயதிலேயே திறமை மிகுந்தவராக அறியப்படும் பாஸ்கர் என்பவர் அந்த இரும்பு ஆலைக்கு தலைமை பொறியாளராக நியமிக்கப்படுகிறார். காந்திகிராமத்தை காலிசெய்து ஆலையை விரிவாக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. அதுபோல தான் இதுவரை கட்டிக்காத்த காத்திகிராமத்தை காக்கும் பொறுப்பு சத்யஜித்திற்கு ஏற்படுகிறது. பாஸ்கர் திறமையானவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அதைவிட சத்யஜித் காந்தியைப் போலவே திடகாத்திரமானவராக இருக்கிறார். இந்நிலையில் தனது நிழலைப் போல காந்தியக் கொள்கையின் படி வாழ்ந்துவரும் சத்யஜித்தின் மகள் சுமிதாவின் மீது பாஸ்கருக்கு காதல் ஏற்படுகிறது. சுமிதாவும் தனது இளம் வயது கனவுகளோடு பாஸ்கரிடம் அதித அன்பை வெளிப்படுத்துகிறார். பாஸ்கருக்கு ஆலையை விரிவுபடுத்தும் பொறுப்புடன் சுமிதாவை கரம் பிடிக்கும் காதலும் கூடுதல் சுமையாகிறது. சத்யஜித்திற்கு தனது கிராமம் பரிபோகும்நிலை மட்டுமல்லாது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அப்போது தொடங்கும் போர் பதற்றமும் அதன் எதிரொலியாக இந்திய சீன எல்லையான லடாக்கில் கவிழ்ந்த நிழலின் அச்சமும் தொற்றிக்கொள்கிறது. இந்நிலையில் போரின் நிலவரம் என்ன? தொழில்சாலை விரிவாக்கத்தால்  காந்திகிராம் அழிந்ததா? பாஸ்கர் சுமிதாவை கரம் பிடித்தாரா? சத்யஜித் அல்லது பாஸ்கர் இதில் யார் வெற்றிபெற்றார்கள்? தொழில்நுட்ப வளர்ச்சியா காந்திய அறமா இதில் இறுதியில் எது நிலைத்து நின்றது? என்பதுதான் இந்த நாவலின் கதை.

"லடாக், அது காஷ்மீரின் அங்கமல்லவா?" சுமிதா எதிரொலித்தாள். புவியியல் புத்தகங்களில் அதனைத் தேடியிருந்தாள், ஆனால் லடாக் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. முக்கியத்துவமற்ற இருண்ட பிரதேசம், இப்போது வலுவான ஒளிப் புள்ளியில் சிக்கியுள்ளது!

இந்த நாவல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான யுத்தத்தை பின்புலமாக கொண்டிருக்கிறது. ஒரு காந்திகிராமம், அதன் அருகிலிருக்கும் இரும்பு ஆலை (எஃகு ஆலை), பிற்பகுதியில் டெல்லியின் சில இடங்கள் இவைகளே நாவலின் கதைக்களம். காந்தியவாதியான சத்யஜித், அவரது மனைவி சுருச்சி, மகள் சுமிதா, இரும்பு ஆலையின் தலைமை பொறியாளர் பாஸ்கர், அவரது உதவியாளர் திருமதி மெஹ்ரா மற்றும் ரூபா என மேலும் சிலரே நாவலின் கதைமாந்தர்கள். அவர்களில் யாரேனும் ஒருவரோ அல்லது சிந்தனைகளால் நாவல் முழுவதும் உலாவரும் காந்தியோ இந்த புத்தகத்தை வாசித்த பின்பு நமக்கு அருகிலிருப்பதைப் போல உணரலாம்.

இந்திய ஆங்கில நாவலாசிரியரான சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பபானி பட்டாச்சார்யா என்பவர் இந்த நாவலை எழுதியிருக்கிறார். பீகாரில் உள்ள பாஹால்பூரில் பிறந்த இவர் காந்தியின் சிந்தனைகளாலும் தாகூரின் தத்துவங்களாலும் ஈர்க்கப்பட்டவர். அதன் தாக்கத்தை அவரது படைப்புகள் அனைத்திலும் காணலாம். இந்த நாவல்  அந்தகைய தாக்கத்தை முழுவதுமாக தாங்கியிருக்கிறது. ஒரு திரைப்படத்தின் காட்சிகளை கண்முன் நிறுத்துவதைப் போல வெகு இயல்பான நடையில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமாவில் பீரியட்ஸ் பிலிம் என சொல்லக்கூடிய ஒரு அருமையான திரைப்படத்திற்கு உரிய இந்த கதையை ஏன் யாரும் இதுவரை சீண்டவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. சா. தேவதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பும் பாராட்டிற் குறியதாகவே இருக்கிறது. தவறாமல் வாசித்துப் பாருங்கள்.

லடாக்கிலிருந்து கவிழும் நிழல்.
பபானி பட்டாச்சார்யா
தமிழில் சா.தேவதாஸ்
சாகித்திய அகாதெமி.