இந்திய பாப் இசையின் தொடக்கம்.

ரியா தெரியுதா?
...
இல்ல.
...
இப்போ?
...
இல்ல.
...
இப்ப பாரு?
...
ம் ...தெரியுது - என மொட்டைமாடியில் ஆன்டெனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக ஏங்கிய பசுமையான காலம் போக கேபிள் டிவி என்ற சிறிய ஒயர் மட்டும் இந்திய வீடுகளில் நுழைந்த தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் இந்திய பாப் இசையும் வளர்ச்சி பெற்றது. எழுபதுகளில் ஜாஸ் இசையும் டிஸ்கோவும் உலகமெங்கும் பிரபலமாக இருக்க பாப் இசை உருவாகியது. இந்தியாவிலும் சிலர் அதே பாணியில் பாடல்களை உருவாக்கியிருந்தனர். ஆனால், பொதுவாக இந்தியாவில் திரைப்படங்களே முதன்மையான பொழுதுபோக்கு என்பதாலும் அவற்றில் எப்படியும் ஐந்தாறு பாடல்கள் தவறாமல் இடம்பெற்று விடுவதாலும் மேற்கத்திய பாணியில் அமைந்த இசை  ஆல்பங்களுக்கு அப்போது இடமில்லாமல் இருந்தது. பிறகு கேபிள் டிவியின் துள்ளியத்தில் தெரிந்த M TV மற்றும் V  போன்ற வெளிநாட்டு சேனல்களின் புண்ணியத்தால் பாப் இசை என்பது என்ன என்றும், அதற்கென தனி ரசனையும் உருவாகியது. அந்த ரசனையோடு அந்த காலகட்டத்தில் சினிமா பாடல்களை தவிர்த்து பலரும் பாப் இசை பாடல்களை உருவாக்கினர். அவர்களில் ஷரோன் பிரபாகர், பீனாஸ் மசானி, உஷா உதூப், ஃபல்குனி பதக், டேலர் மெஹந்தி, பாபா சேகல், அலிஷா சினாய், லக்கி அலி, சாந்தனு முகர்ஜி, ஷிலா கான், ஸ்வேதா ஷெட்டி, சுபா முட்கல், சோனு நிகாம், அனாமிகா அட ஏன் நம்ம குண்டு பையன் அட்னன் சாமி என பலரை இதில் குறிப்பிட்டு சொல்லலாம். தமிழில் கூட லால்குடி சுபா, ஷாலினி, சுரேஷ் பீட்டர் போன்றவர் இதில் பிரபலமாக இருந்தனர்.


ஆரம்பகால இந்திய பாப் இசை பாடல்களில் ஆடை குறைப்பு, பார்ட்டி, பார் , பப், டிஸ்கோ, கலாச்சாரம், காமா சோமா போன்ற மேற்கத்திய தாக்கம் அப்படியே இருந்தது. சில பாடல்கள் ஆங்கில மற்றும் பிறமொழி பாடல்களின் மெட்டுக்களை தழுவியே இருந்தது. அதையும் தாண்டி சில ரசிக்க வைத்தது. பிறகு வந்த காலங்களில் இந்திய பாப் இசை பல மாறுதல்களை பெற்றது. இன்று இந்திய பாப் இசை பாடல்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகள் இணைந்த இந்தியன் பாப் இசை தனி இடத்தையும் பெற்றிருக்கிறது. Hip Hop, Mash up, Thumbs up என பாப் இசையின் வடிவங்கள் மாறிக் கொண்டே வருகிறது. மொட்டை மாடியில் தொடங்கி பாத்ரூமில் பாடுபவர்கள் எல்லாம் ஆளுக்கொரு ஆல்பங்களை தற்போடு வெளியிட இந்திய பாப் இசையின் தொடக்கத்தில் வெளிவந்த அடியேன் ரசிக்கும் சில பாடல்களை இங்கு சற்று அசைபோடுகிறேன்.

பாடல்களைக் காண