காணாமல் போன தனிமங்கள்.

ள்ளி கல்லூரி காலங்களில் வேதியியல் பாடப்பிரிவுகளை பயின்றவர்களுக்கு தனிம அட்டவணை என்றால் என்ன என நிச்சையம் தெரிந்திருக்கும். அதில் உலகில் உள்ள தனிமங்கள் அதன் அணு எண், எதிர் மின் அமைப்பு இவற்றை வைத்து இடமிருந்து வலமாக வரிசையாக நம்பர் 1 ஹைட்ரஜனில் தொடங்கி நம்பர் 118 ஒகனிசோன் வரை அதன் பண்புகளுக்கு தங்கவாறு மேலிருந்து கீழாக அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும். மேலும் சிவப்பு பச்சை மஞ்சள் என வண்ணங்களைக் கொண்டு உலோகங்கள், காரமண்கள், லாந்த்தனைட்டுகள் அலோகங்கள் என அவைகள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும். ஏழாம் இடத்தில் சனி சஞ்சாரம், நான்காமிடத்தில் கேது பரம சாது, மூன்றாமிடத்தில் சுக்கிரன் உக்கிரன் என மனிதனுக்கு பார்க்கும் ஜாதக கட்டத்தைப் போல இருக்கும் இந்த அட்டவணையை வைத்து தனிமங்களின் ஜாதகத்தை எளிதாக சொல்லிவிடலாம். இந்த அட்டவணையை போராட்டத்தில் எல்லாம் கலந்துகொள்ளாத பரமசாது பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து அறிஞரான ரஷ்யாவின் திமீத்ரி மெண்டலீவ் என்பவர் முதன்முதலில் உருவாக்கினார். அவருக்கு பின்பு வந்தவர்கள் உலகில் இருக்கும் தனிமங்களை சேர்த்து இந்த அட்டவணையை புதுப்பித்தனர். எல்லாம் சரி... இந்த அட்டவணையில் உள்ள தனிமங்கள் அனைத்தும் உலகில் இருக்கிறதா? என்றால் இருக்கு ஆனால் இல்லை என ஆ... ஆ... பதில் வரும். மேலும் இந்த அட்டவணையில் இருந்த தனிமங்கள் காணாமல் சென்று திரும்பவும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைப்பற்றி சுவாரசியமாக பார்க்கலாம் வாருங்கள்.


அண்டமும் அதில் உள்ள அனைத்தும் பருப்பொருளால் ஆனது. அந்த பருப்பொருள்கள் அனைத்தும் வேதித் தனிமங்களால் உருவாக்கப்பட்டவை. இதுவரை 118 வேதித் தனிமங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 94 தனிமங்கள் இயற்கையாக கிடைத்தவை. மீதமிருக்கும் 24 தனிமங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை ஆகும். மெண்டலீவ் உருவாக்கிய அட்டவணையில் இந்த 94 தனிமங்களே இடம்பெற்றன. அந்த அடிப்படையில் 1930 ஆண்டு வாக்கில் தனிம அட்டவணையில் 43, 61, 85 மற்றும் 87 வது இடங்கள் காலியாக இருந்தன. அவைகள் முறையே டெக்னீஷியம் Tc, புரோமிதியம் Pm, அஸ்டாடைன் At, பிரான்ஸியம் Fr என்பனவாகும். இவை நான்குமே மிகக்குறைந்த அரை ஆயுளைக் கொண்ட கதிரியக்க தனிமங்களாக இருந்ததால் அட்டவணையில் இடம்பெற முடியாமல் போயின. அய்யா என்னோட கிணத்த காணல வடிவேலு கணக்காக புகார் அளிக்காததும், அதனை கண்டுபிடித்து தருவோறுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்காததும் குறையாக இருக்க 1937 ஆம் ஆண்டு டெக்னீஷியம் என்ற தனிமத்தை முதன்முதலாக உண்டாக்கினர். மனிதனால் டெக்னிக்கலாக சிருஷ்டிக்கப்பட்ட முதல் தனிமமும் இதுவே. இந்த டெக்னீஷியம் அணு உலைகளின் யுரேனியக் கழிவுகள் நிறையவே கிடைக்கிறது. இதன் குறிப்பிட்ட ஐசோடோப்புகள் மருத்துவத்துறையில் பயன்பாட்டில் உள்ளது.

அடுத்து 1945 ஆம் ஆண்டு அமேரிக்காவில் உள்ள ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் ஜாக்கப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிளொன்டனின், சார்லஸ் கோர்பெல் என்பவர்கள் இணைந்து யுரேனியம் 235 சிதைவின் போது புரோமித்தியத்தை கண்டுபிடித்து தனியாக பிரித்தும் காட்டினர். கிரேக்கத்தில் வழக்கில் உள்ள தொன்மக்கதையில் வரும் புரோமீதியஸ் என்னும் கடவுளின் பெயரை அதற்கு வைத்தனர். தற்போது இது அணுசக்தியில் இயங்கும் பேட்டரிகள், ரேடியோக்கள், ஏவுகணைகளில் பயன்படுத்தப்படுகிறது.

85 வது தனிமமான அஸ்டாடைன் 1940 ஆம் ஆண்டு பொலோனிய என்ற கதிரியக்க தனிமம் சிதையும்போது பிரித்தெடுக்கப்பட்டது. யுரேனியம் சிதைவிலும் இது பெருமளவில் தோன்றுகிறது. கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழக ஆய்வகத்தில் டேல் ஆர் கார்சன், கென்னத் ரோஸ் மெக்கன்சி, எமிலோ கி செகிர் மூவரும் இணைந்து இதனை உருவாக்கினர். இருந்தபோதிலும் இந்த அஸ்டாடைன் தனிமம் எதற்கும் பயன்படாத வெட்டியாகவே இருக்கிறது. அற்ப ஆயுளைக் கொண்ட, அதாவது 8.1 மணிநேரம் மட்டுமே அரை ஆயுட்காலத்தை கொண்ட இது வெறும் 30 கிராம் அளவிற்கே இந்த உலகில் இருக்கிறது. 

கடைசியாக 1939 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் விஞ்ஞானி மார்குரைட் பெரே என்பவர் ஆக்டினியம் என்ற கதிரியக்க தனிமத்தின் சிதைவிலிருந்து இதனை கண்டுபிடித்தார். தன் நாட்டின் மீது பற்றுகொண்ட அவர் அதற்கு பிரான்சியம் என பெயரிட்டார். இந்த தனிமம் ஆராய்ச்சிக்கூடகங்களில் தேவைப்படும் போது மட்டுமே உண்டாக்கப்படுகிறது. மேலும் இதனை பார்கவேண்டுமானால் ஒரு சுபயோக சுக தினைத்தில் நல்ல நேரம் பார்த்து பெண் பார்க்க வருகிறோம் அதற்குள் பெண்ணையும் பஜ்ஜி போண்டா கேசரியையும் தயார் செய்து வைக்கவும் என்பதைப்போலவே முன்கூட்டியே சொல்லிவிட்டு ஆராய்ச்சிகூடத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் இதன் அரை ஆயுட்காலம் வெறும் 21 நிமிடங்களே.