Waltzing Tilda - கற்பனை உலகம்.
அப்பாடா... அடிச்சி போட்டது மாதிரி நல்ல தூக்கம்... என சொல்லதைப் போல ஒரு இரவு நீங்கள் தூங்கி விழிக்கிறீர்கள். காலையில் எழுந்து பார்க்கையில் இந்த உலகத்தில் உங்களைத் தவிர யாருமே இல்லை என்றால் எப்படி இருக்கும்? கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். இதுபோன்று கற்பனையாக படைக்கப்படும் கதைகளை அபோகாலிப்டிக் மற்றும் போஸ்ட் அபோகாலிப்டிக் கதைகள் என்று அழைக்கிறார்கள். காலநிலை, பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவு, வின்கற்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் என வின்வெளி மாற்றங்கள், அணுசக்தி, போர்கள், மனித தவறுகள், அதிநவீன தொழில்நுட்பம், இவற்றால் நாம் வசிக்கும் பூமியின் அனைத்து உயிரினங்களும் ஒருநாள் அழிவது உறுதி. அப்படி அழிந்த உலகத்தை மையாகக் கொண்டு கற்பனையாக அமைக்கப்படும் அறிவியல் புனைவுக் கதைகளே அபோகாலிப்டிக் மற்றும் போஸ்ட் அபோகாலிப்டிக் கதைகளாகும். பாபிலோனியன் மற்றும் யூத சமுதாயம் உட்பட பண்டைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பலர் இந்த அபோகாலிப்டிக் வகையில் இலக்கியங்களையும் புராண கதைகளையும் படைத்திருக்கின்றனர். மொசபடோமியா என அழைக்கப்படும் பண்டைய தெற்கு ஆசியாவில் எழுதப்பட்ட கில்காமெஷ் என்னும் செய்யுள் இதிகாசம் இதுபோன்று புனைக்கதையை அடிப்படையாக கொண்டது. மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேரி ஷெல்லின் எழுதிய தி லாஸ்ட்மேன் என்ற நாவலை இத்தகைய கதைகளுக்கு நவீன முன்னோடியாக குறிப்பிடலாம். இந்த குறும்படமும் அந்த அபோகாலிப்டிக் வகையைச் சார்ந்ததே. சரி... குறும்படத்தின் கதைக்கு வருவோம்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வீதியில் ஒரு பெண் மட்டும் தனியாக நடந்து செல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு என்ற எழுத்துக்களோடு இந்த குறும்படம் தொடங்குகின்றது. போர் பதற்றம், அணு ஆயுத தாக்குதல், கலவரம் இவற்றின் அச்சுறுத்துதலால் சிட்னி நகர மக்கள் அனைவரும் ஒருவித குழப்பத்தில் இருக்கின்றனர். அவர்களில் டில்டா என்ற இருபது வயது நிறைந்த பெண் ஒருத்தியும் இருக்கிறாள். அன்றிரவு அவள் நன்கு குடித்துவிட்டு சில தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு படுக்கையில் விழுகிறாள். அடுத்தநாள் தாமதமாக கண்விழிக்கும் அவள் தான் உயிருடன் இருப்பதை உணர்கிறாள். வேலைக்கு புறப்பட வீட்டை விட்டு வெளிவரும் நிலையில் அவளுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருக்கிறது. தன்னைத் தவிர அந்த நகரில் வேறு யாரும் இல்லாத அதிசயத்தை அவள் காண்கிறாள். இதனை கொண்டாட்டமாகவும் யாருக்கும் கிடைக்காத வரமாகவும் நினைக்கும் அவள் தனது இஷ்டப்படி அந்த நகரில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறாள். நாட்கள் நகருகிறது. சிட்னியின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் என்ற இடத்தை சிதைக்கும் அவள் விக்டோரியா மகாராணியின் சிலையை உடைத்து தன்னை உலகத்தின் ராஜாவாக முடிசூட்டிக் கொள்கிறாள். மனிதர்கள் யாருமே இல்லாத அந்த நகரில் ஷேன் என்ற பேசும் முயல் மட்டும் அவளுக்கு துணையாக இருக்கிறது. அந்த முயல் அவளது ஊதாரித்தனத்தை அவ்வபோது எச்சரிக்கிறது. ஆனாலும் அதை பொருட்படுத்தாது தினமும் அவள் குடித்து கும்மாளமிடுகிறாள். தன் மனம்போன போக்கில் வாழ்கிறாள். இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் இன்று என்ற எழுத்துகளுக்கு குறும்படம் மாறுகிறது. டில்டா தன்னந்தனியே சிட்னி நகரில் நடந்து கொண்டிருக்கிறாள். அவள் தன்னை மாற்றிக் கொள்ளாது அதே நிலையில் தற்போதும் இருக்கிறாள். ஒருநாள் அவளுடன் இருக்கும் முயலுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் எழுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த முயல் இறந்தும் போகிறது. தனக்கு ஒரே துணையாக இருந்த முயலில் பிரிவை எண்ணி டில்டா வருந்துகிறாள். தனது பொருப்பில்லாத தனத்தையும் தனிமையையும் அப்போதுதான் உணர்கிறாள். இந்த உலகில் தன்னந்தனியாக தான் மட்டும் வாழ்வது பிடிக்காமல் அன்றிரவு அவள் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு முன்பு செய்தது போலவே தூக்க மாத்திரைகளை விழுங்குகிறாள். அடுத்தநாள் டில்டா கண் விழித்தாளா? என்ன நிகழ்தது? என்பதுதான் இந்த குறும்படத்தின் மீதிக்கதை.
அற்புதமான ஒரு கற்பனை, அதை சொன்ன விதம், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிட்னி நகரத்தை வெறிச்சோடச் செய்த கிராபிக்ஸ் தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, மற்றும் டில்டாவாக நடித்த நடிகை ஹோலி ஃபரேசர் என இந்த குறும்படத்தில் பாராட்டத்தக்க அம்சங்கங்கள் நிறைந்திருக்கிறது. அது அபோகாலிப்டிக் என்ற கற்பனை உலகத்திற்குள் நம்மையும் கைபிடித்து கூட்டிச் செல்கிறது.
📎
- Waltzing Tilda
- Written and Directed by - Jonathan Wilhelmsson
- Music by - Carita Boronska
- Cinematography - Paul d'lndy
- Country - Australia
- Language - English
- Year - 2017