வாங்க..உட்காருங்க...சர்பத் சாப்பிடுங்க....
கூட்டிக் கழித்து பார்த்தால் இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது ஜூலைக்காற்றை சுவாசிக்க. அதுவரைக்கும் வெய்யில் வெளுத்து வாங்கப்போவது நிச்சையம். பற்றாக்குறைக்கு இந்த வருடம் தேர்தல் சூடு வேறு. ஒன்னுக்கு பெரும்பாடு. நாக்கும் மனமும் குளிர்ச்சியை நோக்கி சிந்தை தேடத் தொடங்கிவிட்ட நிலையில் செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி, மோர் என விழிப்புணர்வுடன் நாமெல்லாம் இயற்கைக்கு திரும்பியது சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த இயற்கை பட்டியலில் இதமளிக்கும் பானமான சர்பத்தும் அடக்கம். அத்தகைய சர்பத் பற்றிய சுவாரசியங்களை உறிஞ்சலாம் வாருங்கள்.
ஷரிபா என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்ததுதான் ஷர்பத். ஷரிபா என்பதற்கு சர்க்கரைத் தண்ணீர் என்று பொருள்.
அதற்கு தகுந்தார்போல் சர்க்கரையும் தண்ணீருமே சர்பத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. பெர்ஷீனியாவில் இருக்கிறது சர்பத்தின் பிறந்த வீடு. அங்கு வசித்தவர்களுக்கு மது அருந்துதல் மதக்கொள்கைக்கு எதிராக இருந்ததால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பருகும் வகையில் ரோஸ் வாட்டர் சர்க்கரை கலந்து ஒரு புதுவித பானத்தை உருவாக்கினர். இதை திருவிழா மற்றும் நோன்பு காலங்களில் பருகிவந்தனர். பெர்ஷீனியாவை கடந்து ஈரான் எகிப்து பகுதிகளிலும் இது புழக்கத்திற்கு வர ரோஸ் வாட்டருக்கு பதில் கிராம்பு , ஏலக்காய், இஞ்சி, இலவங்கம், தேன், மற்றும் லிண்டன் மலர்கள், செம்பருத்தி இதழ்கள், புதினா இலை கலந்து வெவ்வோறு சுவையிலும் சர்பத் தயாரிக்கப்பட்டது. முலாம்பழம், மாதுளை, ஆப்ரிகாட், பேரிச்சை, பிளம்ஸ், செர்ரி, ஆரஞ்சு பழங்களைக் கொண்டும் சர்பத் தயாரிக்கப்பட்டது. இந்த சர்பத் பானம் ஆரம்பத்தில் பரவசமூட்டுவதற்காக மட்டுமே பருகப்பட்டு வந்தது. பிறகு வந்த காலங்களில் அது மருத்துவத்திற்காகவும் அன்றாடம் சுவைக்கும் பானமாகவும் மாறியது.
அதற்கு தகுந்தார்போல் சர்க்கரையும் தண்ணீருமே சர்பத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. பெர்ஷீனியாவில் இருக்கிறது சர்பத்தின் பிறந்த வீடு. அங்கு வசித்தவர்களுக்கு மது அருந்துதல் மதக்கொள்கைக்கு எதிராக இருந்ததால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பருகும் வகையில் ரோஸ் வாட்டர் சர்க்கரை கலந்து ஒரு புதுவித பானத்தை உருவாக்கினர். இதை திருவிழா மற்றும் நோன்பு காலங்களில் பருகிவந்தனர். பெர்ஷீனியாவை கடந்து ஈரான் எகிப்து பகுதிகளிலும் இது புழக்கத்திற்கு வர ரோஸ் வாட்டருக்கு பதில் கிராம்பு , ஏலக்காய், இஞ்சி, இலவங்கம், தேன், மற்றும் லிண்டன் மலர்கள், செம்பருத்தி இதழ்கள், புதினா இலை கலந்து வெவ்வோறு சுவையிலும் சர்பத் தயாரிக்கப்பட்டது. முலாம்பழம், மாதுளை, ஆப்ரிகாட், பேரிச்சை, பிளம்ஸ், செர்ரி, ஆரஞ்சு பழங்களைக் கொண்டும் சர்பத் தயாரிக்கப்பட்டது. இந்த சர்பத் பானம் ஆரம்பத்தில் பரவசமூட்டுவதற்காக மட்டுமே பருகப்பட்டு வந்தது. பிறகு வந்த காலங்களில் அது மருத்துவத்திற்காகவும் அன்றாடம் சுவைக்கும் பானமாகவும் மாறியது.
பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மருத்துவர் மற்றும் தத்துவஞானியான இபின் சினே (Ibn Sina or Abu Ali Sina) என்பவர் தி கேனான் ஆஃப் மெடிசன் (The Canon of Medicine) என்ற புத்தகத்தில் மருத்துவ குணமுள்ள சர்பத் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பாரசீக மருத்துவ களஞ்சியமாக கருதப்படும் ஜகிராயி க்வாரஸ்மாஷிஹி (Zakhireye Khwarazmshahi) என்ற புத்தகத்தில் சர்பத் பற்றிய குறிப்புகள் இருக்கிறது. அந்த குறிப்புகளின் அடிப்படையில் பெரும்பாலான அரபு தேசங்களில் ரமலான் மாத நோன்புகளில் சர்பத் முக்கிய பானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஓட்டமன் பேரரசு காலத்தில் உணவிற்கு முன்பு குடிக்கப்பட்ட சர்பத் இன்றளவும் அங்கு வழக்கத்தில் இருக்கிறது. எகிப்தில் குழந்தை பிறந்ததும் அதை கொண்டாடும் வகையில் கிராம்பு மற்றும் மசாலா கலந்த சர்பத் வழங்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண வைபோகங்களில் புகுந்த வீட்டிற்குள் நுழையும் பெண் முதன்முதலாக சர்பத் கொடுத்து அனைவரையும் உபசரிக்கும் சடங்கு இன்றும் அங்கு தொடர்கிறது.
இந்தியாவின் பெரும்பாலான உணவு வரலாற்றை தெரிந்து கொள்ள முகலாய மன்னர்களின் அரண்மனை சமையல்கட்டிற்குள் எச்சில் ஒழுகும் வாயோடு மூக்கை நுழைக்க வேண்டியது வரும். சர்பத்தும் அந்த அரண்மனை சமையலறையிலிருந்து வந்ததே. முகலாய மன்னர் பாபர் சர்பத்தின் பரம விசிறி. ஒரு நாளைக்கு கணக்கில்லாத குவளைகளை அவர் காலி செய்திருக்கிறார். சர்பத்திற்கு குளிர்ச்சியூட்ட இமயமலையிலிருந்து ஐஸ் கட்டிகளை சிறப்பு குளுகுளு குழு அமைத்து அவர் வரவழைத்திருக்கிறார். அவர் ஆட்சி காலத்தில் அரண்மனை முழுவதும் சர்பத் பிரபலமாக இருந்திருக்கிறது. விருந்தினர்களை உபசரிப்பது கூட வாங்க... உட்காருங்க... சர்பத் சாப்பிடுங்க என்பதாகவே இருந்திருக்கிறது. அதே பாபர்தான் கோடைக்காலங்களில் தற்போது இருக்கும் தண்ணீர் பந்தல், மோர்பந்தல் போன்று சர்பத் பந்தல் அமைத்து பொதுமக்களையும் குளுமை படுத்தியிருக்கிறார். முகலாயர்களின் இந்திய சர்பத் ரோஸ் வாட்டர், சந்தனம், குங்குமப்பூ, செம்பருத்தி இதழ், எலுமிச்சை சாறு, சர்க்கரை அல்லது தேன் கலந்ததாகும். பாதம், பிஸ்தா, ஏலக்காய் கலந்த அந்தப்புர சமாச்சார அந்த சர்பத்தும் ரகசியமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பானக்கமே சர்பத்தின் முன்னோடி. நாட்டு சர்க்கரை, புளிப்பூட்டும் பொருட்கள், வாசனை பொருட்கள், தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுவதே பானக்கம் அல்லது பானகம் எனப்படும். பெரும்பாலான ஊர்களில் பங்குனி-சித்திரைத் திருவிழாக்களில் இது வழங்கப்படுகிறது. குளிர்ந்த தண்ணீரில் நாட்டுச்சர்க்கரை,ஏலக்காய், கற்பூரம், கிராம்பு, மிளகு இவை கலந்து தயாரிக்கப்படுவது சர்க்கரோதக பானக்கம் எனப்படும். இது பானக்கத்தின் அடிப்படையாகும். இதில் எலுமிச்சை கலந்தால் நிம்புபல பானக்கம் கிடைக்கும். குளிர்ச்சி மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் இது உகந்தது. கோவில்களிலும் திருவிழாக் காலங்களிலும் வழங்கப்படுவது இதுவே. அதே சர்க்கரோதக பானக்கத்தோடு பச்சை மாங்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து சாறு பிழிந்து சேர்த்து தயாரிக்கப்படுவது பிரபானக்கம் ஆகும். இது உடலுக்கு வலுகொடுக்கும். இது மகாபாரத பீமனின் போவரிட் டிரிங் என நம்பப்படுகிறது. அதேபோல் புளித்த தயிரில் சாறு பிழிந்து தயாரிக்கப்படுவது அம்ளிகாபல பானக்கம் ஆகும். இது வாதத்தை பெருக்கி ஜீரணத்தை தூண்டுகிறது. மல்லி தழைகளை அரைத்து சாறு பிழிந்து சர்க்கரோதக பானக்கத்துடன் சேர்த்தால் தனிய பானக்கம் தயார். இது பித்தத்தை பெருக்குகிறது. பானக்கத்தை மருத்துவ சர்பத்தாக மட்டுமே நாம் பார்த்துவர, எலுமிச்சை சாறு அல்லது நார்த்தங்காய் சாறு இதனுடன் சர்க்கரைத் தண்ணீர் நன்னாரி வேர் மற்றும் சப்ஜா விதைகள் கலந்த சர்பத்தே தற்போது பொதுவாக புழக்கத்தில் இருக்கிறது.
