நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது.


நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஜப்பானிய இலக்கியத்தின் பின் நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படுபவர் ஹாருகி முரகாமி (Haruki Muralami). ஜப்பான் இலக்கியங்களை தேடிப்பார்த்தால் அவைகள் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஜப்பானின் கலாச்சார வீழ்ச்சியையும் மனித அவலங்களையும் பின்புலமாக கொண்டிருக்கும். அல்லது ஆன்மிக சிந்தனைகளை பறைசாற்றுவதாக இருக்கும். அதற்கு மாற்றாக முரகாமியின் படைப்புகள் அனைத்தும் ஐரோப்பிய தாக்கத்தில் மரபுசார்ந்த ஒழுக்கங்களை கைவிட்ட மனிதர்களின் இருப்பை தாங்கியிருக்கிறது. அதில் பாலியல் பிரச்சனைகள் முதன்மையாக இருக்கிறது. ஒருவகையில் மனிதனின் இருப்பு பாலியல் வேட்கையாகவே இருக்கிறது. தனது அடையாளங்களை தொலைத்து நவீனமாக மாறும் ஜப்பான் நாடுதான் அவரது கதைகளின் களம்.  அங்கு நிழவிவந்த குடும்ப உறவுகளையும், ஆன்மீக சிந்தனைகளையும், ஒழுக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் மீறிய மனிதர்கள்தான் அவரது கதைமாந்தர்கள். அவர்களின் மீறலால் எழுந்த புதிய தர்மசங்கட நிலைதான் அவரது கதையின் அடித்தளம். சுருக்கமாகச் சொன்னால் நவீன ஜப்பான் இளைஞர்களின் மனம்தான் அவரது எழுத்தின் மையப்புள்ளி.

முரகாமியின் எழுத்துகளை இந்த வடிவம் கொண்டது என அவ்வளவு எளிதாக வரையறுப்பது கடினம். அவரது சில கதைகள் திட்டமிட்டபடி தொடங்கி நேர்கோட்டில் முடிவதாக இருக்கின்றன. சில கதைகளை மனம்போன போக்கில் ஒழுங்கற்ற வடிவமாகவும், சில கதைகளை நடப்பு சம்பவமாகவும், அதீத புனைவாகவும் அமைந்திருக்கின்றன. அதற்கு அவரது புகழ்பெற்ற Norwegian Wood, South of the border West of the sun, Kafka on the Shore போன்ற நாவல்களையும், After the quake, Blind Willow Sleeping Women, The Elephant Vanishes போன்ற சிறுகதை தொகுப்புகளையும் சாட்சியாக கூறலாம்.

முரகாமியின் படைப்புகள் எந்த அளவிற்கு புகழ்பெற்றவையோ அதற்கு ஈடாகவும் விமர்சனத்திற்கும் உட்பட்டவையே. மக்களின் பிரச்சனைகளை முன் வைப்பதேயில்லை என்ற புகார் அவர்மீது எழுந்திருக்கிறது. அதற்கு...நான் காணும் ஜப்பான் அப்படியானதில்லை. இது வீடியோ யுக ஜப்பான். இங்கே ஒவ்வொரு மனிதனும் அன்னியமாக இருக்கிறான். உறவுகள் சிதிலமடைந்து சிதறிக் கிடக்கின்றன. சாப் ஸ்டிக்குகளை வைத்து உணவருந்தும் காலம் மலையேறிவிட்டது. பிஸாவும் பர்கரும் ஜப்பானிய உணவுகள். எந்தப் பெண்ணும் கிமோனா அணிவதில்லை. உறவுகளின் அர்த்தம் மாறிவிட்டன. அதைத்தான் நான் என் எழுத்துகளில் கொண்டுவருகிறேன்... என அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது ஜப்பானுக்கு மட்டுமல்ல மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு அடிபணிந்து முதலாளித்துவ அமைப்பிற்குள் சிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் பொருந்தும் என்பதே உண்மை.  ஒரு எழுத்தாளனுக்கு எந்த வரையறையும் கிடையாது என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.

அத்தகைய முரகாமியின் படைப்புகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலும் அவரது சிறுகதைகளை சிலர் மொழிபெயர்த்து இணையதளத்திலும் சிறுசிறு பத்திரிக்கைகளிலும் வெளியிட்டிருக்கின்றனர். அவ்வாறு வெளியிடப்பட்ட அவரது புகழ்பெற்ற ஆறு கதைகளைத்தான் இந்த புத்தகம் தாங்கியிருக்கிறது.

இன்றைய தினங்களில் எவற்றின் யதார்த்தத்தையாவது நீங்கள் பற்ற முயற்சித்தால், அதனோடு சேர்ந்து முறுக்கப்பட்ட ஏராளமான உதிரிகளும் கூடவே வருகின்றன. ஒளித்து வைத்த விளம்பரம், சந்தேகத்திற்கிடமான தள்ளுபடி கூப்பன்கள், தூக்கியெறிய வேண்டியவை என்று அறிந்திருந்தும் வாங்கி வைத்துக் கொள்கிற பாயின்ட் கார்டுகள், என்ன நிகழ்கிறதென்று அறிந்து கொள்வதற்குமுன் உங்கள் மேல் திணிக்கப்படுகிற விருப்பத் தேர்வுகள்.

இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் முரகாமியின் பல்வேறு சிறுகதை தொகுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அவைகள் முறையே

1. நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது.
2. குடும்ப விவகாராம்
3. என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம். பிற்கால முதலாளித்துவத்தின் ஒரு முன் சரித்திரம்.
4. தேடுதல்
5. ஷினாகவா குரங்கு
6. டோக்கியோவை காப்பாற்றிய தவளை- என்பனவாகும்.

என்னுடைய புத்தகங்கள் வாசகர்களுக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வை தருகின்றன. நிஜ உலகிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தின் உணர்வு.

இதுவும் முரகாமியின் கருத்துதான். அதனை உணரவும், அவரது பிற படைப்புகளை தமிழ் வாசகர்கள் புரிந்துகொள்ளவும், அவரைப்பற்றிய அறிமுகமாகவும் இந்த சிறுகதை தொகுப்பு நிச்சையம் இருக்கும். தவறாமல் வாசித்துப் பாருங்கள்.
நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது.
ஹாருகி முரகாமி
தொகுப்பு: ஜி.குப்புசாமி
வம்சி புக்ஸ்.