ஒன்பது ரூபாய் நோட்டு.



சனைகளை விசாலப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு தொலைவிலிருப்பவைகளை அறிந்துகொள்ள முயற்சிப்பதால் என்னவோ அருகிலிருப்பதன் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடுகிறது. சமீபத்தில் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தை பார்த்தபோது (தற்போதுதான் முதன்முதலாக அதனை பார்க்க நேர்ந்தது) அதனை உணர முடிந்தது. அழகி என்ற அற்புதமான திரைப்படத்தை கொடுத்த பின்பே தங்கர் பச்சானை நமக்கெல்லாம் தெரியும். அவர் ஒரு இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், இலக்கியவாதி, அதுமட்டுமல்லாது பிறந்த மண்ணையும் அங்கு வசிக்கும் எளிய மனிதர்களையும் மதிக்கத்தக்கவர். இயக்குனராக அவரது ஆரம்பகால திரைப்படங்கள் பிறரது படைப்புகளை தாங்கியிருந்தது. அதற்கு மாற்றாக ஒன்பது ரூபாய் நோட்டு என்ற இந்த திரைப்படம் இலக்கிய முகம் கொண்ட அவரது சொந்த நாவலை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறது. தங்கர் பச்சான் எழுதிய முதல் நாவலும் இதுவே. காட்சிகளின் வழியே திரைப்படத்தை பார்த்ததும் எழுத்து வடிவில் அந்த நாவலை ரசிக்கும் எண்ணம் தோன்றியது. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற நீண்ட தேடுதலுக்கு பின்பு அதனை கண்டுபிடித்து வாசிக்கவும் முடிந்தது. 

முந்திரியும் பலாவும் மாவின் நெடியும் வீசும் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் பெரிய லட்சியம் எதுவும் இல்லாத சாமானிய மனிதர்களின் உழைப்பும் உண்மைத்தனமும் நல்ல எண்ணமும் இந்த நாவல் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. மண்ணை ஏமாற்ற முடியாது என்பதால் ஏமாற்றுவதில் நம்பிக்கையில்லாத வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கை இந்த நாவல்.

சிகாமணி என்ற இளைஞன் நாவலை தொடங்கி அவனே முடித்து வைத்தாலும் கதை முழுவதும் மாதவ படையாட்சி என்பவரது வாழ்க்கையை சுற்றியே வருகிறது. மாதவப் படையாட்சி மிக எளிமையானவர், உழைப்பும் மனிதாபிமானமும் கொண்ட நல்ல மனிதர். தன் மக்களையும் மண்ணையும் மண் விளைவிக்கும் மரம் செடி கொடிகளையும் அஃறிணைகளையும் போற்றக்கூடியவர். நல்ல மனைவியும் மக்களும் உயரிய நண்பர்களும் சிறந்த பண்பும் அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தாலும் அவரது வாழ்க்கை இறுதியில் ஒன்பது ரூபாய் நோட்டைப் போல செல்லாமல் போனதைப் பற்றியே இந்த நாவல் விவரிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் வறுமையிலும் செம்மை என வாழ்ந்த அவரது கதை இது.

மாதவ படையாச்சி, அவரது மனைவி வேலாயி, நண்பர் காஜா பாய், அவரது மனைவி கமீலா, கதையைத் தொடங்கும் சிகாமனி மற்றும் சிலரே நாவலின் கதாபாத்திரங்கள். இதில் கெட்டவர்கள் என யாருமே கிடையாது என்பது சிறப்பு. சந்தர்ப்பவசத்தால் சில கதை மாந்தர்கள் பலவீனமானவர்களாகத் தெரிகின்றனர். விதி ஒன்று மட்டுமே கதையின் எதிர் நாயகனாக இருக்கிறது.

தொலைந்த நம் அடையாளங்களை கலைகளின் மூலம் மீட்டெடுப்பது நமது கடமை இதை சொன்னது மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த எழுத்தின் மூலம் தங்கர் பச்சான் நிறுபித்துக் காட்டியிருக்கிறார். ஒன்பது ரூபாய் நோட்டு என்பது யாருக்கும் கிடைக்காத ஒன்று. அப்படி கிடைத்தாலும் செல்லுபடியாகாத ஒன்று. கி.ரா அவர்கள் இந்த நாவலுக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார். தங்கர்பச்சான் இந்த நாவலை முழுவதும் முடிக்க பன்னிரண்டு வருடங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் திரைப்படத்துறையில் அவர் பங்கெடுத்துக் கொள்ள அவரது படைப்புகள் அனைத்தும் சொந்த மண்ணில் காலூன்றி நிற்பதாகவே இருந்திருக்கிறது. இந்த நாவலும் அப்படியேத்தான் இருக்கிறது. முந்திரியும் பலாவும் மாவின் நெடியும் வீசும் தென்னார்க்காடு மாவட்டத்தின் வாசனையை இந்த நாவலை வாசிக்கும்போது நிச்சையம் உணர முடிகிறது.

ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தை பலரும் பார்த்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். அதனை புத்கமாக எழுத்து வடிவமாக வாசித்தும் பாருங்களேன்.

📎
  • ஒன்பது ரூபாய் நோட்டு
  • தங்கர் பச்சான்
  • அன்னம் பதிப்பகம்.