வாசிப்பில் பகுதி- 1.



புத்தகம் அது இல்லாமல் அடியேனின் அன்றாட நகர்வை கடத்த இயலாது. அவ்வாறு வாசிப்பில் ஆழ்ந்திருக்கும் தருணம் புத்தகத்திலிருக்கும் வரிகள் சிலவற்றை அடிக்கோடிட்டோ அல்லது அடைப்புக் குறியிட்டோ சேமித்து வைக்கும் வழக்கம் இருக்கிறது. அத்தகைய ட்டோ வரிகள் சிலவற்றின் தொகுப்புதான் இந்த பகுதி வாசிப்பில்...

📖  அப்பாவின் துப்பாக்கி 
📝 ஹினார் சலீம்

குர்திய வானொலியில் ஒரு கவிதை ஒலித்தது. அக்கவிதை சொர்க்கத்தை விஞ்சும் எங்கள் மலைகளின் அழகையும், எங்கள் டைகிரிஸ், யூப்ரடிஸ் நதிகளில் ஓடும் நீரின் தூய்மையையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது. நான் இனியும் சின்னப் பையன் அல்ல. என் கண்ணுக்குக் கொடூரமான மலைகளும், புழுக்கள் நிறைந்து வழியும் நதிகளும்,  நாபாம் குண்டுகள் ஆக்கிரமித்த வானமும்தான் தெரிந்தன. 

📖  கண் தெரியாத இசைஞன் 
📝 விளாதீமிர் கொரலேன்கோ

பியானோவைத் திறந்து கட்டைகளின் மேல் இதமாய் விரல்களை வைத்து விரைவான சில மெல்லிய சுரங்களை பூர்வாங்கமாகவும் வினவும் பாவனையிலும் இசைத்தான். ஏதோ கேள்வி கேட்பவனைப்போல கட்டைகளை அழுத்துகையில் பியானோவை ஏதோ கேட்பவனைப் போல, அல்லது தனது இதயத்தையும் மன நிலையையும் வினவுகிறவனைப் போல தோன்றினான். 
சுரங்கள் கரைந்து மறைந்துவிட்டன. ஆடாமல் அசையாமல் சிந்தனையில் மூழ்கியவனாய் கைகள் கட்டைகள் மீது செயலற்றுப் பரவிக் கிடக்க உட்கார்ந்திருந்தான். முன்னறையில் நிலவிய நிசப்தம் மேலும் கடுமையாகியது.  

📖  ரசவாதி 
📝 பாலோ கொயலோ

ஒருவனின் இதயம் எப்போதும் அவனுக்கு உதவுகிறதா? என்று சான்டியாகோ அந்த ரசவாதியிடம் கேட்டான். 

"பெரும்பலும், தங்களுடைய கனவுகளை நனவாக்க முயற்சித்துகௌ கொண்டிருக்கின்ற நபர்களுடைய இதயங்கள்தான் அவ்வாறு உதவுகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கும் குடிகாரர்களுக்கும் முதியோருக்கும்கூட உதவுகின்றன".


 
📖  மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
📝 பாலோ கொயலோ
 
ஜூல்ஸின் அருகில் டேவிட் அமர்ந்திருந்த இடம் இன்னும் வெம்மையுடன் இருந்தது. தன் கையை நீட்டி, வழவழப்பாக இருந்த அந்த சலவைக்கல்லை அவள் தொட்டபோது, ஆழம் காணமுடியாத ஒரு தனிமையுணர்வு அவளை ஆட்கொண்டது. தன் தாயுடன் ஒட்டிப் படுத்துக்கொண்டு வெம்மையையும் பாதுகாப்பையும் நாடும் ஒரு குழந்தைபோல் அவள் தன் கணவனின் உடலோடு ஒட்டிச் சுருண்டு படுத்துக்கொண்டாள். ஆனால் விட்டுக்கொடுக்காத தடையாக ஒரு அச்சுறுத்தும் சில்லிட்ட சுவர் அவளை எதிர்கொண்டது. 

"ஜூல்ஸ்", என்று அவள் கிசுகிசுத்தாள். "ஜூல்ஸ்".




