அந்த சில நேரங்கள்.
2000 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் காதலர்தினம் கொண்டாடப்படும் ஜூலை 12 ஆம் நாளில் ரியோ டி ஜெனிரோ நகரின் ஜார்டிம் பொட்டானிகோவின் பேருந்து ஒன்றில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் ஏறினான். வழிப்பறி செய்யும் நோக்கத்தில் ஏறிய அவனைப் பற்றி பேருந்திலிருந்தவர்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். சிறுதுநேரத்திற்கு பிறகு காவல்துறையினர் அந்த பேருந்தை சுற்றி வளைத்தனர். இதனை உணர்ந்த அந்த இளைஞன் அந்த பேருந்திலிருந்தவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தான். அவர்களை வைத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தான். இந்நிலையில் இந்த நிகழ்வு அங்கிருக்கும் ஊடகங்களின் காதுகளுக்கு எட்டியது. உடனே இருப்பதை தூக்கிக்கொண்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைய அவர்களின் புண்ணியத்தில் நாடே இந்நிகழ்வை தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கத் தொடங்கியது.
காவல்துறையும் ஊடகங்களும் பேருந்திலிருக்கும் அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அவனது பெயர் சாண்ட்ரோ டூ நாசிமென்டோ என்றும், அவன் சிறுசிறு குற்றங்களுக்காக தேடப்படும் ஒரு குற்றவாளி என்றும், அவனது பிறப்பு முதல் வளர்ந்தவிதம் வரை அனைத்து பின்புலத்தையும் தெரிந்துகொண்டனர். அந்தநாள் இந்த கடத்தல் சம்பவம் பிரேசில் நாட்டவருக்கு கால்பந்து விளையாட்டைப் போல பேசும் பொருளானது. இறுதியில் நான்கு மணிநேர போராட்டாத்திற்கு பிறகு அந்த இளைஞனை காவல்துறையினர் பிடித்து கைது செய்து கொண்டுசென்றனர். சிறிது நேரத்திற்கு பின்பு அவன் மூச்சுத்திணறலால் இறந்துவிட்டான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். முதலில் கடத்தல் நிகழ்வாக இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மக்களுக்கு சந்தேகம் கிளம்பியது. அந்த இளைஞனின் பின்புலத்தை தெரிந்துகொண்ட அவர்களுக்கு அவன் மீது இறக்கம் தோன்றியது. சாதாரண ஒருவன் குற்றவாளியாக மாறக்கூடிய நாட்டின் சூழ்நிலையையும், சமுதாய குளறுபடியையும், அரசாங்கத்தின் அத்துமீறல்களையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி அதிவிரைவாக எப்படி செயல்படுகிறது என்பதையும் மக்கள் உணர்ந்தனர். பின்நாட்களில் இந்த சம்பவம் மனிதநல வழக்காக மாற அரசாங்கத்தையும் அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். இந்த டாகுமெண்டரி திரைப்படம் அந்த பேருந்து கடத்தலின் நான்கு மணிநேர போராட்டத்தையும் அதனோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போல உண்மைக் காட்சிகளுடன் விவரிக்கிறது.
டாகுமெண்டரிகளில் உண்மைக் கதைகளுக்கும் உயிர்வாழ்தல் கதைகளுக்கும் என்று ஒரு தனித்தும் இருக்கும். இந்த டாகுமெண்டரியும் அத்தகையதே என்றாலும் ஆரம்பத்தில் தொடங்கும் காட்சியும், அந்த இளைஞனைப் பற்றிய தேடுதலும், அவனது வளர்புத் தாய் மற்றும் அத்தை, அந்த பேருந்தில் இருந்தவர்கள், காவல்துறை ஆய்வாளர் போன்ற சிலரின் நேர்காணல்களும் குற்றத்தைவிட குற்றவாளிகளை உருவாக்கும் இந்த சமுதாய அமைப்பின் மீது பல கேள்விகளை எழுப்பச் செய்கிறது. மேலும் இலத்தின் அமெரிக்கநாடுகளில் இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையானதே என்றாலும் City of God என்ற திரைப்படத்தின் கதையைப்போல ஏதோவொரு தாக்கத்தையும் இந்த டாகுமெண்டரி ஏற்படுத்துகிறது.
Trailer
Onibus 174
(Bus 174)
Directed by - Jose Padilha, Felipe Lacerda
Written by - Braulio Mantovani
Music - Sacha Amback, Joao Nabuco
Cinematography - Marcelo Durate, Cezar Moraes
Year - 2002
Country - Brazil
Language - Portuguese