ரத்தம் விற்பவனின் சரித்திரம்.


ந்த ஊரில் ரத்தம் விற்காத ஆண்களுக்கு பெண் கிடைக்காது. ஆரோக்கியம் உள்ள எல்லோரும் ரத்தம் விற்க செல்கிறார்கள். ஒருமுறை ரத்தம் கொடுத்தால் முப்பத்தைந்து யுவான் கிடைக்கும். ஆறுமாதம் வயல்களிலிருந்து சம்பாதிப்பதைவிட எவ்வளவோ அதிகம். ரத்தம் கிணற்று நீர்போலத்தான். அள்ளவில்லை என்றால் அது வற்றிப்போகும், ஆனால் என்றும் அதை பயன்படுத்தினாலோ முன்பு இருந்த அளவு தண்ணீர் ஊறவும் செய்யும். (புத்தகத்தில் வரும் ஸூ ஸன்க்வானின் சித்தப்பா அவனுக்கு சொன்னது).

உங்களுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்று தொலைக்கலாம்; ஆனால் ரத்தம் விற்கக்கூடாது. நீங்கள் ரத்தம் விற்பதைவிட உங்கள் உடலை விற்பதுதான் நல்லது. உங்கள் உடல் உங்களுடையது. ஆனால் ரத்தம் விற்பது என்பது உங்கள் முன்னோர்களை விற்பது என்பதான் அர்த்தம். நீங்கள் உங்கள் முன்னோர்களை விற்றீர்கள். (ரத்தம் விற்றுவிட்டு வந்த ஸூ ஸன்க்வானிடம் அவனது மனைவி ஸூ யுலான் சொன்னது).

குடும்ப நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தனது இரத்தத்தை விற்கும் ஒரு சீனனின் கதைதான் இந்த நாவல் ரத்தம் விற்பவனின் சரித்திரம்.

1958 களில் சீனாவில் மூன்றாண்டு காலம் பெரும் பஞ்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து 1966 - 1976 களில் கலாச்சார புரட்சியின் விளைவாக பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தது. தனிமனிதனின் வாழ்க்கையை பாதிக்காத மாற்றங்கள் எதுவும் மாற்றமே இல்லை என்பதற்கேற்ப சீனாவின் கலாச்சார புரட்சி சாதக பாதகங்கள் நிறைந்ததாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில் சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக ரத்தம் விற்பது இருந்தது. ரத்தம் விற்கும் இடங்கள் பெருகிப்போக பாதுகாப்பின்மையும் எய்ட்ஸ் போன்ற நோய் தொற்றும் அங்கு நிழவியது. பிறகு ரத்தம் விற்பது ஈனத் தொழிலாக பார்க்கப்பட்ட முரண்பாடும் நடந்தேறியது. இந்த நாவலின் கதை ஸூ ஸன்க்வான் என்ற ஒருவனின் வாழ்கையின் மூலம் அந்த சிக்கலான காலகட்டத்திற்குள் பயணிக்கிறது.

இந்த நாவலில் வரும் ஸூ ஸன்க்வான் சிலரின் தூண்டுதலின் பெயரால் ஆர்வக்கோளாரினால் முதன்முதலாக ரத்தம் விற்க செல்கிறான். பிறகு தனது வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களுக்கிடையே அவ்வபோது ரத்தம் விற்கிறான். நாளடைவில் ரத்தம் விற்பது அவனுக்கு போதையாகவே மாறுகிறது. வயதான தளர்ந்த நிலையிலும் அவன் ரத்தம் விற்க சென்றுகொண்டே இருக்கிறான். இறுதியில் தன்னால் இனிமேல் ரத்தம் விற்க முடியாதே என வருந்தவும் செய்கிறான் இத்தனைக்கும் ஸூ ஸன்க்வான் மாபெரும் வீரனோ அல்லது பெரும் தலைவனோ சாதிக்கப் பிறந்தவனோ அல்ல, கண்ணியத்தோடு நம்பிக்கையோடு மாற்றங்களின் நடுவே வாழ போராடும் சாதாரண ஒருவன்.

ரத்தம் கொடுப்பது வேறு ரத்தம் விற்பது வேறு. முதலாவது ஆரோக்கியம் இரண்டாவது வறுமை நோய். இந்த நாவல் இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் வாழும் மக்கள் சந்தித்த துன்பியல் வாழ்க்கையை விஷமத்தனம் நிறைந்த நகைச்சுவையோடு நமக்கு காட்டுகிறது. சாதாரண மனிதர்கள் வாழும் சீனாவின் தெருக்களுக்கும் வீடுகளுக்கும் வீட்டில் உள்ள சமையல் கட்டிற்கும் படுக்கையறைக்கும் நம்மை இழுத்துச் செல்கிறது.


என் வாழ்வில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நிஜம் மற்றது புனைவு. இவ்விரண்டிற்கும் உள்ள உறவு நோய்க்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள உறவு போன்றது. ஒன்று வலுப்பெற்றால் மற்றது நலிவடைய வேண்டும். என்ற சிந்தனை கொண்ட சீனாவைச் சேர்ந்த எழுத்தாளர் யூ ஹூவா என்பவர் இந்த நாவலை எழுதியிருக்கிறார். Smile Writing என சொல்லக்கூடிய வகையில் வாசிக்கும் தருணங்களில் புன்னகைக்கும் படியாகவும் அந்த புன்னகைக்கு பின்னால் கொடூரமான வாழ்வு அமைந்திருப்பதாகவும் இரண்டறக் கலந்து இந்த நாவலை அவர் படைத்திருக்கிறார். யூ ஹூவானின் படைப்புகள் அனைத்தும் மாவோ சீனாவின் வரலாற்றையும், பண்பாட்டையும், மரபுகளையும், அதன் சிதைவுகளையும் மறைமுகமாக பிரதிபலிக்கும். இந்த நாவலும் அத்தகையதாகவே அமைந்திருக்கிறது.  சீனாவில் கடந்த இருபது ஆண்டுகளில் வாசகர்களால் பேசப்பட்ட இருபது புத்தகங்களில் இந்த ரத்தம் விற்பவனின் சரித்திரமும் இருக்கிறது. உலக மொழிகள் பலவற்றில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட தமிழில் யூமா வாசுகி நமக்கும் அழகாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இதே பெயரில் (Chronicle of Blood Merchant) இந்த நாவல் திரைப்படமாக வந்ததும் குறிப்பிடத்தக்கது. தவறாமல் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

ரத்தம் விற்பவனின் சரித்திரம்
Chronicle of Blood Merchant
யூ ஹூவான்
தமிழில்: யூமா வாசுகி
சந்தியா பதிப்பகம்