📖  பால்யகால சகி
📝 வைக்கம் முகம்மது பஷீர்

முற்றத்தின் எதிரில் சதுரமாக, வெள்ளை மணல் தூவி, நான்கு புறமும் செடிகள் நட்டு வைத்தான். சுகறாவின் கைகளால் வைத்த செம்பருத்தி மரம்தான் தோட்டத்தின் ஒருபுற எல்லை, அது இப்போது மரமாக வளர்ந்திருந்தது. மஜீது வரும்போது அது பூத்திருந்தது. பச்சிலைப் படர்ப்பின் மீது இரத்தச் சிதறல்போல், ஒருபோதும் நிறம் மாறாத கடுஞ்சிவப்புப் பூக்கள். 
அதன் கீழ் சாய்வு நாற்காலியைப் போட்டு படுத்துக் கொண்டு புத்தக வாசிப்பு நடந்தது. ஆனால், வாசிக்க முடியவில்லை. புத்தகத்தைத் திறந்து மடியில் வைத்துவிட்டு அப்படியே கிடப்பான்.  




📖  அஸீம் பே சம்பவம்
📝 அய்ஃபர் டுன்ஷ்
 
"இஸ்தான்புல்இஸ்தான்புல். நான் மறுபடியும் அந்த நாாட்டை பாார்பேனா? யாருக்குத் தெரியும்".

அஸிம் பே தம்புராவை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவர்கள் இரண்டு பேருக்கும் மட்டுமே கேட்கும் அடங்கிய குரலில் டோரோஸ் பாட ஆரம்பித்தான்.

நீ என் வேட்கையின் மலர்;
எனது மதிப்பார்ந்த மகுடம்.
உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்கே தெரியாது. 



  📖 ஆயிரம் சூரியப் பேரொளி
📝 காலித் ஹூசைனி

மரியம் சொன்ன எதற்குமே பதில் சொல்ல லைலாவுக்குத் தெளிவில்லை. நடப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருந்த மரங்களைப் பற்றி, வளர்க்க வேண்டிய கோழிகளைப் பற்றியெல்லாம் அவள் குழந்தைத்தனமாக ஏதேதோ உளறினாள். பெயரறியாத கிராமங்களின் சிறிய குடிசைகள் குறித்து, நாணல் புல் வளரும் ஏரிகள் குறித்து பேசினாள். இறுதியில் வார்த்தைகள் தீர்ந்து, கண்ணீர் இன்னமும் வற்றாத நிலையில், வயதில் மூத்தவளின் வெல்ல முடியாத விவேகத்தின் முன்னால் அவள் சரணடைந்து ஒரு குழந்தையெனக் கதறினாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தன்னை முழுவதுமாகச் சுருட்டிக்கொண்டு மரியத்தின் கதகதப்பான மடியில் இன்னொரு முறை தன்னை புதைத்துக்கொள்வது மட்டும்தான்.


 📖  சிதைவுகள்
📝 சினுவ அச்சிபி

அவர் முன்னோர்களிடம் மன்றாடினார். நல்ல உடல் நலத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் அவர் வேண்டினார்...... "நாங்கள் செல்வத்திற்காக மன்றாடவில்லை. ஏனென்றால் உடல் நலமும், குழந்தைகளும் உள்ளவன் செல்வத்தை தேடிக்கொள்ள முடியும். இன்னும் பணம் வேண்டும் என்று கேட்கவில்லை; இன்னும் உறவுக்காரர்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். எங்கள் உறவுக்காரர்கள் இருப்பதால்தான் நாங்கள் விலங்குகளை விட நன்றாக இருக்கிறோம். விலங்கு தனது அரிக்கும் முதுகை மரத்தில் தேய்க்கிறது. ஆனால் மனிதன் தனது உறவுக்காரனை தேய்த்துவிடச் சொல்கிறான்".......... ஆக்கன்கோவிற்காகவும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் சிறப்பாக செபித்தார். பிறகு கோலாப் பருப்பை உடைத்து ஒரு பகுதியை முன்னோர்களுக்காக தரையில் விட்டெரிந்தார். 



📖 நள்ளிரவில் சுதந்திரம். 
📝 டொமினிக் லேப்பியர் - லேரி காலின்ஸ்
 
1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 , அதிகாலை 3.00 மணி, கல்கத்தா.
ஏழு மாதங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தன்று நவகாளியின் கொந்தளிப்பு நிறைந்த சதுப்பு நிலங்களைக் கடந்து செல்லும் போது அஹிம்சாவாதியான அந்த நாகரிக தீர்க்கதரிசிக்குள் எழுந்த கேள்விகளும் சந்தேகங்களும் இந்த காலை வேளையிலும் எழுந்தன. முதல் நாள் மாலை ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில், "நான் இருட்டில் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இந்த தேசத்தை திசை தவறச் செய்துவிட்டேனோ? என்று குறிப்பிட்டிருந்தார். 



