இசைக் கலைஞன்.

சார்.. நல்லதா நாலு தமிழ் பாடல்கள் இருந்தா சொல்லுங்க... என சக அலுவலக நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். தனது மகள் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பாடப் போவதாகவும் அதற்கென சில பாடல்களை தேடுவதாகவும் என்னைப் போலவே பலரிடம் கேட்டு ஒரு பட்டியலே அவர் வைத்திருந்தார். இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான நடுத்தரவர்க்க பெற்றோர்களின் கனவு தம் பிள்ளைகள் தொலைக்காட்சியில் பாடவோ ஆடவோ வேண்டும் அதனைப்பார்த்து குளோசப்பில் ஸ்லோமோஷனில் பின்னணி இசையில் ஆஸ்கார் அளவிற்கு அழ வேண்டும் அதை அனைவரும் ரசித்து ச்..ச்சு..சூ.. கொட்ட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதே முனைப்பும் ஆர்வமும் தேடுதலும் தம் பிள்ளைகள் மற்ற பிற துறைகளில் சாதிக்க வேண்டும் என்பதற்காக எழுவதில்லை. குறிப்பாக விளையாட்டுத்துறையில் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கும் தங்கல் அப்பாக்கள் அரிது. அதற்கு நண்பரும் விதிவிலக்கல்ல என நினைத்துக்கொண்டு அவருக்கென சில பாடல்களை குறித்துக் கொடுத்தேன். மேலும் பல சீசன்களை கடந்தும் இத்தகைய நிகழ்சிகளின் சலிப்புத்தட்டாத பார்வைகளைப் பற்றியும் சென்ற வருடம் ரசித்த Ya Tayr el Tayer என்ற திரைப்படத்தையும் நினைத்துப் பார்த்தேன். எகிப்தில் நடைபெறும் Arub Idol என்ற இசை நிகழ்சியில் பங்குபெற பாலஸ்தீன அகதியான இளைஞன் ஒருவன் எடுக்கும் முயற்சியே இந்த திரைப்படம்.



வருடம் 2005. சிறுவனான முகமதுவும் அவனது சகோதரி நூர் என்பவளும் பாலஸ்தீன பகுதியில் உள்ள காஸா நகரத்தில் அகதிகள் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். முகமதுவிற்கு இயல்பிலேயே அழகிய தனித்துவமான குரல்வளம் இருக்கிறது. அவனும் அவனது சகோதரியும் தெருவிலிருக்கும் மற்ற சிறுவர்களுடன் இணைந்து ஒரு இசைக்குழுவை உருவாக்குகின்றனர். அந்த இசைக்குழு காஸாவில் நிகழும் சில திருமண நிகழ்வுகளில் பாடிவருகிறது. இதற்கிடையில் முகமதுவின் சகோதரி நூருக்கு சிறுநீரகம் செயலிழந்து போகிறது. அதனை இயங்க வைக்க டயாலிஸிஸ் மருத்துவமும் அதற்கென பணத் தேவையும் ஏற்படுகிறது. தான் ஒரு முழுநேர பாடகனாக மாறினால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும் என நினைக்கும் முகமது பாடகனாவதை குறிக்கோளாக வைத்துக்கொள்கிறான். அவனுக்கு அந்த நகரத்தில் வசிக்கும் அஜ்மல் என்ற பெண் உதவ அவரின் மூலம் இசை நுணுக்கங்களையும் கற்றுக் கொள்கிறான். நாட்கள் நகர அவனது சகோதரி அவனையும் இந்த உலகையும் விட்டு பிரிகிறாள். சகோதரியின் மறைவிற்குப்பின் முகமது பாடுவதையே நிறுத்திக்கொள்கிறான்.


