Tolu - ஆணுக்கு நிகர்.
தலைமுடியை வெட்டிக்கொள்ளுதல் ஆடைகளை மாற்றிக்கொள்ளுதல் ஆண் செய்யும் அல்ப்ப காரியங்களைத் தொடர்தல் இவற்றோடு நின்றுவிடுகிறது ஆணுக்கு பெண் நிகர் என்ற கோட்பாடு. பட்டங்கள் ஆளும் சட்டங்கள் செய்யும் பாரதியின் கனவு ஓரளவிற்கு நினைவாகிப்போனாலும் 33% இடஒதுக்கீடு என்பதே தற்போது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. சரி!..ஆணுக்கு பெண் நிகர் என்பது என்ன?. வெறும் பாலியல் வேறுபாட்டினால் பிரித்துப் பார்க்காமல் நடைமுறை செயல்களால் உணர்வதே ஆணுக்கு பெண் நிகர் என்பதாகும். இது ஆண் செய்யும் வேலை இது பெண்ணுக்கு உண்டான காரியம் என பாகுபடுத்தாமல் பெற்றோர்கள் இதை தங்கள் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். தங்கள் குழந்தைகளையும் மனதார உணரவைக்க வேண்டும். இந்த குறும்படம் அதைத்தான் போதிக்கிறது.
அழகிய கடற்கரை கிராமத்தில் வசிக்கும் மீனவன் ஒருவன் தனக்கொரு மகன் இருந்தால் தன்னுடன் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனக்கு உதவி செய்வான் என்றும் அவன் மூலம் அதிஷ்டமும் கொட்டும் எனவும் துரதிஷ்டவசமாக பெண்குழந்தைகள் பிறந்துவிட்டதால் தனது வலையில் எதுவுமே சிக்குவதில்லை எனவும் தன் மனைவியிடம் பொறுப்பற்றவனாய் புலம்புகிறான். இதனை கேட்கும் அவனது மகள்களில் ஒருத்தி அன்றிரவு அனைவரும் உறங்கிய பின்பு யாருக்கும் தெரியாமல் ஒரு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் செல்கிறாள். கடலில் மீன்பிடிக்க வலைகளை வீசும் தருணம் அவளது படகிலிருந்து ஒரு முதியவர் எழுகிறார். முதலில் அவரைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அவள் பிறகு சமாளித்துக்கொண்டு தன் வேலையை தொடர்கிறாள். அந்த முதியவரும் சிறுமியான அவளுக்கு மீன்பிடிப்பது எப்படி என கற்றுத்தருகிறார். பொழுது புலர்கிறது. அந்த சிறுமியின் பெற்றோர்களும் மீனவ கிராமத்தில் உள்ளவர்களும் அவளை காணமல் தேடத்தொடங்குகின்றனர். கடலுக்குச் சென்ற அந்த சிறுமி திரும்பி வந்தாளா? அவளது வலையில் சிக்கியதென்ன? அந்த முதியவர் யார்? என்பதுதான் இந்த குறும்படத்தின் மீதிக்கதை.
அழகான நைஜீரியா நாட்டு கடற்கரை கிராமம், இயல்பான மனிதர்கள், அந்த பெண் டோலு இவற்றையெல்லாம் காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. இந்த குறும்படம் பெண்ணியத்தைப் பற்றி பேசினாலும் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய கிழவனும் கடலும் என்ற புத்தகத்தையும் யான் மார்ஷல் எழுதிய லைப் ஆஃப் பை என்ற புத்தகத்தையும் சற்று நினைவுபடுத்துகிறது.
📎
📎
- Tolu
- Written By - Nadine Ibrahim
- Directed by - Nadine Ibrahim, Umar jibrilu, Seyi Okorodudu
- Country - Nigeria
- Language - English
- Year - 2018