📖 லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
📝 பபானி பட்டாச்சார்யா
 
"தொலைபேசியின் சாமர்த்தியம் செங்கிஸ்கானுக்கு இருந்திருந்தால் உலகிற்கு என்ன நேர்ந்திருக்கும்? டால்ஸ்டாய் அக்கேள்வியைக் கேட்டார். பதிலினைக் கண்டறிய இயலவில்லை. நாம் இப்போது பதிலுக்கு அருகாமையில் இருக்கிறோம். செங்கிஸ்கான் கடைசியாக தொலைபேசி ஒன்றினைப் பெற்றுவிட்டார் என்பதால்!"


 

 📖 பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி).
📝 சமர் யாஸ்பெக்
 
முற்றத்தில் இருந்த ஒரு எலுமிச்சை மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டேன். என் தலை சுற்றியது; இந்தப் பேரழிவை, வரலாற்றை இரக்கமற்ற முறையில் அழித்த நாசவேலையை சீரணித்துக்கொள்ள எனக்குச் சிறிதுநேரம் தேவைப்பட்டது. எனக்கு முன்னால் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது, அல்லாவைத் தவிற வேறு இறைவனில்லை. மாராத் தியாகிகள் படை"
இன்னுமொரு எறிகணை விழுந்தது. 
 


 
📖 புரோட்டோகால்ஸ். 
📝 செர்கி நிலஸ் 

பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்தி, சந்தைகளையும் உற்பத்தியையும் முடக்குவோம். அப்போது, இந்த வெறுப்பு அவர்களுக்கு மேலும் அதிகமாகும். நமக்கு மட்டுமே தெரிந்துள்ள தந்திரங்களைப் பயன்படுத்தியும், நம்மிடம் குவிந்திருக்கும் பணத்தின் உதவியைக் கொண்டும் இந்த பொருளாதார வீழ்ச்சியை உண்டுபண்ணுவோம்.

உலகலாவிய அளவில் நாம் உருவாக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள் கூட்டத்தை தெருக்களில் இறக்கிவிடும். மகிழ்ச்சியோடு தம்மை அந்த கலகத்தில் ஈடுபடுத்திக்கொள்ளும் தொழிலாளர் கூட்டம், இரத்தம் சிந்தத் தயாராகிவிடும். தம் அறியாமையின் காரணமாகவும், குழந்தைப் பருவம் தொட்டு வளர்க்கப்பட்ட பொறாமை எண்ணம் காரணமாகவும் சொத்துகளைச் சூரையாடுவார்கள். 

ஆனால், நம்முடைய சொத்துகளை அவர்களால் தொடக்கூட முடியாது. ஏனெனில், அவர்கள் எந்த நேரத்தில் தாக்கப்போகிறார்கள் என்பது நமக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால், தேவையான ஏற்பாடுகளை நாம் செய்து விடுவோம். 


 
📖 மௌன வசந்தம்  
📝  ரெய்ச்சல் கார்சன் 

மனித அனு பிளாஸ்மாவை வேண்டியவாறு மாற்றிக்கொள்ளக் கூடிய வருங்காலத்தைப் பற்றி சிலர் கனவு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்குத் தேவையே இல்லாமல் போகக்கூடும். ஏனென்றால் பல வேதிப் பொருட்கள், கதிர்வீச்சைப் போல உயிரணுவில் வகை மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. மிகச் சாதாரணமான பூச்சிக் கொல்லியைத் தேர்வு செய்வது மூலம் மனிதன் தன்னுடைய வருங்காலத்தையே மாற்றிக் கொள்கிறான். 



 
📖 இதுதான் என் பெயர் 
📝 சக்கரியா
 
நான் இதை ஏன் முன்பே விசாரிக்கவில்லை? கஷ்டம்! கிழவனின் ஜாதகம் எனக்கு மனப்பாடமாக இருந்ததே! கிழவனுக்கு இன்னும் இரண்டே நாள்தான் ஆயுள் இருந்திருக்கிறது. பிரம்மாவே காவல் நின்றிருந்தாலும் இந்தத் திங்கட்கிழமை  தாண்டியிருக்காது. கொலையால்தான் மரணம். வீரனின் மரணம். அகிம்சாவாதிக்கு என்ன பொருத்தமான முடிவு பாருங்கள்! ஆனால் இன்று விட்டிருந்தால் கொல்வது என் கையை விட்டு வேறு ஒரு கைக்கு மாறும். கூடவே முத்திராசியும் மாறும். கிழவனும் என்னைப்போலக் காலத்தின் சேற்றில் நீந்திக்கொண்டேயிருப்பான். 



