படைபலம் - புதியதும் பழையதும்.
சுதந்திர தின நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் பீரங்கிகளும், ஏவுகணைகளும் மற்ற சில இராணுவ தளவாடங்களும் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தன. சிறுவயதிலிருந்து பார்த்துவரும் அதே நிகழ்ச்சி, தலைகள்தான் மாறியிருக்கிறது மற்றவை அப்படியே இருக்கிறது, வேரெந்த சுவாரசியமும் இல்லை என நினைத்தபோது நண்பன் அந்த கேள்வியை கேட்டான்.
பங்காளி எனக்கொரு டவுட்!
இந்த பீரங்கியும் ஏவுகணையும் நிஜமா இல்ல செட்டிங்கா?
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தாலும், பங்காளி இதெல்லாம் நிஜம்தான், போரில் இராணுவத்தில் பயன்படுத்துவது... என்று ஒருவாறு சமாளித்தேன்.
இல்ல.. பலவருஷமா இதையேதான் பாக்குறேன் அப்படியே புதுசா இருக்குதே அதான் கேட்டேன்.. என்றான் அவன்.
ஒவ்வொரு நாடும் தங்களது சுதந்திர தின கொண்டாங்களில் இவ்வாறு தங்களிடமிருக்கும் இராணுவ ஆயுதங்களையெல்லாம் ஊர்வலமாக எடுத்துச்சென்று அணிவகுப்பு நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. அதாவது தங்களின் படைபலத்தை மற்றவர்களுக்கு காட்டும் ஒரு சந்தர்ப்பமாகவே இதனை கருதுகின்றனர். அதிலும் சில நாடுகள் போரடித்தால் போருக்கு தயாரென வாரா வாரம் இத்தகைய அணிவகுப்புகளை நடத்துவதுண்டு. சண்டைக்கு வா பார்த்துக்கொள்ளலாம் என்பது வேறு, சண்டை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்பது வேறு. ஒரு நாட்டின் படைபலத்திற்கு ஆயுதங்கள் அவசியமானது. அதை அரசியலாக, வியாபாரமாக, காட்சிப்பொருளாக, ஒரு மதமாக, பொழுதுபோக்காக இல்லாமல் முறையாக பயன்படுத்துவதும் இன்றியமையாதது.
இந்த நேரத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்தில், பல வருஷமா பார்க்கிறேன் அப்படியே புதுசா இருக்குதே என்ற நண்பனின் சந்தேகத்தில், படைபலத்தை பறைசாற்றும் ஆயுதங்களைப் பற்றிய அசைபோடலில், ஔவையார் இயற்றிய புறநானூற்று பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.
இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.
தொண்டை நாட்டை தொண்டைமான் என்ற அரசன் ஆண்டு வந்தான். (தொண்டை நாடு என்பது தற்போதைய வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களை உள்ளடக்கியது. தொண்டை மண்டலம் என இப்பகுதி சங்ககாலத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது). தன்னிடம் இருக்கும் ஆயுதங்களையெல்லாம் அதிகரித்த அவன் அதன் மூலம் தனக்கு மிகுந்த படைபலம் இருக்கிறதென்று ஆணவம் கொண்டான். அந்த ஆணவத்தில் பக்கத்து நாட்டு அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மீது பகை கொண்டு போர் தொடுக்க தயாரானான். இதனை அறிந்த அதியமான் என்னதான் ஆயுதங்கள் அதிகமாக வைத்திருந்தாலும் தன்னிடம் தொண்டைமான் போரிட்டு தோல்வியடைவது உறுதி என நம்பினான். தற்போதைய சூழலில் போர் வேண்டாம் என்பதாலும், இதனால் அனாவசிய இழப்பு ஏற்படும் என்பதாலும் தனக்கு மிகவும் வேண்டியவரான ஔவையாரை சமாதான பேச்சுவார்த்தைக்காக தொண்டைமானிடம் அவன் அனுப்பி வைத்தான் (பாட்டிவிடு தூது). ஔவையாரும் தொண்டைமானை பார்க்க சென்றார்.
ஔவையாரை வரவேற்ற தொண்டைமான் தன்னிடமிருக்கும் ஆயுதங்களை அவரிடம் காட்ட நினைத்து தனது படைக்கலத்திற்கு கூட்டிச் சென்றான். அங்கிருக்கும் வாள், அம்பு, வேல் போன்ற ஆயுதங்களை பெருமையோடு அவரது பார்வைக்கு வைத்தான் (இராணுவ அணிவகுப்பு). இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ஒரு ஃ க்கும் வைத்தான். அவற்றையெல்லாம் பார்வையிட்ட ஔவையார் அனது ஆனவமிக்க மனதை உணர்ந்து தொண்டைமானின் படைபலத்தை புகழ்வது போல பழித்தும். தனக்கு வேண்டிய அதியமானை பழிப்பது போல புகழ்ந்தும் இந்த பாடலை இயற்றியிருக்கிறார்.
பாடலின் பொருள்:
செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துவிட்டு பிறகு தான் உண்ணத் தொடங்குவதும், அதுவே செல்வம் இல்லாதபோது தான் உண்ணும் உணவை பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய வறிய சுற்றத்தாரின் தலைவனாகிய பெருமைக்குறிய எனது அரசன் அதியமானின் படையில் உள்ள கூர்மையான வேல்கள், பகைவரை குத்தியதால் அதன் பக்கமும் கூர்மையான நுனியும் உடைந்து கொல்லர்களின் உலைக்கு செல்வதும் திரும்புவதுவுமாகவே இருந்துவருகிறது. ஆனால் உன் படைக் கருவிகளான இவைகைள் மயில்தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிமையான திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யப்பட்டு காவல் மிக்க இந்த இடத்தில் பாதுகாப்பாக இருக்கின்றது.
ஔவையார் இந்த பாடலை தூது செல்பவர்கள் அதுவும் பகை கொண்ட ஒரு நாட்டிற்கு தூது செல்பவர் மிக்க கவனத்துடன் இருக்காவிட்டால் அனுமார் வால் கதையாகிவிடும் என்பதை உணர்ந்து, ஒரு நாட்டின் படைபலத்தை பறை சாற்றும் அதன் ஆயுதங்கள் குறைவாக இருந்தாலும் வெறும் காட்சிப் பொருளாக இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்பதை புலவருக்கே உண்டான திறமையில் அழகாக இயற்றியிருக்கார்.


