சாம்பல் நிலம்.

காரணத்தோடுதான் போர்கள் தொடங்குகிறது, விளைவுகளோடுதான் அது முடிகிறது. போர்களால் என்ன கிடைக்கப்பெறும்? சிக்கலான இந்த கேள்விக்கான பதில் முரணாக இருந்தாலும் வளர்ந்த நாடுகள் சேர்ந்து அரபுதேசங்களின் மீது தொடுக்கப்படும் போர்களால் எண்ணெய் நிச்சையம் கிடைக்கும். ஈரான் ஈராக் தொடங்கி ஆப்கானிஸ்தான் சிரியா போர்கள் வரை இதற்கு சாட்சியாக கூறலாம். இந்த திரைப்படம் ஆப்கானிஸ்தான் மீது தொடுக்கப்பட்ட போரின் விளைவுகளை மறைமுகமாக பிரதிபலிக்கிறது.



வயதான பெரியவர் தஸ்தாஹீர் என்பவர் தனது ஐந்து வயது காதுகேளாத பேரன் யாசினுடன் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு வருகிறார். தனது மகனை தேடிவரும் அவரிடத்தில் தனது குடும்பத்திலிருந்தவர்களில் அந்த சிறுவனின் தாய் உட்பட அனைவரும் தற்சமயம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இறந்துவிட்ட துக்க செய்தி இருக்கிறது. தானும் தனது பேரனும் மட்டும் ஏதோ பிழைத்திருக்க அதனை தெரிவிக்கும் பொருட்டே அவர் தன் மகனைத் தேடி அங்கு வருகிறார். எல்லையை வந்தடையும் அவர் கிராமத்தை நோக்கி நடை பயணமாக செல்கிறார். அவர் செல்லும் கிராமம் முழுவதும் போரினால் முற்றிலும் அழிந்த நிலையில் தன் மகன் தொலைவிலிருக்கும் சுரங்கத்தில் இருப்பதாக அறிந்து கொள்கிறார். இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்திலிருந்து புறப்படும் அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானின் அந்த எல்லைப் பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து தன் மகன் இருக்கும் சுரங்கத்திற்கு செல்ல திட்டமிடுகிறார்.  எல்லைப்பகுதியில் அதற்காக அவர் தன் பேரனுடன் காத்திருக்க அங்கு கடை வைத்திருக்கும் மிர்ஷா என்பவரின் நட்பு கிடைக்கிறது. அதன் மூலம் சோர்ந்துபோன வாழ்க்கையில் புது உற்சாகமும் கிடைக்கிறது. சேட்டையும் குறும்பும் நிறைந்த தன் பேரனால் சுரங்கத்திற்கு செல்லும் சில வண்டிகளை அவர் தவறவிட அந்த கடைக்காரரிடம் தனது பேரனை ஒப்படைத்துவிட்டு  பெரியவர் மட்டும் தன் மகனைத் தேடி இந்தமுறை தனியாக பயணத்தை தொடர்கிறார். அந்த பயணத்தில் அவர் தனது மகனை கண்டுபிடித்தாரா? தனது இருப்பையும் தனது குடும்பத்தின் இறப்பையும் மகனுக்கு தெரியப்படுத்தினாரா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.


தாத்தா மற்றும் பேரன் இருவரின் பயணமே கதை என இந்த திரைப்படத்தை ரோடு சைடு மூவி என எளிதாக வகைப்படுத்திவிடலாம். ஆனால் இருவரின் பயணத்தில் ஆப்கானிஸ்தானின் பாலைவனமான எல்லைப்பகுதி, அங்கு போரினால் சிதைக்கப்பட்ட இடங்கள், முற்றிலும் அழிந்த கிராமம், ஆங்காங்கே தென்படும் கல்லரைகள், சுட்டு வீழ்த்தப்பட்ட பீராங்கி,என திரைப்படத்தில் வரும் பின்புல காட்சிகளும், எந்த உறவோ தெரியாது அந்த உறவின் இரத்த கரையோடு இருக்கும் மனிதர்கள், அவ்வபோது எல்லையை கடக்கும் அகதிகள், கண்ணிவெடியில் இறந்துபோகும் ஆடு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட தாலிபான் கைதி, என திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களும் ஆப்கானிஸ்தான் போரின் அவலங்களை உலகத்திற்கு அறிவிக்கின்றன. அதிலும் பெரியவரின் நினைவில் அடிக்கடி வரும் அவரது மருமகளின் இறப்பு நெஞ்சை கனக்கவும் செய்கிறது.

இந்த திரைப்படம் ஆப்கானிஸ்தானின் வடக்கே பால் இ கேம்ரி பகுதியில் உள்ள எரிக் பாலைவனப்பகுதியில் முழுவதும் படமாக்கப்பட்டிருக்கிறது. புழுதி படிந்த மஞ்சள் நிற காட்சிகளும் அவ்வபோது மென்மையாக ஒளிக்கும் இசையும் திரைப்படத்திற்கு உயிரூட்டுகிறது. அந்த பெரியவர் அவரது பேரன் என கதைமாந்தர்கள் அனைவரும் இயல்பாக உலாவர, ஆப்கானிஸ்தானில் பிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குயனரான அட்டிக் ரஹிமி தான் எழுதிய கதையை திரைப்படமாக எடுத்திருக்கிறார். ரஹிமி தனது உணர்வுகளை தனது படைப்புகளின் மூலம் காட்டத் தவறுவதேயில்லை. அதுமட்டுமல்லாமல் கதையின் முடிவை காண்பவரிடத்தில் விட்டுவிடும் வித்தையும் அதனைக் கொண்டு  கேள்விகளை கேட்கும் யுக்தியும் அவருக்கு தெரிந்திருக்கிறது. இந்த திரைப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்தபின்பு சில கேள்விகள் எழத்தான் செய்கிறது. அவை

போர்களால் எதை ஜெயிக்க முடியும்?..

இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது என்றால் ஏன் இத்தனை வன்மம்? ..

சொர்க்கத்தின் வண்ணம் சிவப்பா வெள்ளையா?..

கடைசியில் எல்லாவற்றிற்கும் கடவுளை சாட்சிக்கு இழுக்க அவர் இருக்கிறாரா? இல்லையா?..



Khakestar-o-khak
(Earth and Ashes)

Directed by - Atiq Rahimi
Written by - Kambuzia Partovi, Atiq Rahimi
Music by - Khaled Arman, Francesco Russo
Cinematography - Eric Guichard
Art- Jean Luc Le Floch
Year - 2004
Country - Afghanistan
Language - Dari, Pushto.