ஆறு பிரச்சனைகள்.
மனுசனா பொறந்ததைவிட ஒரு மாடா பொறந்திருக்கலாம். ஆடு, கோழி, குருவி, வாத்து, நாய், நரி, சிங்கம், புலி, கரடியாக அட ஏன்? மரம் செடி கொடியாகக் கூட பிறந்திருக்கலாம் என்ற எண்ணம் எப்போதாவது எல்லோருக்குள்ளும் வந்திருக்கக்கூடும். சிலர் வெளிப்படையாகவும் சொல்லியிருப்பார்கள். அப்படி என்றால் மனிதனைத் தவிர இந்த உலகத்திலிருக்கும் மற்ற உயிர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறதா என்றால்? ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தற்போதைய சூழலில் மனிதனுக்கு இருக்கும் ஆறு தலைபோகிற பிரச்சனைகள் மற்ற உயிரினங்களுக்கு கிடையாது என்பதே உண்மை... அது என்ன மனிதனுக்கு இருக்கும் ஆறு பிரச்சனைகள்?... பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் இருப்பிடம்.
ஆடு மாடுகள் எல்லாம் தனக்கொரு வீடு வாசல் தோட்டம் தொரவு இல்லையே என கவலைப்படுவதில்லை. அவைகளுக்கு யாதும் ஊரே எவ்விடமும் வீடே. ஆனால் மனிதனுக்கு அது தேவைப்படுகிறது. ஒருவன் அந்தஸ்தானவன் என காட்டிக்கொள்ள இந்த வீ வா தோ தொ மிகமிக அவசியம். அதனால்தான் மனிதன் மலைகளையும் காடுகளையும் விளைநிலமாக்கி, விளைநிலங்களை குடியிருப்புகளாக்கி, குடியிருப்புகளை கட்டிடங்களால் நிரப்பி, கட்டிடங்களை உயர்த்தி வானம் தொட முயற்சிக்கிறான்.
இரண்டாவது ஆடை.
கோழி குருவி வாத்து கொக்கு இவைகள் நல்ல டிரஸ் இல்லையே என ஏங்குவதில்லை. பாம்பிற்கு மட்டுமே சட்டை பிரச்சனையாக இருக்க மற்றதெல்லாம் பிறந்த - திறந்த மேனிக்கு ஹாயாக திரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் ஆள் பாதி ஆடை மீதி. ஒருவன் அணிந்திருக்கும் ஆடையை வைத்து அவனது குணாதிசயங்கள் அளவிடப்பட, ஆதே ஆடையை வைத்து நாகரீகம் எனவும் கலாச்சார சீரழிவு எனவும் அவனால் சண்டையிட்டுக் கொள்ள முடியும். இதில் சிவப்பு சட்டை, கருப்பு சட்டை, காவி சட்டை, பச்சை சட்டை, நீல சட்டை என்ற அடையாளங்களும் அவனுக்கு தேவைப்படுகிறது.
மூன்றாவது கல்வி.
குதிரையும் நாயும் நரியும் தன் பிள்ளைகளின் அட்மிஷனுக்காக எந்த தனியார் பள்ளி வாசலிலும் நிற்பதில்லை. மேலும் சமச்சீர், மெட்ரிக், சிபிஎஸ்இ இதில் எந்த கல்வி முறையை தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகம் அவைகளுக்கு கிடையாது. மொழியை எடுத்துக்கொண்டால் தாய்மொழியா ஆங்கிலமா அல்லது தேசியமா என்ற குழப்பமும் அவைகளுக்கு எழுவதில்லை. முக்கவும் முனகவும் கத்தவும் கதறவும் பொது மொழி தெரிந்தவை அவைகள். ஆனால் இது மனிதரிடத்தில் சாத்தியப்படாது.
நான்காவதாக வேலை வெட்டி.
வேப்ப மரமும் புளிய மரமும் வேலை தேடி அலைவதில்லை. வெயிலில் நின்றோமா, நீரை உறிஞ்சினோமா, CO2 வை இழுத்து O2 வை வெளியிட்டு பச்சையத்தை தயாரித்தோமா, வளர்ந்தோமா, காய்த்தோமா, கனிந்தோமா, உதிர்ந்தோமா என அவைகள் தோமா வாழ்க்கை நடத்துகின்றன. ஆனால் மனிதன் வேலை தேட தன் வாழ்நாளில் அரை ஆயுட்காலத்தை செலவழிக்கிறான். அப்படி தேடிக் கிடைத்த வேலையில் திருப்தியில்லாமல் என்னமோ போடா மாதவா என மீதி அரை ஆயுட்காலத்தை கடத்துகிறான்.
ஐந்தாவது மிகமுக்கியமான வாழ்க்கைத் துணை.
ஹாய்...ஹவ் ஆர் யூ...உன்ன எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...நீ ரொம்ப அழகா இருக்க... ஐ லவ் யூ... கர்ர்ர்... உர்ர்ர்... கொர்ர்ர்... சிங்கத்திற்கும் புலிக்கும் சிறுத்தைக்கும் சுலபமாக துணை கிடைத்துவிடும். மனிதனும் இதுபோன்று பிளே பாய் பிளே கேர்ள் பருவத்தில் எளிதாக தனக்கொரு ஜோடியைத் தேடி ஊர் சுற்றித் திரிந்தாலும், நிரந்தர வாழ்க்கைத் துணை என வரும்போது பல சோதனைகளை கடந்து சர்வ ஜாக்கிரதையாக தேர்ந்தெடுக்கும் கவலை அவனுக்கு ஏற்படுகிறது. எங்காவது சிங்கம், புலி, கரடி இவைகளுக்கு மேட்ரிமோனி இருக்கிறதா?. பாருங்கள் மனிதனுக்குள்தான் எத்தனை பிரிவினைகள், ஜாதிக்கு ஒன்றாக எத்தனை மேட்ரிமோனிக்கள்.
கடைசியாக பணம்.
எந்த காக்கையும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதில்லை. மேலும் அது ரசியமாக வைத்திருக்கும் பணத்தையெல்லாம் கொண்டு வருகிறேன் பார் என எந்த குள்ள நரியும் சவால் விடுவதில்லை. காக்கை நரி மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்கள் அனைத்திற்குமே பணம் என்றால் என்ன என்பதே தெரியாது. ஆனால் மனிதனுக்கு பணத்தை தவிர எதுவுமே தெரியாது. அதை பெறுவதற்காகவும் பெற்றதை சேமிப்பதற்காகவும் மட்டுமே அவன் வாழ்கிறான். அத்தகைய பணத்தை வைத்து மனிதன் மேலே குறிப்பிட்ட ஐந்து பிரச்சனைகளை ஓரளவிற்கு சரிகட்டிக் கொள்கிறான். இருந்தாலும் போதும் என்ற மனம் வாய்த்த மனிதனும், பணத்தைப் பற்றிய கவலையில்லாத மனிதனும் யாருமே இல்லை.
வேடிக்கையாகச் சொன்னாலும் இயற்கையை பொருத்தவரைக்கும் உலக உயிர்கள் அனைத்தும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அதன் நியதியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களுக்கு கொடுக்காத வலுவான ஆயுதத்தை அது மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு ஆறு பிரச்சனைகள் என்ன ஆறு கோடி பிரச்சனைகளையும் மனிதனால் சமாளிக்க முடியும். அப்படி இயற்கை மனிதர்களுக்கு மட்டும் கொடுத்த அந்த ஆயுதம் என்ன தெரியுமா? ...அதாங்க புத்தி.