செர்னோபில் பாட்டிகள்.



1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ஸ்வீடன் நாட்டில் உள்ள போர்ச்மார்ச் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஒரு அணுமின் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணுக் கதிர்வீச்சின் கசிவை உணர்ந்து அபாய ஒலியை எழுப்பியது. அந்த அணுமின் நிலையத்திலிருந்த ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு ஏதேனும் விபத்து நிகழ்ந்ததா என பார்க்கத் தொடங்கினர். ஆனால் அதிஷ்டவசமாக அந்த அணுமின் நிலையத்தில் எந்த விபத்தும் நிகழவில்லை. இது அவர்களுக்கு சற்று ஆறுதலாய் இருந்தாலும் சரி அந்த பாதுகாப்பு உபகரணங்கள் காது கிழிய ஏன் கத்தியது என ஆராய்த்து பார்த்தனர். ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த கதிர்வீச்சு அவர்களின் அணுமின் நிலையத்திற்கு சுமார் 1100 கிலோமீட்டர் அதாவது மூன்று நாடுகளுக்கு அப்பால் இருக்கும் உக்ரைன் நாட்டிலிருந்து வந்தது என தெரிந்தது.

இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது 1986 -ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி உக்ரைன் நாட்டில் பிப்யாட் என்ற நகரத்திற்கு அருகிலிருக்கும் செர்னோபில் அணு உலையின் நான்காவது பிரிவில் நீரை குளிர்விக்கும் சாதனம் செயல்படாததால் அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. அந்த உருகுதலில் வெப்பம் அதிகரிக்க அந்த பகுதி வெடித்துச் சிதறியது. அந்நேரத்தில் அணு உலையிலிருந்து சுமார் இருபதிற்கும் மேற்பட்ட கதிர்வீச்சு பொருட்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. இந்த கதிர்வீச்சு பத்து ஹிரோஷிமா குண்டுகளை வெடித்ததற்கு சமமாக இருந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 31 நபர்கள் இறந்தனர். சில நாட்களுக்கு பின்பு அந்த ஆலையைச் சுற்றி வசித்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கதிர்வீச்சினால் தாக்கப்பட்டு இரத்தகுழாய் வெடித்து இரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்தனர். மனிதர்களை தவிர்த்து ஆடு மாடு குதிரை குருவி மீன்களோடு மரம் செடிகொடிகளும் கதிர்வீச்சினால் அழிந்துவிட, எச்சரிக்கையாக அந்த பகுதியை சுற்றியிருந்தவர் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் பின்வந்த காலங்களில் கதிர்வீச்சின் தாக்கத்தால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த விபத்தில் மறைமுகமாக இறந்தனர். உலகம் சந்தித்த மிகப் பெரிய அணு உலை விபத்து இதுவே. மேலும் அணுவை கையாளத் தெரியாத மனிதனின் கையாளாகாத தனத்தை காட்டிய சம்பவமும் இதுவே.


இந்த சம்பவம் நிகழ்ந்து முப்பது வருடங்களை தாண்டிவிட்டது. அணு உலையிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சின் தாக்கம் இன்றளவும் அங்கு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றும் மண்ணும் நீரும் விபத்தினால் உருக்குலைந்த பொருட்களும் கதிர்வீச்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் தாக்கம் குறைய இன்னும் 20000 வருடம் ஆகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஒவ்வொரு வருட வருவாயின் ஒரு பங்கை உக்ரைன் நாடு இதனை சரிசெய்ய செலவிட்டுவர, இந்த அணு உலையைச் சுற்றியிருக்கும் 2800 சதுர மைல்கள் மனிதர்கள் வசிக்க இயலாத No Man's Land என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்த தருணம் அணு உலையைச் சுற்றியிருந்த 116000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 1200 நபர்கள் மட்டும் அங்கிருந்து புறப்பட மறுத்தனர். அவர்களில் பலர் இறந்துவிட தற்போது அங்கு நூற்றிற்கும் மேற்பட்டவர் வசிக்கின்றனர். Babushkas என செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் அனைவரும் பெண்கள் அதுமட்டுமல்லாமல் எழுபது வயதை தாண்டிய முதியவர்கள். இந்த டாகுமெண்டரி பேய் கிராமங்கள் என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட அந்த செர்நோபில் பகுதியில் வசிக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் கதிர்வீச்சுகளுக்கிடையேயான அவர்களின் வாழ்தல் தன்னம்பிக்கையையும் விவரிக்கிறது.


தடை செய்யப்பட்ட பகுதி, கதிர்வீச்சின் தாக்கம் நிறைந்த பகுதி என தெரிந்தும் அவர்களால் அங்கு எவ்வாறு வசிக்க முடிகிறது?. இந்த கேள்விக்கான பதிலை டாகுமெண்டரியில் அவர்களே தருகிறார்கள். அந்த பதில்

1930 களில் இனப்படுகொலை அதனைத் தொடர்ந்து நிலவிய பஞ்சம், இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் ஆக்கிரமிப்பு, சோவியத் யூனியனின் கட்டமைப்பு இதனையும் தான்டி உக்ரைன் நாட்டின் இந்த பகுதி பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. இங்கு வாழும் நாங்களும் அதனை அப்படியே ஏற்று கடந்து வந்திருக்கிறோம். தற்போது இந்த விபத்தினால் ஏற்பட்ட கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சினால் எங்களை எதுவும் செய்ய இயலாது. அதுமட்டுமல்லாது இது எங்களது பிறந்த மண்.

சொல்ல மறந்துவிட்டேன். Babushkas என்ற உக்ரைனியன் வார்த்தைக்கு பாட்டி என்று பொருள். நேரம் கிடைத்தால் துணிச்சலான அந்த பாட்டிகளை இந்த டாகுமெண்டரி மூலம் சந்தியுங்களேன்.



  • The Babushkas of Chernobyl
  • Directed by - Anne Bogart, Holly Morris
  • Written by - Holly Morris
  • Cinematography - Japhet Weeks
  • Music - Rob Teehan
  • Country -USA
  • Language - English
  • Year - 2016
 🔗 தனிப்பட்ட பக்கங்களை காண 

🔗 டாகுமெண்டரியை காண