நல்ல நாற்றம் (நல்ல மனம்) கொடுப்பதால் நன்னாரி. நறு நெட்டி, நறுநீண்டி, கிருஷ்ணவல்லி, பாதமூளி, நறுக்குமூலம், சாரிபம், கோபாகு, சுகந்தி என நன்னாரிக்கு பல பெயர்கள் இருக்கிறது. பொதுவாக சித்த மருத்துவத்தில் இதன் பெயர் ஆனந்தமூலா. அறிவியல் பெயர் Hemidesmus Indicus. நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதோடு கோடைக்காலங்களில் சிறுநீர் கழிப்பதில் ஏபடும் பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது. இது உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு இரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்கிறது. இதிலிருக்கும் சாப்போனின்கள் மற்றும் சைட்டோஸ்டிரான்கள் என்ற வேதிகள் மனதை சாந்தப்படுத்த உதவுகின்றன. மேலும் புற்றுநோய் உருவாகுவதற்கு எதிரான Anti Tumer Activit என சொல்லக்கூடிய எதிர்ப்புசக்தி தன்மையும் இதற்கு இருக்கிறது. இந்த நன்னாரி தாவரத்தின் வேரே சர்பத்களில் பயன்படுத்தப்படுகிறது.
திரிநூற்றுப்பச்சிலை அல்லது கரந்தை அல்லது துன்னுத்துப்பச்சிலை என அழைக்கப்படும் Ocimum Basillicum என்ற அறிவியல் பெயர்கொண்ட தாவரத்தின் விதைகளே சப்ஜா விதைகள் அல்லது சர்பத் விதைகள் என அழைக்கப்படுகிறது. இதிலிருக்கும் வைட்டமின்கள் ஏ பி சி மற்றும் சல்ஃபர், துத்தநாகம், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை உடலுக்கு குளிச்சியை கொடுத்து வயிற்றுப்புண்களை சரிசெய்து மலச்சிக்கலை அகற்றுகிறது. கிராமங்களில் எளிதாக கிடைக்கும் இந்த தாவரத்தின் விதைகள் நீரில் ஊரவைத்து சர்பத்களில் மிதக்கவிடப்படுகிறது.
வடக்கே ரோஸ்வாட்டர் சர்பத், ஆம் பானா, இம்லி சர்பத் (புளி) மற்றும் பலூடா சர்பத், டெல்டா பகுதியில் நார்த்தங்காய் சர்பத், மதுரை சிம்மக்கல் இளநீர் சர்பத், தென்கோடி நுங்கு சர்பத், கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் என இங்கேயும் இடங்களுக்கு தகுந்தவாறு சர்பத் தனது சுவைகளை மாற்றிக்கொள்ள, இதுவரைக்கும் சர்பத் பற்றிய சுவாரசியங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த சர்பத் வெயிலுக்கு இதமளிக்கும் பானம் என்பதைவிடவும் செய்வதற்கு எளிமையானதும் உடலுக்கு எந்த தீமையையும் விளைவிக்காதவை என்பதில் சந்தேகமே இல்லை. ஆக இந்த கோடைக்கு சர்பத் பருகி முடிந்தளவிற்கு நாமே தயாரித்து பாபர் ஸ்டைல் விருந்தோம்பலுக்கும் பழகுவோம்.
வாங்க...உட்காருங்க...சர்பத் சாப்பிடுங்க...