தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.காந்தசாமி.

சாயாவனம், விசாரணை கமிஷன் என்ற இரண்டு நாவல்கள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு பரிச்சயமானவர் சா.கந்தசாமி. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற இவர் பல நாவல்களையும் கட்டுரைகளையும் நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்திருக்கிறார். இவரது சிறுகதைகள் அனைத்தையும் இரண்டு தொகுதிகளாக கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கிறார்கள். தனித்துவமான அந்த சிறுகதைகளை கட்டாயம் வாசிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது தக்கையின் மீது நான்கு கண்கள்.

இந்த சிறுகதை மீன்பிடிக்கும் ஒரு கிழவருக்கும் அவரது தாயில்லாத பேரனுக்கும் இடையிலான உறவை அழகாக சித்தரிக்கிறது. ஒரு சாயலில் கடலும் கிழவனும் கதையின் தாக்கத்தை ஒத்திருக்கிறது.


கழிமுகம் என சொல்லப்படுகிற நீர்ப்பரப்பில் மீன் பிடிப்பதில் மாணிக்கம் என்ற கிழவர் அந்த ஊரிலேயே கில்லாடியாக இருக்கிறார். அவருக்கு வெற்றிலை இடித்து கொடுப்பது, மீன் பிடிக்க உதவுவது என அவரது பேரன் ராமு எல்லாமுமாக இருக்கிறான். தினமும் மீன் பிடிக்க செல்லும் கிழவர் தனது இடத்தை மாற்றிக்கொள்ளாமல் அதையே அதிஷ்டம் என நினைக்கிறார். ஆனால் பேரனோ தினமும் ஒரு இடம் என மாற்றி தூண்டிலைப் போடுகிறான். அதனால் அவனுக்கு மட்டும் மீன்கள் சிக்குகிறது. தினமும் ஒரே இடத்திலேயே மீனுக்காக காத்திருக்கும் கிழவருக்கு இடத்தை மாற்றச் சொல்லி பேரன் அறிவுரை கூறுகிறான். தனது அனுபவத்திற்கே ஆலோசனை சொல்வதா என கிழவர் பேரனை கடிந்து கொள்கிறார். பற்றாகுறைக்கு பேரன் பிடித்த மீனுக்கு மட்டும் தனி ருசியென பாட்டியும் அவள் பங்கிற்கு பாராட்டுகிறாள். இதனால் கிழவருக்கு தனக்கு போட்டியாக மீன் பிடிக்கும் பேரனின் மீது வெறுப்பு வருகிறது. இந்நிலையில் இனப்பெருக்கத்திற்காக பெரிய மீன்கள் கழிமுகத்திற்கு வருகின்றன. அவற்றில் பெரிதான ஒன்றினை பிடித்துவிட வேண்டும் என்பதை கிழவர் சவாலாக ஏற்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் பலிக்காத நிலையில் பேரன் அந்த பெரிய மீனை பிடித்துவிடுகிறான். இதனால் கிழவருக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவில் நுண்ணிய விரிசல் விழுகிறது. அந்த விரிசலை இறந்துபோன தனது மகளின் கடந்தகால நினைவோடும் பேரனின் நிகழ்கால வாழ்வோடும் கிழவர் சரிசெய்ய முயற்சி செய்கிறார்.


தமிழ் சிறுகதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சிறுகதையைக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம்தான் தக்கையின் மீது நான்கு கண்கள். 2005 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலுக்காக இயக்குனர் வசந்த் இந்த குறும்படத்தை இயக்கியிருந்தார். தாத்தாவாக முதல்மரியாதை வீராசாமியும் (அய்யா...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்) பேரனாக ராம் சரவணன் என்ற சிறுவனும் பாட்டியாக விஜயாம்மாளும் இதில் நடித்திருத்தனர். அவர்களது நடிப்பும், பிஜூ விஸ்வநாத்தின் ஒளிப்பதிவும், அரவிந் சங்கரின் இசையும் எல்லாம் இயல்பாக இருக்க இந்த குறும்படம் தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. மூலக்கதையில் இல்லாத தாயத்து சென்டிமென்ட் என்ற ஒன்றை மட்டும் இந்த குறும்படத்தில் இணைத்திருக்கிறார். மற்றபடி சிறுகதையின் தாக்கத்தை இந்த குறும்படம் அப்படியே பிரதிபலிக்கிறது.


Thakkayin meethu nanku kankal
Directed by - Vasanth
Written by - Sa. Kandhasamy
Music - Aravind Shankar
Cinematography - Biju Viswanath
Art - Radhakrishnan Mangalath
Year -2005
Country - India
Language - Tamil