கடவுள் (இருக்காரா... இல்லையா?).

ல்லநேரம் கெட்ட நேரம் பார்த்து நம்பிக்கையோடு ஆரம்பித்து மெய்பொருள் காண்பது அறிவு என மூன்று கதைகளை சொல்லிவிட்டு அடுத்து கடவுளைப்பற்றிய நான்காவது கதைக்கு வந்திருக்கிறேன். அதாவது இன்றைய கதையின் தலைப்பு கடவுள்.


சரி! ...கடவுள் இருக்காரா? இல்லையா?
சிக்கலான ஒரு கேள்விதான் அந்த கடவுளைப் போல ...போகட்டும் விடுங்கள்.

கடவுள் நம்பிக்கை என்பது மரபுவழி பழக்கம். இந்த உலகில் மனிதர்களாய் பிறக்கும் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு பிறப்பதில்லை. ஒரு குழந்தை வளர உள்ளதை உணர பெற்றோர்களே அதற்கு கடவுளை அறிமுகம் செய்து  வைக்கின்றனர். குழந்தையிடம் ஒரு சிலையை கட்டி இது கடவுள் என்றாலும் இல்லை இல்லை இது வெறும் கின்லே ஜாய் பொம்மை என்றாலும் அதை அப்படியே நம்பி வளரும். அப்படி வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் சமுதாயமும் தன் பங்கிற்கு பயத்துடன் கடவுளை காட்டத் தவறுவதில்லை. குழந்தை வளர்ந்து இளமைக் காலங்களை தொடும்போது அந்த பயம் சற்று குறைந்து கடவுளைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் போகிறது. பிறகு இளமை தொலைத்து தொழில் குடும்பம்  குழந்தைகள் உறவுகள் என மாறும்போது கடவுளின் பயம் மீண்டும் தொற்றிக்கொள்கிறது. போகப் போக அது பழக்கமாகவே மாறி மரபுவழியாக அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது மரபுவழி பழக்கம்.

இதில் ...கடவுள் இருக்காரா? இல்லையா?

இந்த சந்தேகம் ஒருமுறை கடவுளுக்கே வந்தது. பூலோகத்திற்கு சென்று ஒரு 8 பார்த்துவிட்டு வந்துவிடலாம் என தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மேலுலகத்திலிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்தார்... அப்படி என்றால் கடவுள் இந்த பூமியில் இல்லையா?.. ஆக!..கடவுள் ஒரு ஏலியனா? என அறிவியல் பூர்வமாக ஆராயாமல் கதைக்குள் நுழைவோம் வாருங்கள்.

பூலேகத்திற்கு வந்த கடவுளுக்கு இந்த மனிதர்களிடத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் அதை எவ்வாறு தெரிந்துகொள்வது என குழம்பி அங்கும் இங்கும் அவர் அலைந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் சாமியார் ஒருவர் கடவுளைப்பற்றி வர்ணித்து, அவர் அப்படிபட்டவர், இப்படி இருப்பார், அவரது லீலைகள் இன்ன-என்ன என பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். நம்ம ஊரில் சாமியார்களுக்கா பஞ்சம்? ஹைடெக்காக ஆடிப்பாடி கதைசொல்லி கட்டிப்புடி வைத்தியமெல்லாம் கற்றுத்தந்து கடவுளைப்பற்றி அவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி ஏகப்பட்ட மக்களும் மெய்மறந்து மற்றதை திறந்து மன்னிக்கவும் துறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த கடவுளுக்கு அடடா!... நம்மள இந்த மக்கள் எவ்வளவு உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. என சந்தோசம் பிறந்தது. அவரும் அந்த சொற்பொழிவை ஒரு மரத்திற்கு கீழே நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சொற்பொழிவு முடிந்து கூட்டம் கலைந்தது. 

கடவுள் அந்த மரத்திற்கு அடியில் நின்றுகொண்டிருக்க அந்த வழியாக வந்த ஆசாமி ஒருத்தான் அவரை பார்த்தான். அடடே!... அச்சு அசலாக கடவுளைப் போலவே இருக்கியே!... வேஷம் உனக்கு ஏகப்பொருத்தமாக இருக்கே!.. என அந்த ஆசாமி கடவுளிடம் பேச்சு கொடுத்தான்.

இதனை கேட்ட கடவுளுக்கு தூக்கிவாரி போட்டது.

என்னப்பா? இது... இப்படி சொல்லுர? ...நான்தான் கடவுள் என்று அந்த ஆசாமியிடம் அவர் அமைதியாக சொல்லிப்பார்த்தார்.