 
📖 கீதாரி
📝 சு.தமிழ்ச்செல்வி
 
"எலேய் நா வட்டங்கட்டி நிக்கச் சொல்றது ஊரான் வூட்டு பயிற மேஞ்சிரும்ங்குறத்துக்காவ மட்டுமில்லடேய். நம்ம ஆடுக களவுபோவாம இருக்கவுந் தாண்டாலே. திருத்துறப்பூண்டி சில்லாமேரி எல்லா எடமும் இருக்காதுடேய். ஆடுக வளிதப்பிப் போனாக்கொட ஓட்டியாந்து நம்ம கெடயோட சேத்து வுட்டுட்டுப் போறவுக அவுக. அவுகமேரியே எல்லா வூர்க்காரைங்களும் இருப்பாங்களா? மேஞ்சிக்கிட்டு இருக்கக்குள்ளையே திருடிக்கிட்டு போறவையங்களும் இருக்காங்க. எல்லாத்துக்கும் எடங்குடுத்துட்டு பெறவு வம்பு வளக்குன்னு யாருகிட்டையும் போயி நிக்கக்கொடா. தெரியிதுல்ல."



 
📖 சேப்பியன்ஸ்
📝 யுவால் நோவா ஹராரி
 
எந்தவொரு சிம்பன்சியும் சிம்பன்சி இனங்களின் நன்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளுவதில்லை. எந்தவொரு நத்தையும் தன்னுடைய ஒட்டுமொத்த நத்தைச் சமூகத்திற்காகத் தன்னுடைய உணர்கொம்புகளில் ஒன்றைக்கூட அசைக்காது. எந்தவொரு சிங்கக் கூட்டத்தின் ஆல்ஃபா ஆணும் அனைத்துச் சிங்கங்களின் அரசனாக ஆவதற்கு ஏலம் பேசுவதில்லை. 'உலகின் வேலைக்காரத் தேனீக்களே ஒன்றுபடுங்கள்!' என்ற வாசகம் தாங்கிய பலகையை எந்தவொரு தேன்கூட்டின் நுழைவாசலிலும் உங்களால் பார்க்க முடியாது.



 
📝  கோபோ ஏப்
📖 மணற்குன்று பெண்
 
கண்ணில் மரணத்தின் விளிம்பு தெரியும்போது கூட ஆசைகள் பிறக்கும். எப்படி மூங்கில் புல் கவிழ்ந்து விடுமோ என்று நினைக்கும் தருணத்தில் பூப்பூத்து குலுங்குமோ அதுபோல்... பட்டினியால் வாடும் எலிகள், தனக்கென்று ஒரு வலை அமைத்துக் கொள்ளக்கூட முடியாத சூழலில், வேறு வேறு இடம் தேடி ஓடிக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் கூட அவை இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட சாகும் தருவாயில் இருக்கும் காசநோய் நோயாளிக்கு தோன்றும் பைத்தியக்காரத்தனமான பாலியல் இச்சை போல...போர்முனையில் எந்த நிமிடமும் எதிரியின் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற இறுதிகட்ட பதட்ட சூழ்நிலையில் போர் வீரன் தன் கடைசி நிமிடத்தை சுய இன்பத்தில் கழிப்பது போல.....
அதிஷ்டவசமாக, எது எப்படியிருந்தாலும், மனிதன் பகுத்தறியாமல் வெளிப்படையாக மரண பயத்தை வெளிப்படுத்துவதில்லை.



📖  வணக்கம் துயரமே
📝  பிரான்சுவாஸ் சகன்
 
இன்றைய தேதியில் எனக்கு விலங்கினும் கேவலமான வாழ்க்கை. எடுப்பார் கைப்பிள்ளை, அசடு, பலவீனமானவள், என்னை நானே நித்தித்துக்கொள்வது வேதனைக்குரிய ஒன்று, அதற்கு முன்பு என்னை நானே நல்லவளென்றோ கெட்டவளென்றோ விமர்சித்துக்கொண்ட வழக்கமில்லை. எனது அரைக்குச் சென்றேன், ஏதேதோ கனவுகள். கட்டிலில் கிடந்த விரிப்பு கதகதவென்றிருந்தது. ஆன்னியின் குரல் இடைவிடாமல் காதில் ஒலிக்கிறது; ...செசில், காதலை வேறுமாதிரியும் பொருள் கொள்ளலாம், ...ஒரு வகை பிரிவாற்றாமை... யாரேனும் ஒருத்தரைப் பிரிந்து எப்போதேனும் நான் 
வாடியதுண்டா?