நிழலற்ற பெருவெளி.



ராணுவ கைதிகள், அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுபவர்கள், தங்கள் இனத்திற்கு அச்சுறுத்துபவர்களாக இருப்பவர்கள், கொள்கைக்கு நேர்மாறாக நடப்பவர்கள் என எதற்கும் உடன்படாதவர்களை எதிரிகளாக, தேசத் துரோகிகளாக கருதி அவர்களை சித்ரவதை செய்து கொல்லும் கொடுமையான பழக்கம் எல்லா நாட்டிலும் வழக்கத்தில் இருக்கிறது. அன்று முதல் இன்றுவரை அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது இந்த நாவல். மொராக்கோ நாட்டு அரசன் ஹாசன் II என்பவனுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு சதிதிட்டம் தீட்டப்பட்டதாக அதற்கு சம்பந்தமில்லாமல் கைதான இராணுவ வீரர்களின் இருட்டு அறைக்குள்ளான மீதமுள்ள வாழ்க்கையை பற்றியே இந்த நாவல் பேசுகிறது.

மொராக்கோ நாட்டில் தஜ்மாமார்ட்டில் உள்ள பாலைவனத்தில் இருக்கிறது அந்த ரகசிய சிறை. எதிரில் இருப்பது என்னவென்று தெரியாத அளவிற்கான இருள், எழுந்தால் தலை தட்டும் உயரம், குடலைப்புரட்டும் நாற்றம், எலி கூட வாழ முடியாத தேள்கள் நிறைந்த அறைகளை கொண்ட, நரகத்தை கண்முன்னே காண்பதைபோன்ற மோசமான சூழ்நிலை நிழவும் அந்த ரகசிய சிறையில் அரசருக்கு எதிராக சதிதிட்டம் தீட்டியதாக பல இராணுவ வீரர்கள் கைதிகளாக அடைக்கப்படுகின்றனர். அவர்களில் சலீம் என்பனும் இருக்கிறான். அந்த சலீமின் சுயசரிதையாக இந்த நாவல் பயணிக்கிறது.

வெளிச்சம் ஏதுமற்ற இருட்டு அறையில் ஒளியைத்தேடி எப்படியும் விடுதலையாகி விடுவோம் என்ற நினைப்பில் உயிர்வாழ்தலுக்காக தினம் தினம் செத்துப் பிழைக்கும் கைதிகளின் பசியையும், தாகத்தையும், பொறாமையையும், முரண்பாட்டையும், வஞ்சத்தையும், கழிவிறக்கத்தையும், காழ்ப்புணர்ச்சியையும், ஒருவருக் கொருவர் நட்பு பாராட்டி உதவிக் கொள்ளும் பக்குவத்தையும், இந்த கொடுமை தாங்காது உயிர் நீத்தவர்களையும் சலீம் தனது சொந்த கதையை ஆங்காங்கே இடைச் சொறுகலாக சேர்த்து இந்த நாவலில் சொல்லியிருக்கிறான்.

ரகசிய சிறையில் சலீம் தன் தனிமையை, வலியை, சோர்வை அதைவிட பசியை போக்க ஒருகட்டத்தில் ஞானத் தேடுதலிலும் ஈடுபடுகிறான். தன்னைப்போல கைதியாக அடைபட்டுகிடப்பவர்களிடம் அன்போடும் ஆறுதலோடும் நடந்துகொள்கிறான். கைவிடப்பட்ட ஒரு தந்தையின் மகனாக, அன்னையின் அன்புக்காக ஏங்குபவனாக, முறைப்பெண்ணின் காதலுக்கு காத்திருப்பவனாக, இராணுவத்தில் சேர்ந்து சாதிக்க விரும்பியவனாக, தன் நாட்டின்மீது நேசங் கொண்டவனாக, சூழ்நிலையால் மரண தண்டனைக் கைதியாக, ஒவ்வொரு நாளையும் இதுவே கடைசி நாளாக நினைத்து நிழலற்ற பெருவெளியில் தன்னிலையில் அவன் வாழ்க்கையை கடத்துகிறான். இத்தனைக்கும் சலீமின் தந்தை அரசனுக்கு வலதுகரமாக இருப்பவர். இருந்த போதிலும் சலீமால் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட முடிந்தது விதியே.

இந்த நாவலை சலீம் கைதி நம்பர் 7 என்ற ஒருவனின் சுயசரிதை என ஒதுக்கி பார்க்க இயலாது. இன்று உலகில் இருக்கும் அத்தனை சிறைகளில் இருக்கும் அப்பாவிகளின் குரலாகவும், அடைத்து வைத்திருந்தாலும் அந்த குரல்களை அடக்கி வைக்க முடியாது என்பதையும் இந்த நாவலின் மூலம் உணரலாம். இந்த நாவல் ஒரு கற்பனை கதைதான். ஆனாலும் ஒரு கைதியின் இருள் சூழ்ந்த சிறை வாழ்க்கையை அவனது நினைவுகளாக, ஆங்காங்கே தத்துவ தேடுதலாக, பக்தி மார்க்கமாக, அரசாங்கத்தை சாடுபவதாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, ஒரு கதம்பகமாக, காட்சிப் படிமமாக கதை பிரதிபலிப்பதால் அது உண்மையாக இருக்கக்கூடும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.


இந்த நாவலை எழுதியவர் தாஹர் பென் ஜீலோவ்ன். மொராக்கோவில் பிறந்து தற்போது பிரான்ஸில் வசிக்கும் இவர் எழுத்தாளர், கவிஞர், அரசியல் விமர்சகர், மதப்பற்றாளன் என பன்முகம் கொண்டவர். சிலகாலம் இவர் அரசாங்கத்திற்கு எதிராக தன் பேனாவிற்கு மை நிரப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் தாக்கம் இவரது பெரும்பாலான கதைகளில் காண முடிகிறது. ஜீலோவ்ன் இந்த நாவலை பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தார். அதனை லிண்டா கவர்டேல் என்பவர் This Blinding Absence of Light என்ற பெயரில் ஆங்கிலத்தில் பொழிபெயர்க்க எஸ். அர்ஷியா தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிச்சையம் கொண்டாடப்பட வேண்டிய புத்தகம்.  வாசித்துப் பாருங்கள்.

நிழலற்ற பெருவெளி
தாஹர் பென் ஜீலோவ்ன்
எதிர் வெளியீடு