சோளத் தீவு.

னது தங்கைக்காக ஒரு ஜோடி காலணியை பெறத்துடிக்கும் அண்ணன், நோட்டு புத்தகத்தை கொடுக்க சக மாணவனின் வீட்டை கண்டுபிடிக்கும் நண்பன், தவறவிட்ட பணத்தை தேடும் சிறுமி, தொலைந்து போனவர்களுடன் இணையத் துடிக்கும் உறவுகள், இலக்கை நோக்கிய பயணம், ஏதுமற்ற காத்திருப்பு, தனிமை, உயிர்வாழ்தல், அட ஏன்! பீஸாவிற்காக ஏங்கும் சிறுவர்கள் என ஒரு வரி கதை கொண்ட திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பலரது பாராட்டுகளை பெற்றதை நாம் அறிவோம். Beautiful Films, Wonder Films, White Paper Films, Watch Before Die Films என வகைப்படுத்தப்படும் இத்தகைய திரைப்படங்களின் கதை ஒருவரியாக இருந்தாலும் அந்த கதை நிகழும் சூழ்நிலை, அது உணர்த்தும் மறைபொருள், கதைமாந்தர்கள், அதில் நடித்தவர்கள் உட்பட ஒளிப்பதிவு இசை போன்ற கலை நுட்பங்கள் இவைகள் சேர்ந்தே அத்தகைய திரைப்படங்களை வேறொரு பரிமாணத்திற்கு உயர்த்தி இருக்கின்றன. இந்த ஜியார்ஜியா நாட்டு திரைப்படமும் அத்தகையதே.



இந்த திரைப்படம் தொடங்கும்போது ஜியார்ஜியாவிற்கு அருகிலிருக்கும் அப்காசியா நாட்டை சேர்ந்த பெரியவர் ஒருவர் இந்த இரு நாட்டிற்கு இடையிலிருக்கும் எங்கூரி என்ற நதியில் படகில் பயணித்து ஒரு குட்டித் தீவை அடைகிறார். மாலை நெருங்கியதும் அந்த தீவிலிருந்து புறப்படும் அவர் அடுத்தநாள் தனது பதின்பருவத்து பேத்தியையும் அங்கு அழைத்து வருகிறார். தாத்தா மற்றும் பேத்தி இருவரும் இணைந்து அந்த தீவை செப்பனிடுகின்றனர். மாலை நெருங்கியதும் இருவரும் மீண்டும் அங்கிருந்து திரும்பிச் செல்கின்றனர். ஒவ்வொருநாளும் இது தொடர இருவரும் இணைந்து அந்த தீவில் மரத்தாலான ஒரு அழகிய வீட்டை கட்டி முடித்து தேவையான பொருட்களை சேர்கின்றனர். 

இளவேனிற்காலம் தொடங்குகிறது. தாத்தா மற்றும் பேத்தி இருவரும் இணைந்து தங்கள் புதிதாக கட்டிய வீட்டைச் சுற்றி சோளக் கதிர்களை விளைவிக்க விதைகளை விதைக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் தீவு இருக்கும் ஆற்றில் ஜியார்ஜியா மற்றும் அப்காசியா நாட்டு இராணுவ வீரர்கள் அவ்வபோது படகில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆற்றில் புதிதாக முளைத்திருக்கும் சோளச் செடியையும் அந்த வீட்டையும் நோட்டமிட்டபடியே செல்கின்றனர்.


நாட்கள் நகருகிறது. விதைத்தவைகள் நன்கு வளர்ந்து வானம் தொட முயற்சிக்க ஒருநாள் இரவு அந்த தீவில் காயம் பட்ட இராணுவ வீரன் ஒருவன் தஞ்சமடைகிறான். தாத்தா மற்றும் பேத்தி இருவரும் அந்த வீரனுக்கு முதலுதவி செய்து அவனை காப்பாற்றுகின்றனர். இராணுவ வீரனின் உடல்நிலை தேறிய நிலையில் அந்த தீவிலிருக்கும் பெண்ணின் மீது அவனுக்கு இனம்புரியாத அன்பு ஏற்படுகிறது. இதற்கிடையில் ஒருநாள் சில இராணுவ வீரர்கள் அந்த தீவுக்குள் நுழைந்து சோதனை செய்ய காயம்பட்ட இராணுவ வீரன் தற்காலிகமாக பதுங்கி கொள்ளவும் பிறகு அங்கிருந்து நிரந்தரமாக சென்றுவிடுவதும் நேரிடுகிறது. காயம்பட்ட அந்த இராணுவ வீரன் அங்கிருந்து சென்ற சில நாட்களுக்கு பின்பு மழைக்காலம் தொடங்குகிறது. அந்த தீவை சுற்றிய ஆற்றின் நீர்மட்டமும் உயர்கிறது. சோளக்கதிர்கள் முற்றிய நிலையில் அங்கு கனமழை பொழிகிறது. ஆற்றின் நீர்மட்டம் இந்தமுறை சற்று அதிகரிக்க இரவிலும் கொட்டும் மழையிலும் தாத்தா பேத்தி இருவரும் விளைந்த சோளக்கதிர்களை அறுவடை செய்யத் தொடங்குகின்றனர். அவர்கள் அதனை செய்து முடித்தார்களா? அவர்களுக்கு கிடைத்தது என்ன? மழையில் அந்த தீவு என்ன ஆனாது? தாத்தாவும் பேத்தியும் என்ன ஆனார்கள்? என்பதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.


தாத்தாவும் பேத்தியும் அந்த தீவிற்கு ஏன் வருகிறார்கள்? சோளக்கதிர்களை விளைவிக்க அந்த இடத்தை எதற்காக அவர்கள் தேர்வு செய்கின்றனர்? தாத்தா மற்றும் பேத்தி இருவரின் முகத்தில் எந்நேரமும் தொற்றிக்கொண்டிருக்கும் விளங்க முடியாத சோகத்திற்கு என்ன காரணம்? இப்படி விடை தெரியாத பல கேள்விகளை இந்த திரைப்படம் எழுப்புகிறது. மேலும் அந்த தீவைச் சுற்றி அவ்வபோது கடக்கும் இராணுவ வீரர்கள், தூரத்தில் கேட்கும் துப்பாக்கி வெடிக்கும் சப்தம், காயம் பட்ட அந்த இராணுவ வீரன் இவையனைத்தும் இரண்டு நாட்டிற்கும் உள்ள கலவரத்தை மறைபொருளாக உணர்த்துகிறது. ஆறு, தீவு, அதனைச் சுற்றியுள்ள இடங்களை வெவ்வேறு காலநிலைகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும், ஒரு சிறிய காகிதத்தில் அடக்கிவிடும் அளவிற்கான வசணமும், மெல்லிய வருடலான இசையும், தாத்தா மற்றும் பேத்தியாக நடித்த இருவரின் நடிப்பும் மிதமிஞ்சிய அழகாக இருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் இந்த திரைப்படம் Beautiful Films, Wonder Films, White Paper Films வகையைச் சார்ந்தது. Watch Before Die Films வரிசையில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய திரைப்படமும் கூட. தவறாமல் பாருங்கள்.


Simindis Kundzuli (Corn Island).
Directed by - Giorgi Ovashvili
Written by - Giorgi Ovashvili, Roelof Jan Minneboo, Nugzar Shataidze
Music by - Loseb Bardanashvili
Cinematography - Elemer Ragalyi
Edited by - Sun min Kim
Year - 2014
Country - Georgia
Language - Abkhaz Georgian.