கிளாசிக் பியானோ பாடல்கள்.
பிறந்தநாள் அல்லது எதாவது பார்ட்டி பங்ஷன், பெரும்பாலும் கதாநாயகின் திருமண நிச்சையதார்த்த விழாவாக இருக்கும் (வேறொரு அப்பாவியுடன்). அதற்காக பலூன், சீரியல் பல்பு, ஜிகு ஜிகு தாள்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பெரிதாக ஒரு பியானோ இருக்கும் (ஒரு மூலையில்). அதற்குமேல் பூச்செடியோ, மலர் கொத்தோ அல்லது ஒற்றை ரோஜாவோ இருக்கும் (ஒத்த ரோசா அழகு). கதாநாயகன் கண்டிப்பாக கோட்சூட் போட்டிருப்பார் (பியானோ வாசிக்க யூனிபார்ம் போலும்). கதாநாயகியும் அப்...ப்பா யாருடா இது? ... ஃபுல் மேக்கப் சகிதம் இருப்பார் (நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்). உறவினர்கள், நண்பர்கள் அந்த அப்பாவி மாப்பிள்ளை உட்பட சுற்றியிருக்க (நமக்கென என சுற்றிக் கொண்டேயிருக்க), நாயகன் பியானோவில் இருக்கும் கருப்பு வெள்ளை ஏதாவது ஒரு கட்டையை அழுத்துவார் ...டொய்ங்.... பிறகு டொய்ங்... டொய்ங்... அழகான பியானோ பாட்டு தொடங்கும். கதாநாயகன் சோகமாக வாசித்துக்கொண்டு பாடுவார் கதாநாயகி முறைத்துக் கொண்டிப்பார். அல்லது கதாநாயகி ஆடிக்கொண்டே பாடுவார் கதாநாயகன் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். இந்திய சினிமாவில் பியானோவை வைத்து பாடப்படும் பாடல்களுக்கான மாற்றப்படாத மாற்றவே முடியாத விதி இது. வேடிக்கையாகச் சொன்னாலும் இத்தகைய அமைப்பில் எடுக்கப்பட்ட பாடல்கள் ரசிக்கத்தக்கவையே. ரசிக்கத் தக்கதாகவும் விரும்பப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. அத்தகைய பாடல்களில் அடியேன் ரசிக்கும் சிலவற்றை கிளாசிக் பியானோ பாடல்களாக இங்கு அசைபோடுகிறேன் கொஞ்சம் பியானோவைப் பற்றிய சிறு தகவலுடன்.
மேற்கத்திய இசையில் மிக முக்கிய பங்கு வசிப்பது பியானோ. இது நரம்புக் கருவியின் ஒரு வகைதான். தமிழில் இதனை அழகாக கின்னரப்பெட்டி என அழைக்கிறார்கள். 1700 வாக்கில் கிறிஸ்திஃபோரி (Bartolomeo Cristofori) என்ற இத்தாலிய இசைக் கலைஞர் இதனை வடிவமைத்தார். அதை எப்படி இசைப்பது என்பதையும் அவரே உலகிற்கு இசைத்து காட்டினார். 1711 -ல் மாஃபெய் (Scipione Maffei) என்ற எழுத்தாளர் பியானோ கட்டமைப்பைப் பற்றி எழுதியிருந்தார். அதனைக் கொண்டு ஸில்பெர்மேன் (Gottfried Silbermann) என்பவர் பியானோவிற்கு புது வடிவம் கொடுத்தார். 1820 ஆம் வாக்கில்தான் இந்த கருவியில் எண்மசுரங்கள் என்ற அடிப்படை சுரங்கள் சேர்க்கப்பட்டது. பியானோவில் Grand Piano, Upright Piano என இருவகை இருக்கிறது. தற்போது Electronic Piano, Touch board Piano வந்ததெல்லாம் தொழில்நுட்ப புரட்சியே. பியானோபோர்டே (Pianoforte) என்ற இத்தாலிய வார்த்தையின் சுருக்கமே பியானோ (Piano)....சரி!..பாடல்களுக்கு செல்வோம் வாருங்கள்.
பாடல்களைக் காண