ஜீவகாருண்யம்.
ஜீவன் + காருண்யம்= ஜீவகாருண்யம். வடமொழி சொல்லாக இருக்குமோ? என்ற சந்தேகமும், தார்பூசி அழித்துவிடும் ஆர்வமும் இருக்கிறது. இருந்தாலும் அழகிய சொல் அதனால் விட்டுவிடலாம். ஜீவன் என்றால் உயிரினங்கள், காருண்யம் என்றால் கருணை. உலகில் இருக்கும் மற்ற உயிரினங்களையும் தன்னுயிர் போல பாவிக்கும் மனிதனின் மகா பண்பே இந்த ஜீவகாருண்யம்.
இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்லாது விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், புழுக்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் பொதுவானதே. மனிதனுக்கு உயிர் இருப்பதை போன்று இவை அனைத்திற்கும் உயிர் இருக்கிறது. மனிதனுக்கு ஆன்மா இருப்பதாக நம்பப்படுவதைப் போலவே இவற்றிற்கும் ஆன்மா இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. அதனால் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு நினைப்பதை பாவச் செயலாக கருதி வாழும் இந்திய மக்களை நான் கண்டேன் என மார்கோ போலோ தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுகிறார். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என வள்ளுவர் சொன்னதும் இதைதான். தனிப் பெரும் கருணை என வள்ளலாரின் வாக்கும் இதுவேதான். அட ஏன்! குருவிகள் குடித்துவிட்டு போகட்டுமே என மொட்டை மாடியில் தண்ணீர் வைப்பதற்கும், சாலையில் நசுங்கி கிடக்கும் தவளைக்காக கவலைப்படும் மான்ஸ்டர் மனதிற்கும் இந்த ஜீவகாருண்யமே காரணம்.
கண்ணனின் பெஸ்ட் பிரண்ட் குசேலரைப் பற்றி நமக்கு தெரிந்திருக்கும். வறுமையில் வாடிய அவர் ஒருமுறை கண்ணனைப் பார்க்க துவாரகைக்கு சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம், நடை பயணம், வெயில் வேறு வெளுத்து வாங்கியது. அவரது காலில் செருப்பு எதுவும் இல்லை. அவர் சென்ற பாதையில் நிழல் தரும் மரங்கள் நிறையவே இருந்தது. ஆனாலும் குசேலர் அந்த மரங்களின் நிழலில் நிற்காமல் காலை வைக்க முடியாத சூடு நிறைந்த சாலையிலேயே சென்றார். காரணம் இந்த கொளுத்தும் வெயிலுக்கு எறும்புகள், பூச்சிகள், புழுக்கள் என அந்த மரங்களின் நிழலில் தங்கியிருக்கும் என்பதால் அவையனைத்தும் காலில் மிதிபடுமே என அவர் வெயிலில் நடந்தார்.
சீத நீழற்செயில் சிற்றுயிர்த் தொகை
போதச் சாம்பும் என்று எண்ணிய புத்தியான்
ஆதவன் தவழ் ஆறு நடந்திடை
காதல் அங்கை விரித்துக் கவித்தரோ
போதச் சாம்பும் என்று எண்ணிய புத்தியான்
ஆதவன் தவழ் ஆறு நடந்திடை
காதல் அங்கை விரித்துக் கவித்தரோ
இந்த ஜீவகாருண்ய நிகழ்ச்சி குசேலோபாக்கியானத்தில் வருகிறது. இது போன்ற மற்றொரு நிகழ்ச்சி ஒரு சங்க இலக்கிய பாடல் வரிகளின் இடையில் அமைந்திருக்கிறது. அந்த வரிகள்.