இத பாரு... எங்கிட்ட சொன்னதுபோல வேறு யார்கிட்டையும் இத சொல்லிடாத உன்னை வேறு ஏதோ கேசுன்னு நினச்சிடுவாங்க...என்று அந்த ஆசாமி கடவுளை நம்ப மறுத்தான். கடவுளும்... இல்லப்பா நான் நிஜமாகவே கடவுள்தான் என்று எங்க அம்மா சத்தியமா ரவுடிதான் கணக்காக அவனுடன் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்.

இவர்களின் வாக்குவாதம் முற்ற அங்கு கூட்டமும் கூடியது. கூட்டத்திலிருந்தவர்களும் கடவுளை நம்ப மறுத்தனர், சிலர் கேளியாக பேசத் தொடங்கினர். இந்த கலவரம் அந்த சாமியாரின் சிஷ்யர்களுக்கு தெரியவர உடனே அவர்கள் கடவுளை இழுத்துக் கொண்டுபோய் அவரிடம் நிறுத்தினர். சாமியாரும் கடவுளை மேலும் கீழும் பார்த்துவிட்டு நடந்ததை கேட்டுவிட்டு கடவுளைப் பார்த்து  அவனை கொண்டுபோய் அந்த அறையில் தள்ளி பூட்டுங்கள் என சொல்லிவிட்டு ஆழ்நிலை தியானத்திற்கோ அல்லது ஆள்நிலை தியானத்திற்கோ சென்றுவிட்டார்.

பூலோகம் வந்த கடவளுக்கு தர்மசங்கடமானது. இது உனக்கு தேவையா? என்ற நிலையில் பூட்டிய அறையில் அவர் அமர்ந்திருந்தார். நள்ளிரவு நேரம் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

கதவு திறந்தவுடன் அந்த சாமியார் ஓடிவந்து....கடவுளே என்ன மன்னிச்சிடுங்க...என கடவுளின் காலில் விழுந்தார். கடவுளே நீங்க யாருன்னு நான் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகிட்டேன்... நீங்கதான் நிஜக் கடவுள்ன்னு எனக்கு தெரியும்...ஆனா நான் அத ஜனங்களுகிட்ட சொல்லியிருந்தா என்னையும் பைத்தியம்ன்னு நினைச்சி உங்களோடு சேர்த்து பூட்டி வச்சிருப்பாங்க... இங்கிருக்கும் மக்களுக்கு கடவுள் தூரத்தில் படமாகவோ, சிலையாகவோ, குறியீடாகவோ இருந்தால் நன்றாக தெரியும்... ஆனால் கடவுள் பக்கத்திலிருந்தா யாருமே கண்டுபிடிப்பதில்லை... அதனாலதான் காலையிலே அப்படி நடந்துகிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்க என அழ ஆரம்பித்தார்.

கடவுளும், சரிப்பா நடந்தது நடந்துபோச்சி... எல்லாம் நன்மைக்குதான்...என அந்த சாமியாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சிறிதுநேரம் அவருடன் பேசிவிட்டு போய்ட்டு வரேன், இல்லை இல்லை போரேன்... என சொல்லிவிட்டு சோகமாக மேலுலகம் சென்றார்.

நாம இருக்கோமா இல்லையா தெரிந்துகொள்ள பூலோகம் புறப்பட்டு சென்று புறமுதுகு காட்டி ஓடிவந்ததை நினைத்து கடவுள் சோகமாகவே இருந்தார். இதனை பார்த்த அவரது மனைவி...ஏன் கவலையாக இருக்கீங்க... என கேட்க, கடவுளும் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அவருக்கு விளக்கினார்.

சரி...சரி...மக்கள்தான் உங்கள புரிஞ்சுக்கல...ஆனா அந்த சாமியார் உங்கள நம்பினார் இல்லையா?... அவங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் நமக்கு என்ன கவலை.. பிறகு எதற்கு இந்த சோகம்?... என கடவுளின் மனைவி அவரை சமாதானப்படுத்தினார்.

அதற்கு கடவுள், மக்களாவது பரவாயில்லை அவர்களுக்கு நான் யாருன்னு தெரியல...ஆனா அந்த சாமியாருதான் என் கவலைக்கு காரணம்... அதிலும் அந்த சாமியார் நான் புறம்படும்போது கடைசியா சொன்ன வார்த்தை, அத என்னால தாங்கிக்கவே முடியல... என கடவுள் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மறுபடியும் சோகமானார்.

சரி! அந்த சாமியார் கடைசியாக என்னதான் சொன்னார் சொல்லுங்களேன் என கடவுளின் மனைவி கேட்க, சாமியார் சொன்னதை கடவுள் தன் மனைவியம் கூறினார்.

அந்த சாமியார் கடவுளிடம் கடைசியாக சொன்ன கடைசி வார்த்தை...

கடவுளே...இனிமேல் தயுவுசெய்து பூலோகம் கீலோகம் போறேன்னு புறப்பட்டு வந்திடுடாதிங்க... நீங்க இங்க வந்தா எங்க பொழப்பு கெட்டுடும்...