வருடம் 2012. முகமது இளமைப்பருவத்தை அடைகிறான். தன் தங்கையின் நினைவில் மறுபடியும் பாடுவதைப் பற்றி அவன் நினைத்துப் பார்கிறான். முன்பு அவனுக்கு உதவிய அஜ்மல் என்ற பெண் இம்முறையும் ஊக்கமூட்டுகிறாள். பாலஸ்தீனத்தில் நடைபெறும் இசைத் தேர்வு நிகழ்சியில் பங்குபெறும் அவன் அங்கு ஏற்படும் தொழில்நுட்ப கோளாறினால் அந்த முயற்சியில் எதிர்பாரதவிதமாக தோற்றுப் போகிறான். இருந்தபோதிலும் எகிப்தில் நடைபெறும் Arub Idol என்ற புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியில் தனது முழு திறமையையும் காட்ட நினைக்கிறான். அஜ்மலின் குடும்பத்தினரின் உதவியுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அவன் பெற்றாலும் இந்தமுறை குடியுரிமை சிக்கலாக அமைகிறது.

வருடம் 2013. முகமது தனக்கென போலி பாஸ்போர்ட் ஒன்றை தயார் செய்து பாலஸ்தீன எல்லையான ராஃபா பகுதியில் தன் பயணத்தை தொடங்குகிறான். வழியில் இராணுவத்திடம் பிடிபடும் அவன் ஒரே ஒரு மாத காலம் மட்டும் அங்கு தங்கும் அனுமதியுடனும் இனி திரும்பவே வரக்கூடாது என்ற நிபந்தனையுடனும் எகிப்தை அடைகிறான். எந்தவொரு பின்புலமும் அறிமுகமும் இல்லாமல் எகிப்தை அடையும் அவன் Arub Idol இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டானா? அதில் வெற்றி பெற்றானா? தன் கனவுடன் சேர்த்து தன் தங்கையின் கனவையும் நினைவாக்கினானா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான காஸாவின் இடிந்த கட்டிடங்கள் மற்றும் அகதிகள் முகாம்களின் தெருக்களின் வழியாக மெல்ல பயணத்தை தொடங்கும் இந்த திரைப்படத்தின் கதை இளைஞன் முகமது பாலஸ்தீன எல்லையை கடக்கும்போது வேகமெடுக்கிறது. இறுதியில் இசை நிகழ்சியின் அரங்கில் ஆதீத வேகமெடுத்து ஆர்பாட்டமில்லாமல் கரவோசங்களுடன் முடிகிறது. காஸாவின் தெருக்கள், பாலஸ்தீனத்தின் ஆபத்தான ராஃபா எல்லைப்பகுதி, இசை நிகழ்ச்சி நடைபெறும் எகிப்தின் கெய்ரோ அரங்கம் என மூன்று வெவ்வோறு இடங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும், இசை தொடர்பான திரைப்படம்தானே என சகட்டுமேனிக்கு கதறவிடாமல் அடக்கி தேவையானபோது மட்டும் ஒலிக்கும் இசையும், சிறுவன் முகமது அவனது தங்கை நூர், இளைஞன் முகமது, அஜ்மல் என கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பும் இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது.


பாலஸ்தீனத்தை சேர்ந்த அரபு இசை பாடகரான முகமது ஆசிப் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிப் 2013 ஆம் ஆண்டிற்கான Arub Idol பட்டத்தை வென்றவர் என்பதுவும் தற்போது பிரபல பாடகராகவும் பாலஸ்தீன அரசாங்கத்தின் கலை கலாச்சார துதராகவும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. Some dreams are worth living for என்ற வாசகத்தை முதன்மையாக தாங்கியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு உண்மைக்கதை, தன்னம்பிக்கை திரைப்படம் என்பதையும் தாண்டி உன்னத சினிமாவாக வசீகரிக்கச் செய்கிறது.




Ya Tayr el Tayer (The Idole)
Written and Directed by - Hany Abu Assad
Screen Play - Sameh Zoabi and Hany Abu Assad
Music by - Hany Asfari
Cinematography - Ehab Assal
Country - Palestine
Language - Arub
Year - 2016