கஸ்ஸாய் அண்ட் லியூக் .

ல்லாம் ஒன்றாக இருந்தபோதும்; எல்லாவற்றிற்கும் ஒன்றே என இருந்தபோதும் எல்லாம் இனிமையாகவே இருந்தது. இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி சேனல்களுக்கும் ஏகப் பொருந்தும். இன்று திரைப்படங்களுக்கு என தனி சேனல்கள், பாடல்களுக்கென தனி சேனல்கள், செய்திகள், நாடகங்கள், விளையாட்டு, சமையல், அழகு குறிப்பு, பயணம், மதம், பக்தி, சாமி, சாமியார்களுக்கெல்லாம் தனி சேனல்கள் இருக்கிறது. சிரிப்பிற்கு, சிறுவர்களுக்கு அட! ஏன்? விலங்குகள், பறவைகள், பூச்சிகளுக்கும் தனி சேனல்கள் இருக்கிறது. தனித்தனியே எல்லாம் கிடைக்க, தனித்தனியே வாழ பழக, சுவாரசியமும் எதிர்பார்ப்பும் குறைந்து சலிப்புத்தன்மை மட்டுமே மேலோங்கியிருக்கிறது. அதிலும் மழைக் காளான்கள் மாதிரி மாதம் ஒன்றென முளைக்கும் செய்தி சேனல்களைப் பற்றி கவலையாக இருக்கிறது. அரசியலுக்கு தனி, வெட்டிப் பேச்சிற்கு தனி, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, கள்ளக்காதல் மற்றும் தாலியறுப்பிற்கு தனி என தனித்தனி செய்தி சேனல்கள் இனி வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நிற்க... பள்ளிப் பருவத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட சிறுவர்களுக்கான ஒரு கார்டூன் தொடரைப் பற்றி எழுத நினைத்து எங்கோ போய்விட்டேன். சரி விசயத்திற்கு வருகிறேன்.


2000 -2001 ஆம் ஆண்டுவாக்கில் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட கார்டூன் தொடர்தான் கஸ்ஸாய் அண்ட் லியூக் (Kassai and Leuk). பிரான்ஸை சேர்ந்த ஆலிவர் மாசார்ட் (Oliver Massart) என்பவர் Marathon Media Group என்ற நிறுவனத்திற்காக இந்த தொடரை உருவாக்கினர். பள்ளிக்கூடத்தின் பாடதிட்டமாக உருவாக்கப்பட்ட இந்த தொடரை 1997 -ல் டெலிடூன் என்ற தொலைகாட்சி சம்பா எட் லியூக் (Samba Et Leuk) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் முதன்முதலாக ஒளிபரப்பியது. பிறகு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த கார்டூன் தொடர் ஆப்பிரிக்காவின் நாடோடி கதையை அடிப்படையாக கொண்டது. கதைப்படி ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இன மக்களின் தெய்வமாக கூரி என்ற தெய்வம் இருக்கிறது. பிரமாண்ட சிலையாக குகையிலிருக்கும் அந்த தெய்வ உருவத்தின் சில பகுதிகள்  காணாமல் போகிறது. அந்த சிலையின் பகுதிகளை மீட்கவும் தன் இன மக்களை கடவுளின் சாபத்திலிருந்து காக்கவும் கஸ்ஸாய் என்ற இளைஞன் சாகசம் செய்ய துணிகிறான். அவனுக்கு மலையையும் காட்டையும் பற்றி நன்கறிந்த லியூக் என்ற முயலும், பகலில் மானாகவும் இரவில் பெண்ணாகவும் மாறும்படி சபிக்கப்பட்ட மரானா என்ற இளவரசியும் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் தீய சக்தியின் கடவுளான டோகுவாம் என்ற அரக்கன் இவர்களின் தேடுதல் திட்டங்களை முறியடிக்க முயல்கிறான். அந்த தீய சக்தியின் சதியிலிருந்து தப்பித்து கூரி தெய்வத்தின் சிலையின் பாகங்களை கண்டுபிடித்து கஸ்ஸாயும் அவனது குழுவும் தங்களது கிராமத்தை காத்தார்களா என்பதுதான் மொத்தம் 26 பகுதிகள் நீளும் இந்த தொடரின் மீதிக்கதை.


முன்பே குறிப்பிட்டதுபோல் எல்லாம் ஒன்றாக இருந்து சுவரசியங்கள் நிறைந்திருந்த சன் டிவியில் பால்ய காலத்தில் ஒளிபரப்பப்பட்ட, அதிலும் மயக்கும் குரலில் தமிழில் அழகாக பேசிய இந்த கார்டுன் தொடர் அனைவரையும் ரசிக்க வைத்தது. கார்டூன் உலகம் என்ற இந்த பகுதியில் என்ன எழுதலாம் என யோசிக்க பள்ளிக்கூடம் விட்டதும் பசியோடு வீட்டிற்குள் நுழைந்து அம்மா கை பக்குவத்தில் எதையாவது கொறித்துக்கொண்டே பார்த்த இந்த தொடர் நினைவுக்கு வந்தது. எப்போதோ ஒளிபரப்பான இந்த தொடரை அதே சுவையுடன் தமிழில் தற்போது காணமுடியுமா என்ற தேடலும் தொடங்கியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடர் டிவிடி வடிவிலும், யு டியூப் போன்ற சில வெப்சைட்களிலும் வேறு மொழிகளில் காணக் கிடைக்கிறது. ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த தொடரைப்பற்றி அசைபோட முடிந்தது. அந்த அசைபோடுதலை மட்டும் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

Trailer