காஸ்பர் - குட்டி பேய்.
வால்ட் டிஸ்னியின் புண்ணியத்தில் கார்டூன்கள் என்றால் என்ன? அனிமேஷன் தொழில்நுட்பம் என்பது என்ன? என தெரியவர, அந்த காலத்தில் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு போட்டியாக பாராமவுண்ட் நிறுவனத்தார் முளைத்திருந்தனர். திரைப்படங்களை தயாரித்துவந்த அந்த நிறுவனத்தார் பேமஸ் ஸ்டுடியோ என தனியாக ஆரம்பித்து காமிக்ஸ் என சொல்லக்கூடிய குழந்தைகள் புத்தகங்களில் உள்ள கதாபாத்திரங்களை கார்டூன்களாக உருவாக்கினர். அவற்றுள் மேக்ஸ் அண்ட் டேவ் ஃபிளீஷர், பப்பாய், சூப்பர் மேன், லிட்டில் ஆட்ரி, லிட்டில் லுலூ, ஹெர்மன் அண்ட் காட்னிப், பேபி ஹ்யூய் போன்றவை பிரபலமாக இருந்தன. மேலும் அவர்கள் சில சிறுசிறு காமிக்ஸ் புத்தங்களின் கதைகளை நாவல்டூன்ஸ் என்ற பெயரில் கார்டூன்களாக தயாரித்தனர். அதில் காஸ்பர் தி ஃபிரண்ட்லி கோஸ்ட் குறிப்பிடத்தக்கது.
எலி, பூனை, நாய், நரி, வாத்து, கோழி, குருவிகள் எல்லாம் கார்டூன்களாக பேசத் தொடங்க இந்த தொடரில் சற்று புதுமையாக காஸ்பர் என்ற குழந்தையின் ஆவி சாகசங்களை செய்தது. 1930 ஆம் ஆண்டு சீமோர் ரீட் மற்றும் ஜோ ஓரியோலா என்பவர்கள் இணைந்து காமிக்ஸ் புத்தகத்திற்காக காஸ்பரை உருவாக்கினார். பிறகு இந்த புத்தகத்தின் உரிமையை பாராமவுண்ட் நிறுவனத்திற்கு அவர்கள் விற்க, 1949 ஆம் ஆண்டு தேர் காட் பாஸ் டுநைட் மற்றும் எ ஹன்டிங் வி வில் கோ என்ற குறுந்தொடரில் காஸ்பர் முதன்முதலாக அறிமுகமானது. சிறுதுகால இடைவெளிக்கு பின்பு 1959 வாக்கில் காஸ்பர் தனி தொடராக வெளிவந்தது. காமிக்ஸ் புத்தகங்களுக்கு பெயர்போன ஹார்வி நிறுவனத்தார் இந்தமுறை காஸ்பரை அழகாக்கினர். காஸ்பர் ஒரு இறந்துபோன குழந்தையின் ஆவி. ஆயுட்காலம் முடியாமல் இறந்துபோனவர் ஆவிகளாக தனது மீத வாழ்க்கையை வாழ அலைவார்கள் என்ற மூடநம்பிக்கை உலகத்தில் உள்ள எல்லா நாட்டிலும் இருக்கிறது. இந்த தொடரில் வரும் காஸ்பரும் தனது மீத வாழ்க்கையை வாழவும் தனக்கென நண்பர்களை தேடிக்கொள்ளவும் அலைவதாக இந்த தொடர் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் காஸ்பருடன் வெண்டி என்ற பெண்ணும் எக்கோ, ஸ்ட்ரெச்சோ, ஃபெட்ஸோ என்ற மூன்று ஆவிகளும் மேலும் பல கதாபாத்திரங்களும் இணைந்து ரசிக்க வைத்தனர். பின்நாட்களில் கார்டூன் தொடராக மட்டுமல்லாமல் மூழு நிள திரைப்படமாகவும் வந்து காஸ்பர் ரசிகர்களை கவர்ந்தது. கார்டூன் உலகம் என்ற இந்த பகுதியில் அடுத்து என்ன எழுதலாம் என யோசிக்க இந்த காஸ்பர் நினைவு வந்தது. அவற்றோடு சிறு தகவலுடன் காஸ்பர் தி பிரண்ட்லி கோஸ்ட் கார்டூன்கள் சிலவற்றை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.