Two Cars, One Night - காத்திருப்பு.


காத்திருப்பது சுகம். அதிலும் இலக்கற்ற நிலையில் வெறுமையாக காத்திருப்பது வரம். அந்த தருணங்களில் புதிய சிந்தனைகள் உதிக்கலாம். புதிய காட்சிகளை காண வாய்ப்பு கிடைக்கலாம். புதிய மனிதர்களின் சந்திப்பும் அவர்களின் உறவும் நட்பும் கிடைக்கப்பெறலாம். சில காத்திருப்புகளுக்கு நம் மனதைவிட்டு நீங்காத இடத்தைப்பெறும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காத்திருப்பில் நிகழும் சம்பவம்தான் இந்த குறும்படம் Two Cars One Night.


நியூசிலாந்தில் உள்ள மோட்டல் என சொல்லக் கூடிய இரவு நேர உணவுவிடுதி ஒன்றின் முன்னால் ஒரு கார் நின்றுகொண்டிருக்கிறது. அதனுள் இரண்டு சிறுவர்கள் அமர்ந்திருக்க இளையவன் எடி புத்தகத்தில் மூழ்கியிருக்கிறான். மூத்தவனான ரோமியோவிற்கு காத்திருக்கும் நேரத்தை கழிப்பது கொடுமையாக இருக்கிறது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு அருகில் மற்றொரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் இறங்கி உணவகத்திற்குள் செல்ல அவர்களது மகள் பாலி என்ற சிறுமி மட்டும் அந்த காரில் காக்க வைக்கப்படுகிறாள். பெரியவன் ரோமியோ அவளை தங்களது காரிலிருந்தபடியே விளையாட்டாக சீண்டிப் பார்க்கிறான். இருவருக்கும் மோதல் தொடங்குகிறது.  பிறகு ரோமியோ மெல்ல அவளை அனுகி தனது பேச்சால் கவர்ந்து அவளது அன்பை பெற முயற்சிக்கிறான். ரோமியோவின்  முயற்சி பலித்ததா? அந்த சிறிய காத்திருப்பில் அவனுக்கு கிடைத்தது என்ன? என்பதே இந்த குறும்படத்தின் மீதிக்கதை.

இரண்டு கார்கள் ஒரு இரவு, இரண்டு சிறுவர்கள் ஒரு சிறுமியைக் கொண்டு இந்த குறும்படம் கருப்பு வெள்ளையில் வெகு இயல்பாக குழந்தைத்தனம் மாறாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. ரோமியோவின் குறும்புத்தனமும், அந்த பெண் பாலியின் கடைசி நிமிட பார்வையும் , இளையவன் எடியின் மிடுக்குத்தனமும் மனதை கவர்கிறது. மேலும் காத்திருப்புகளில் ஏற்படும் புதிய சந்திப்பை பற்றியும், மிக குறைந்த நேரத்தில் எதிர்பாராத விதத்தில் கிடைக்கப்பெறும் உண்மையான அன்பையும் அது கவித்துவமாக வெளிப்படுத்துகிறது. ஒரு சிறிய அழகான மறக்கமுடியாத காத்திருப்பை போன்றே இந்த குறும்படமும் இருக்கிறது. தவறாமல் பாருங்கள்.


📎
  • Two Cars, One Night
  • Written and Directed by - Taika Waititi
  • Music - Craig Sengelow
  • Cinematography - Adam Clark
  • Year - 2004
  • Country - New Zealand
  • Language - Maori