ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்.
சங்கால புலவர்கள் மன்னனை புகழ்ந்து பல பாடல்களை இயற்றியுள்ளனர். மன்னர்களும் சில பாடல்களை இயற்றியுள்ளனர். காரணம் மொழிப்பற்று. அன்றும் இன்றும் என்றும் ஆள்பவர்கள் மொழியின் ரசிகர்கள். சங்ககால மன்னர்கள் மன்னனுக்கு உண்டான வேலைகள் எல்லாம் போக அட்மின்கள் வைத்துக்கொள்ளாமலேயே பல பாடல்களை தாமே இயற்றியிருக்கின்றனர். அவர்களில் ஒருவன்தான் கடைச்சங்கத்தில் வாழ்ந்த பூதப்பாண்டியன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று சொன்னால் தெளிவாகப் புரியும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தற்போது திருச்சி மாவட்டத்தோடு இணைக்கப்பட்ட ஒலியமங்களம் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதியே ஒல்லையூர் அல்லது ஒல்லைநாடு என அழைக்கப்பட்டது. சோழநாடு மற்றும் பாண்டிய நாட்டிற்கு எல்லையாக வெள்ளாறு இவற்றை பிரிக்க எல்லை என்றாலே தொல்லைதான் என இருநாட்டிற்கு இடையில் சிக்கி ஒல்லையூர் பல போர்களை சந்தித்திருக்கிறது. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் என்ற சோழ மன்னன் பாண்டிய மன்னனிடம் போரிட்டு இந்த கலவர பூமியை தனதாக்கிக் கொண்டான். பிறகு பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் எற்பவன் பெருஞ்சாத்தானை வென்று ஒல்லையூரை பாண்டிய நாட்டுடன் இணைத்துக்கொண்டான். வெள்ளாற்று எல்லையிலிருக்கும் தென்கரை அல்லது தென்கோனாக்காடு பகுதியே இவர்களின் போர்க்களமாக இருந்திருக்கிறது. பாண்டிய நாட்டுடன் இணைந்த ஒல்லையூர் மக்கள் அதனை பெருமையாக கருதினர். அதனால் தங்களை உடமையாக்கிக் கொண்ட மன்னனை ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என அழைத்தனர். அவன் சிறந்த வீரன், வள்ளல் குணமுடையவன், ஓரளவிற்கு மொழிப்பற்றும் கொண்டவன். அவனைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். அந்த ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் தன் பங்கிற்கு இரண்டு பாடல்களை (அகநானூறு, புறநானூறு) இயற்றியிருக்கிறான். அவற்றுள் புறநானூற்று பாடலை மட்டும்
பார்க்கலாம்.
பார்க்கலாம்.
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!
முன்பே குறிப்பிட்டதுபோல் பூதப்பாண்டியனுக்கு எல்லைமேல் தொல்லை. ஒருமுறை சேர சோழ மன்னர்கள் இவன்மீது படையெடுத்து வர அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறேன் என வஞ்சினமாக அதாவது பெரும் கோபத்துடன் சவால் விடுப்பதைப்போல இந்த பாடலை அவன் இயற்றியிருக்கிறான். இதே போரில் அவன் இறந்ததாகவும் சொல்வதுண்டு.
பொருள்:
சிங்கத்தை போல பெரும் சினத்துடனும், உறுதியான மனதுடனும், வலிமையான படையுடனும் வேந்தர்கள் (சேர சோழன்) ஒன்றுகூடி போர் செய்ய வேண்டுகின்றனர். அவர்கள் அலறுமாறு போர் புரிந்து தேரில் இருந்தபடியே அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வேன். அப்படி செய்யத் தவறினால், பெரிய மை தீட்டிய கண்களையுடைய இவளை (அவனது மனைவியை) நீங்குவேனாக. மேலும் அறநிலை மாறாது அன்போடு கூடிய தன் அரசவையில் தகுதியற்ற ஒருவனை ஆட்சியில் அமர்த்தி கொடுங்கோல் புரியச் செய்பவன் ஆவேன். மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில் என்றுமே பொய்க்காத வருவாய் உடைய மையல் என்ற பகுதிக்கு தலைவனான மாவன் என்பவனையும், நிலைபெற்ற அரண்களை உடைய ஆந்தை என்பவனையும், புகழமைந்த அந்துவஞ்சாத்தானையும், அதன் ஆழிசி என்பவனையும், சினமிக்க இயக்கனையும் இவர்களோடு கொண்ட நட்பையும் அதனோடு கூடிக்கழிக்கும் மகிழ்ச்சியினையும் நான் இழந்தவனாவேன். இறுதியாக நான் மறுபிறவியில் மக்களை பாகுகாக்கும் பெருமைமிக்க பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற குடியில் பிறப்பேனாக.
இந்த பாடலின் உட்கருத்தை பூதப்பாண்டியன்வழி பார்க்க, முதலில் மனைவி மக்கள் என இல்லறம் சிறக்க வாழ்பவனே சிறந்த ஆட்சியாளன் என அவன் கருதுகிறான். தன்னைவிட்டு எதுவும் தெரியாத ஒருவனை ஆட்சியில் அமர்த்த அது கொடுங்கோலாட்சியாக மாறிவிடும் என்பதை அவன் உணர்த்துகிறான். மாவன், ஆந்தை, அஞ்சுவஞ்சாத்தான், அதன் ஆழிசி, இயக்கன் இவர்களின் (இவர்கள் ஐம்பெருங்குழுவைச் சேர்ந்தவர்கள். மன்னர்கள் நல்லாட்சி புரிய இதுபோன்று ஐம்பெருங்குழு, எண்பேராயம் என இருந்திருக்கிறது) நட்பை பாராட்டுவதால் சிறந்த நட்பு ஆட்சிக்கும் தூணாக இருக்கும் என அவன் தெளிவுபடுத்துகிறான். இறுதியில் நல்ல குடியில் பிறக்காமல் போவேன் என குறிப்பிடும்போது தன் இனத்தையும் அவன் தூக்கிப்பிடிக்கிறான்.