வானவில் படை.

ருடத்தில் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் ஆரம்ப கல்வியறிவு பெற தொடங்குவதேயில்லை, அதேபோல் வருடந்தோறும் சுமாராக ஆறு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக் கல்வியை விட்டு விலகிச் செல்கின்றனர் என்ற புள்ளி விவரங்கள் மன்னிக்கவும் பெரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியானதே. இந்த வேளையில் மூன்று மொழி, மூனாம் வகுப்பில் பொதுத் தேர்வு, முக்கிய பாடத்தில் குளறுபடி கொண்ட மாற்றுக் கல்வி முறையும், அதற்கு எதிரான குரல்களும், அதனை நியாயப்படுத்தும் விவாதங்களும் அச்சப்பட வைக்கின்றன. பற்றாக்குறைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் நூலகமாக மாறும் பரிணாம வளர்ச்சி திட்டம் வயிற்றில் இம்லியை கரைக்கிறது. பாவன்டா புஜ்ஜிமா...அவன் குழந்தடா... என பசங்களின் புத்தக மூட்டையிலும் நுழைந்த இந்த அரசியல் துர்நாற்றத்தின் உச்சகட்ட அசிங்கத்திற்கிடையே இதனை சமாளித்து சரிசெய்து ஒரு ஒழுங்கு நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் இந்த சமுதாய அமைப்பிற்கும் இருக்கிறது. அதைவிட கூடுதல் பொறுப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இந்த திரைப்படம் அத்தகைய ஆசிரியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். நமக்கும் சற்று ஆறுதலாக இருக்கும். 


வருடம் 1970, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையிலிருக்கும் பெலிதுங் என்ற கிராமத்தில் முஹம்மதியா தொண்டு நிறுவனத்தின் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. ஒரு தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியரை மட்டுமே கொண்ட அந்த பள்ளிக்கூடம் விரைவில் மூடப்படும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது. விவசாயம் மற்றும் சுரங்கத் தொழிலோடு வறுமையுடன் வசிக்கும் மக்களைக் கொண்ட அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குகூட யாரும் ஒதுங்குவதில்லை. ஒரு சிலராவது அங்கு படிக்க முற்பட்டால் பள்ளிக்கூடத்தின் எதிர்காலம் தப்பிக்கும் என்ற நிலையில் மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் அலைகின்றனர். வயல்வெளியிலும் சுரங்கத்திலும் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்யும் பத்து சிறார்களை அவர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு வானவில் படை (Laskar Pelangi - The Rainbow Warriors) என பெயர் வைக்கின்றனர். அந்த படையில் இருக்கும் மாணவர்களில் ஒருவன் தன்னை எப்போதும் மேதாவியாக காட்டிக்கொள்ள விரும்புகிறான். மற்றொருவன் கையில் ரேடியோ இல்லாமல் எங்கும் செல்வதில்லை என இருக்கிறான். மற்றொருவனுக்கு இசையின் மீது நாட்டம் இருக்கிறது. இவ்வாறு சிறு சிறு தனித்துவமும் திறமையும் இருக்கும் அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். ஐந்தாண்டு இறுதியில் அவர்களின் கனவை நினைவாக்கும் உரிமைக்காக அவர்கள் போராடுகின்றனர். மேலும் அந்த கிராமத்திலிருப்பவர்களுக்கு கல்வியின் மகத்துவத்தையும் உணர்த்துகின்றனர். மிக எளிமையாகச் சொன்னால் ஒரு அழகான கிராமம், ஒரு பள்ளிக்கூடம், இரண்டு ஆசிரியர்கள், பத்து மாணவர்கள், ஒரு சமுதாயத்தின் முன்னோற்றம் இவற்றின் நகைச்சுவை ததும்பும் கதையே இந்த திரைப்படம்.

ஆசிரியர் பணி ஆசிர்வதிக்கப்பட்டது. சிறுவர்களின் பள்ளிப்பருவம் அலாதியானது. அந்த ஆசிர்வதிக்கப்பட்ட அலாதியான உலகத்திற்கு இந்த திரைப்படம் நம்மை கூட்டிச் செல்கிறது. இந்த திரைப்படம் இந்தோனேசியாவில் உள்ள பாங்கா தீவில் படமாக்கப்பட்டது. அந்த தீவின் அழகு மனதை கொள்ளை போகச் செய்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் பத்து சிறார்களும் அந்த தீவைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். நடிப்பதற்கு வேறு ஆட்கள் எதற்கு? என தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் அவர்களுக்கே உண்டான குறும்பும் மகிழ்ச்சியும் கோபமும் அழுகையும் பயமும் சிரிப்பும் கலந்து கதையோடு இயல்பாக பொருந்தியிருக்கின்றனர்.


ஆண்ட்ரியா ஹிராட்டா என்பவர் எழுதிய Laslar Pelangi என்ற புத்தகத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு உண்மைக் கதையும்கூட. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் உயிரோட்டமாக இருக்கின்றனர். கதை நிகழும் கிராமத்தின் அந்த பள்ளிக்கூடம் தற்போது காட்சிப் பொருளாக இருக்கிறது. அது இருக்கும் தீவு Laskar Pelangi என்ற பெயரில் சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. இந்த திரைப்படம் வெறும் கைத்தட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றதைவிட இந்தோனேசியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை பார்த்த இந்தோனேசியாவின் அப்போதைய பிரதமர் சுசிலோ பாம்பாங் யுடோயோனோ அதன் தாக்கத்தில்  கல்வித்துறையில் அரசாங்கம் சில சீர்திருத்தங்களையும் செலவினங்களையும் செய்யும் என உறுதியளித்தார். ஆட்சியாளர்களுக்கு அதுவே அழகென சொன்னதை பின்நாட்களில் அவர் செய்தும் காட்டினார். இதுவொறு அற்புதமான சமுதாய கருத்தை முன்நிறுத்தும் திரைப்படம் என்ற கருத்து நிச்சையம் மிகையில்லை. ஒரு திரைப்படம்தானே, ஏதோ ஒரு தீவில் நடந்த கதைதானே என இதனை ஒதுக்காமல் தற்போது இருக்கும் கல்வி குளறுபடிக்கு அவசியமாகவும் ஆறுதலாகவும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

ட்ரைலர்

Laslar Pelangi
Directed by - Riri Riza
Written by - Salman Aristo, Mira Lesmana,
Based on - Laslar Pelangi by Andrea Hirata
Music - Sri Aksan Sjuman, Titi Handayani Sjuman
Cinematography - Yadi Sugandi
Year - 2008
Country - Indonesia
Language - Indonesian and Malay.