97% - துணையைத் தேடி.
முன்பெல்லாம் தமக்கென ஒரு துணையைத் தேடியலைந்து கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து புரிந்துகொண்டு மனப்பூர்வமாக காதலிக்கத் தொடங்க வேண்டும் என்றால் பல பியர் கிரில்ஸ் சாதனைகளை செய்ய வேண்டியிருக்கும். தற்போது அதற்கெல்லாம் எந்த அவசியமும் இல்லை. நல்ல குடிநீருக்கு கூட நான்கைந்து மைல் நடக்க, காதல் அருகிலேயே அல்ப்பமாக கிடைக்கிறது. அதிலும் நம் கையிலிருக்கு செல்போன் சாதனத்தை கொண்டு நமக்கு பிடித்த காதல் துணையை இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதிகள் இருக்கிறது. அதற்கென சில Online Dating மென்பொருள்கள் Playstore மற்றும் Apple ios களில் கிடைக்கிறது. அதில் நமது பெயர், வயது, நிறம், உயரம், அகலம், சுருள்முடி, எத்துப்பல், மரு, மச்சம் சார்ந்த தகவல்களை Match Me என பதிந்துவிட்டால் நமக்கு பொருத்தமான துணையை அந்த மென்பொருள் மாமாக்கள் நமக்கு காட்டுவார்கள். பிறகு வாங்க பழகலாம் என நமது திறமையை கொண்டு துணையை அடையலாம். இந்த குறும்படம் அத்தகைய Online Dating மென்பொருள் சார்ந்த ஒரு துணைத் தேடுதலைப்பற்றி நகைச்சுவையாக விவரிக்கிறது.
இந்த குறும்படத்தின் நாயகன் மொரட்டு சிங்கில் வகையைச் சார்ந்தவன். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளையில் ரயிலில் அவனது செல்போனிற்கு 97% Matching என்ற குறுஞ்செய்தி வருகிறது. அதனை பின்தொடரும் அவனுக்கு அருகில் முப்பது மீட்டர் தொலைவில் ஏற்ற உற்ற துணை ஒன்று இருப்பதாக காட்டுகிறது. மேலும் சிரித்த முகம், வெளிர்நிற தலைமுடி, உயரம், பிடித்த பாடல் போன்ற அந்த துணையைப்பற்றிய குறிப்புகள் ஒவ்வொன்றாக அவனுக்கு வந்துகொண்டிருக்கிறது. அதனைக் கொண்டு தனக்கு அருகிலிருக்கும் ஒவ்வொரு பெண்னையும் அவன் நோட்டமிடுகிறான். இந்தமுறை அந்த துணை இருக்கும் தூரம் குறைந்துகொண்டே வர ரயிலில் தன்னுடன் பயணிக்கும் பெண்களிடம் நெருங்கி சென்று அந்த மென்பொருள் காட்டிய தனது துணை இவளாக இருக்குமோ? என தேடுகிறான். அவனது தேடல் கிடைத்ததா? அவனோடு 97% பொருந்திய அந்த பெண் யார்? இறுதியில் அவன் தன் துணையை அடைந்தானா? என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை.
இந்த குறும்படம் Live Action என சொல்லக்கூடிய வகையில் இயல்பாக மௌனப்படமாக நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அது வேடிக்கையாக இருந்தாலும் நவநாகரீக தொழில்நுட்ப விபரீதத்தையும் உணர்த்துகிறது.
- 97%
- Directed by - Ben Brand
- Written by - Thomas van der Ree
- Music by - Christian Verbeek
- Year - 2013
- Country - Netherlands