பிரேமசூத்திரம்.
லூசிபர், மதுரராஜா, உயரே, அதிரன் போன்ற மலையாளத் திரைப்படங்கள் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளைத் தாண்டியும் சக்கைபோடு போட அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளிவந்த திரைப்படம்தான் பிரேமசூத்திரம். மலையாள எழுத்தாளர் அசோகன் சாருவால் என்பவரது ஜலஜீவிதம் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்த ஒரு கதையைத் தழுவி நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக ஜிஜூ அசோகன் இதனை இயக்கியிருந்தார். என்பது மற்றும் தொன்னூறுகளில் பள்ளிப்பருவத்து இளமையான காதலும் அதனுடன் போட்டி பொறாமை கலந்த முட்டலும் மோதலும்தான் இதன் கதை. செம்பன் வினோத் ஜோஸ், அனுமோள், பாலு வர்கீஸ், லிஜோமால் ஜோஸ் போன்றவர்கள் இதில் வெகு இயல்பாக நடித்திருந்தனர். அதிலும் பக்கத்துவீட்டு பையன் போன்ற பாலு வர்கீஸும் தூங்கி எழுந்து முகம் கழுவி அப்படியே நடிக்க வந்ததுபோல இருக்கும் லிஜோமால் ஜோஸும் இதில் அழகாக இருந்தனர். மலையாளத்தில் வருடத்திற்கு குறைந்தது பத்து படத்திற்காவது இசையமைத்துவிடும் கோபி சுந்தர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவரது இசையமைப்பில் நோட்புக், அன்வர், பிளாக் பட்டர்ஃபிளை, ஏபிசிடி, சார்லி, பெங்களூர் டேஸ் போன்ற திரைப்படங்கள் பெறும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சுமார் ரகமே என்றாலும் பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அமைப்பில் இருக்க கேட்பவர்களை அவை முணுமுணுக்கச் செய்தது.
ஒரு திரைப்படத்தில் ஏதாவது ஒன்றிரண்டு பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கும். அவற்றை சேமித்து பிடித்த பாடல்கள் வரிசையில் சேர்த்து எப்போதாவது கேட்பதுண்டு. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே கேட்கத் தக்கவையாக இருக்கிறது. பழைய பாடல்கள் மற்றும் வேற்றுமொழி பாடல்களிலிருந்து மெட்டுகளை காப்பி செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் எதிர் விமர்சனமும் இசையமைப்பாளர் கோபி சுந்தர்மீது இருக்கிறது. அதையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் நிச்சையம் ரசிக்கலாம்.
பாடல்களைக் காண....