கிழவனும் மாடும்.
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு அபரிவிதமானது. பால், இறைச்சி, வேளாண்மைத் தொழில், போக்குவரத்து என அவைகளின் பயன்பாடுகள் இருக்க மனிதன் கால்நடையாக தன்னுடைய பரிணாம வளர்ச்சியை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை அந்த பந்தம் தொடர்ந்து வருகிறது. இன்றளவும் மாடுகளை குழந்தைபோல வளர்ப்பதையும், அவற்றிற்கு பெயர்வைத்து அழைத்து தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவித்துவருவதையும், அதனை கடவுளாக கருதி வணங்குவதையும் இதற்கு சாட்சியாக கூறலாம். அட! ஏன்? மாட்டை வைத்து அரசியல்கூட செய்திருக்கிறோம் அல்லவா. அதன்படி ஒரு மாட்டிற்கும் ஒரு மனிதனுக்கும் இடையிலான உறவைப் பற்றியே இந்த டாகுமெண்டரி விவரிக்கிறது.
தென்கொரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் என்பது வயது மதிக்கத்தக்க முதியவரும் அவரது நாற்பது வயது மாடும் இந்த டாகுமெண்டரி முழுவதும் உலாவுகின்றனர். அந்த முதியவருக்கு அவரது மாடு ஒரு நண்பனாக, துணையாக, வேலைக்காரனாக, வாகனமாக, எல்லாமுமாக இருக்கிறது. தனது ஐம்பதாவது வயதில் அந்த மாட்டை வாங்கிய அவர் முப்பது வருடங்கள் அதனுடன் தனது வாழ்க்கையை கடத்தி வருகிறார். மாடுகள் பொதுவாக நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவற்றில் பெரும்பான்மையானவை இறைச்சிக்காக இருபது வயதிற்குள் வெட்டப்பட்டுவிடுகின்றன. இந்த வழக்கம் அந்த முதியவரின் கிராமத்திலும் இருந்தாலும் அவர் தனது மாட்டை யாருக்கும் விற்காமல் இயற்கையான ரசாயனம் கலக்காத புற்களைக் கொண்டு வளர்த்து வருகிறார். அந்த வாழ்கையினூடே அந்த முதியவர் மற்றும் அவரது மாடு இருவருமே தள்ளாத வயதில் தங்களின் கடைசி வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்க யார்? முதலில் இந்த உலகைவிட்டு செல்கிறார் என்பதையே இந்த டாகுமெண்டரி காட்டுகிறது.
தென்கொரியாவைச் சேர்ந்த இயக்குனர் லீ சுங்-ரைல் என்பவர் கிராமத்தில் கண்ட தன் தந்தையின் வாழ்க்கையையே இதில் பதிவுசெய்திருக்கிறார். டாகுமெண்டரி திரைப்படங்கள் ஒரு மையப்புள்ளியை சுற்றியே இருக்கும். ஆனால் இதில் தன் தந்தையின் வாழ்க்கையை ஒரு திரைப்படம் பார்பதுபோல எந்த கருத்தையும் தாங்கிப் பிடிக்காமல் அவர் அழகாக படைத்திருக்கிறார். காட்சியமைக்கப்பட்ட விதமும் ஒளிப்பதிவும் இசையும் அதற்கு மெருகூட்டுகிறது. கொரிய மொழியில் Wonang Sori என்ற தலைப்பிற்கு மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் சப்தம் என்று பொருள் அந்த மணியின் சப்தம் இந்த டாகுமெண்டரி முடித்த பின்பும் ஒலித்துக்கொண்டிருப்பதை உணர முடிகிறது.
📎
- Wonang Sori
- (Old Partner)
- Written and Directed by - Lee Chung-ryoul
- Music - Heo Hoon, Min So-yun
- Cinematography - Ji Jae-woo
- Country - South Korea
- Language - Korean
- Year - 2008