லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி.

துருக்கியின் வரலாற்றை கெமால் பாஷா இல்லாமல் இல்லாமல் எழுதிவிட முடியாது. கெமால் பாஷாவின் வரலாற்றை லதிஃபே ஹனிம் இல்லாமல் எழுதிவிட முடியாது. லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி.

வரலாற்றில் சாதித்த பெண்மணிகள் இருக்கிறார்கள். வரலாற்றை மாற்றியமைத்த பெண்மணிகள் இருக்கிறார்கள். வரலாற்றால் மறக்கடிக்கப்பட்ட பெண்மணிகளும் இருக்கிறார்கள். இதில் துருக்கியில் வாழ்ந்த லதிஃபே ஹனிம் மூன்றாவது வகையைச் சார்ந்தவர்.


மேலைநாட்டு கலாச்சாரம், பழமைவாதம், லிபரல் சித்தாந்தம், இஸ்லாமிய மதம் என மாறுபட்ட கொள்கைகளை கலந்து ஆசிய ஐரோப்பா கண்டங்களுக்கிடையே இருக்கும் நாடு துருக்கி. பழைய கற்காலத்தில் ஆசிய மைனர் அல்லது அனத்தோலியா என அழைக்கப்பட்ட நிலப்பரப்பில் இருந்த துருக்கி நாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை ஒட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டிருந்தது. முதல் உலகப்போருக்கு பின்பு ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்ரவர்த்தி பதவியிலிருந்து நீக்கப்பட இராணுவ அதிகாரியான ஆட்டாடூர்க் கெமால் பாஷா என்பவரின் ஆளுமைக்கு வந்தது. கெமால் பாஷா மேற்கத்திய கல்வி முறை, பெண் விடுதலை, மதச்சார்பற்ற கொள்கைகளை புகுத்தி  பழமைவாதத்தை தகர்த்து புரட்சி செய்து ஒருங்கிணைந்த துருக்கியை காண முற்பட்டார். பின்நாட்களில் நவீன துருக்கிக்கு அவர் வழிவகுத்தார். அத்தகைய சிறப்பு பெற்ற கெமால் பாஷாவின் மனைவிதான் லதிஃபே ஹனிம்.


லதிஃபே ஹனிம் இஸ்மிரின் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். ஐரோப்பாவில் கல்வி கற்ற அவர், 1922 ஆம் ஆண்டு கிரேக்க படைகளை துருக்கிப்படை துரத்தியடித்த வெற்றிக்கு பின்பு தளபதி கெமால் பாஷாவை தனது நாட்டுப்புற மாளிகையில் முதன்முதலாக சந்தித்தார். நவீன துருக்கியை காணும் கெமால் பாஷாவின் கனவு லதிஃபே ஹனிமுக்கும் இருந்தது. அதன் வழியே ஒருமித்த கருத்து கொண்ட இருவரும் முதலில் உள்ளங்களால் இணைந்தனர். பிறகு முறைப்படி புதுமையாக திருமணம் செய்து கொண்டனர். கெமால் பாஷா ஒரு எடுத்துக்காட்டான கணவனாகவும் எல்லா துறைகளிலும் தன் மனைவிக்கு இருந்த திறமைகளால் மகிழ்ச்சி கொண்டவராகவும் இருந்தார். துருக்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு தன் மனைவியை முன்மாதிரியாக காட்டவும் செய்தார். அவருக்கு இணையாக லதிஃபே ஹனிமும் பல துறைகளில் திறமை கொண்டவராகவும், அவருக்கு பின்பு அவரது பதவிக்கு வரக்கூடிய ஆளுமை மிக்கவராகவும் வளர்ந்தார். ஆனால் சில காலத்திற்கு பிறகு கருத்து பரிமாற்றங்களால் இவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது. கடைசிவரை பிரிந்திருக்கவே வேண்டியிருந்தது. கணவனை பிரியும் ஒவ்வொரு பெண்ணின் மீது இந்த சமூகம் என்னற்ற வீண்பழிகளை கொட்டும். இதற்கு லதிஃபே ஹனிமும் விதிவிலக்கல்ல என அவர்மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அனைத்திற்கும் அவர் அமைதியாகவே இருந்தார். கெமால் பாஷாவின் மறைவுக்கு பிறகும் அவர் ஒதுங்கியே அவர் நினைவுகளோடு வாழ்ந்து மறைந்தார். அந்த லதிஃபே ஹனிம்தான் இந்த புத்தகத்தின் நாயகி. அவரது மறைக்கப்பட்ட வாழ்க்கைதான் இந்த புத்தகத்தின் கருப்பொருள்.


லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவுடன் வாழ்ந்தது வெறும் இரண்டரை வருடங்களே. எனினும் பொருளாதாரம், கல்வி, பெண்ணுரிமை என ஒரு நாட்டை வளப்படுத்தும் கொள்கை சிந்தனைகள் அனைத்தும் இருவருக்கும் ஒத்திருந்தது. அதனையும் தவிர்த்து எதிர்கால துருக்கியப் பெண்களின் முன்மாதிரியாக கெமால் பாஷாவினால் அடையாளம் காட்டப்பட்டவர் லதிஃபே ஹனிம். இருந்தும் இருவரும் ஏன் குறுகிய காலத்தில் பிரிந்தனர்? அவர்களுடைய பிரிவுக்கு என்ன காரணம்? உலக நாடுகளின் பத்திரிக்கைகள் பாராட்டும் அளவிற்கு இருந்த லதிஃபே துருக்கியில் ஏன் அலட்சியம் செய்யப்பட்டார்? அவரைப்பற்றி ஏன் அவதூறுகள் பரப்பப்பட்டன? உலக இஸ்லாமிய பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டியவர் எதற்காக ஒதுங்கிப்போனார்? என அத்தனை கேள்விகளுக்கும் இந்த புத்தகம் விடையளிக்கிறது. 

இந்த புத்தகத்தை மேலோட்டமாக வாசித்தால் எப்படியோ வரவேண்டிய ஒரு பெண்ணின் மறைக்கப்பட்ட வரலாற்று கதையை தெரிந்து கொள்ளலாம். ஆழ்ந்து வாசித்தால் துருக்கியின் வரலாற்றையும் கெமால் பாஷாவின் வாழ்க்கையையும் அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மென்மையான மனதோடு இந்த புத்தகத்தை அனுகினால் இறுதி மூச்சுவரை தன் கணவன்மீது பூட்டி வைத்திருந்த ஒரு பெண்ணின் காதலை புரிந்துகொள்ளலாம். ஆம் இந்த புத்தகம் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல அழகான காதல் கதையும் கூட.

லதிஃபே ஹனிம்
இபெக் சாலிஷ்லர்
தமிழில் - பாபு ராஜேந்திரன்
காலச்சுவடு பதிப்பகம்.