பூத்த பொங்கர் துணையொடு வதித்த
தாது உண்பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
தாது உண்பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
இந்த பாடலின் வரிகளில் சங்ககால தலைவன் ஒருவன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். தலைவி வழி மேல் விழி வைத்து காத்திருப்பதால் அவசரமாக அதிவேகமாக தனது மணிகள் பூட்டிய தேரை அவன் ஓட்டி வருகிறான். அவன் வரும் வழியில் இரண்டு பக்கமும் பூத்துக்குலுங்கும் பூச்செடிகள் இருக்கிறது. அதில் வண்டுகள் ஜோடிகளாக தேனை குடித்துக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்த தலைவன் தனது தேரில் இருக்கும் மணிகள் எழுப்பும் ஓசையினால் அந்த ஜோடி வண்டுகள் பயந்து ஓடிவிடுமோ என அஞ்சுகிறான். அதனால் தன் தேரை நிறுத்தி அதிலிருக்கும் மணிகளில் உள்ள நாக்கு பதியை அசையாதவாறு சிறிய கயற்றால் கட்டிவிட்டு இனி ஜோடி வண்டுகளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என அங்கிருந்து புறப்படுகிறான்... அடடா! எவ்வளவு அழகான காட்சி... அடடா! எத்தனை பெரிய கருணை பாருங்கள். இந்த மனம்தான் ஜீவகாருண்யம். அந்த மனதோடு அகநானூற்றில் இடம்பெற்ற இந்த வரிகளைக் கொண்ட முழு பாடலையும் பார்த்துவிடலாம்.
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மெல் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார் செய்தன்றே கவின் பெறு கானம்,
குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண், தோன்றும், குறும்பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங்குன்றத்து அமன்ற காந்தள்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை, நின் மாண் நலம் படர்ந்தே.
பைங் காற் கொன்றை மெல் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார் செய்தன்றே கவின் பெறு கானம்,
குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண், தோன்றும், குறும்பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங்குன்றத்து அமன்ற காந்தள்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை, நின் மாண் நலம் படர்ந்தே.
பொருள்:
முல்லைக் கொடிகளில் கூர்மையான முனையை உடைய அரும்புகள் தோன்றிவிட்டன. தோற்றா மரம், கொன்றை மரம் அதன் அரும்புகளும் மலரத் தொடங்கிவிட்டன. இரும்பை போன்ற உறுதியான முறுக்கிவிடப்பட்ட பெரிய கொம்புகளைக் கொண்ட மான்கள் கற்களை உடைய பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு மகிழ்ச்சியில் துள்ளுகின்றன. ஒட்டுமொத்த காடும் அழகாக இருக்கிறது. இத்தனை நாளாக தண்ணீர் இல்லாமல் வருந்திய உலகத்தின் கவலையை போக்க மின்னல் வெட்டி மேகம் மழைத்துளியை கீழே இறக்க மழை பொழியத் தொடங்கி கார்காலம் வந்ததன் அறிவிப்பு இவைகள். சிறிய மலைகளைக் கொண்ட நகரத்தில் இருக்கும் ஊரில் மக்கள் திருவிழா கொண்டாடுகின்றனர். அந்த ஊருக்கு கிழக்கே இருக்கும் மலையில் காந்தள் மலர்கள் பூத்திருக்கின்றன. அந்த பூக்களைப் போன்று மணக்கின்ற அழகு உன்னுடையது. ஆகவே இந்த கார்காலத்தை பார்த்தவுடன் உன் காதலனுக்கு உன் நினைவு வரும். அவனுடைய தேரில் சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகளின் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டிருக்கும். அவை தங்களின் தலைகளை ஆட்டிக் கொண்டே ஓடும். உன் காதலன் வரும் வழியில் பூஞ்சோலை இருக்கும். அதில் யாழினைப் போன்று இனிமையாக இசைத்தபடி வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டே தேனினை குடித்துக் கொண்டிருக்கும். இதனைக் கண்டதும் தேரினில் வரும் அவன் நின்றுவிடுவான். தேரின் மணிச் சத்தத்தை கேட்டு வண்டுகள் பயந்துவிடாதபடி அவற்றை சப்தம் எழாதவாறு கட்டிவிடுவான். கவலைப்படாதே தோழி அவன் விரைந்து இங்கே வந்து விடுவான். உன் பிரிவுத் துயரமும் நீங்கிவிடும்.


