பாசம்.
பகல் வெளிப்படையானது, இரவு பல இரகசியங்களை உள்ளடக்கியது. பகலுக்கு ஆயிரம் கண்கள், இரவு இமைகளை திறப்பதே இல்லை. பகல் பல வண்ணங்களை வெளிப்படுத்துகிறது, இரவு எல்லா வண்ணங்களையும் உள்ளடக்கிக் கொள்கிறது. பகல் வெளிறியது, இரவு தேவையானவற்றின் மீது மட்டும் ஒளியை வீசுகிறது. அதனால்தான் பகலை விட இரவு அழகாக தோற்றமளிக்கிறது. அந்த அழகுடன் சரிசமமான ஆபத்தையும் இரவு தன்னகத்தே கொண்டது. அத்தகைய இரவில் நகரத்தில் சுற்றும் ஒரு இளம்பெண் மற்றும் பெண்ணாக வேடமிட்டு பாலியல் தொழில் செய்யும் நடுத்தர வயது ஆண் இவர்கள் இருவரின் சந்திப்பும் அவர்களது உறவும்தான் இந்த திரைப்படம் லவ்லி மேன்.
மதத்தின் மீது பற்று கொண்ட 19 வயது நிரம்பிய பெண் கஹாயா என்பவள் தன் தந்தையைத் தேடி கிராமத்திலிருந்து ரயிலேறி இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவிற்கு வருகிறாள். ஒரு கைப்பை அதனுள் தன் தந்தையைப் பற்றிய குறிப்பு அடங்கிய சிறு காகிதம், சில பண நோட்டுகள், குரான் புத்தகம், ஒரு செல்போனுடன் வந்திறங்கும் அவள் தன்னிடம் இருக்கும் குறிப்பைக் கொண்டு தந்தையின் முகவரியை தேடிச் செல்கிறாள். அந்த முகவரி சரியானது என்ற போதிலும் அங்கு வசிப்பது இப்ஃபு என்ற பெயருடைய நபர் என தெரிந்துகொள்கிறாள். அவரை சந்தித்தால் தன் தந்தையைப் பற்றிய தகவல் கிடைக்கும் என நினைக்கிறாள்.
பகல் இருளும் நிலையில் ஜகார்த்தா நகரம் தன் முழு அழகையும் காட்டத் தொடங்குகிறது. பெட்டிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் இப்ஃபு இருக்கும் இடத்திற்கு கஹாயாவிற்கு வழிகாட்டுகிறார். அந்த வழி அவளை நகரத்தின் பிரதான சாலைப் புறத்திற்கு கொண்டு செல்கிறது. அங்கு சிலர் பெண் வேடமிட்டு பாலியல் தொழிலுக்காக காத்திருக்கின்றனர். அவர்களிடம் இப்ஃபுவைப் பற்றி விசாரிக்க அவர்களுக்கு சற்றுத் தள்ளி சிவப்பு நிற குட்டை பாவாடையில் இருப்பவனைக் கண்டு அவள் உறைந்து போகிறாள். அது தனது நான்கு வயதில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற தன் தந்தைதான் என உணர்ந்து அங்கிருந்து நகர்கிறாள்.
இப்ஃபுவும் தன்னைத்தேடி வந்திருக்கும் இளம்பெண் தனது மகள் என பார்த்தவுடனே புரிந்து கொள்கிறான். அதை வெளிக்காட்டாது அவளை அனுகி வந்த நோக்கத்தை அறிந்து கொள்கிறான். தந்தை மற்றும் மகள் இருவருக்குமிடையில் உரையாடல் தொடங்குகிறது. இருவரும் அந்த இரவில் நகரத்தில் பேசிக்கொண்டே நடந்து ஒரு உணவு விடுதிக்கு செல்கின்றனர். உணவருந்திய பின்பு இப்ஃபு கஹாயாவிடம் இந்த நகரம் கொடுமையானது நீ விடிந்ததும் கிராமத்திற்கே திரும்பச் சென்றுவிடு என சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிச் செல்கிறான்.
கஹாயா செய்வதறியாது தனிமையில் அந்த நகரத்தில் நடக்கத் தொடங்குகிறாள். இப்ஃபுவும் தனது பாலியல் தொழிலுக்காக வாடிக்கையாளரை தேடிக் கொண்டிருக்க, அங்கு வரும் உள்ளூர் ரவுடிகளைக் கண்டு பயந்து ஓடுகிறான். வழியில் அவன் கஹாயாவை மீண்டும் சந்திக்க நேர்கிறது. தன் தந்தையை கண்டதும் கஹாயா ஓடிச் சென்று கட்டிக் கொள்கிறாள். இந்த முறை இப்ஃபு தன் மகளின் அன்பை உணரத் தொடங்குகிறான். அவளை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் பூட்டப்பட்ட பொருட்காட்சிக்கு செல்கிறான். அங்கு கஹாயா தன் தந்தையுடன் சிறிது நேரத்தை கழிக்கிறாள். மேலும் சிறுவயது நினைவுகளை அசைபோடுகிறாள்.
கஹாயா அதிகாலை தொழுகை செய்ய வேண்டுமென இப்ஃபுவிடம் கூறுகிறாள். அதற்கென அவன் ஒரு தற்காலிக விடுதியை ஏற்பாடு செய்ய அங்கு அவள் காலைக் கடனையும் தனது தொழுகையையும் முடிக்கிறாள். இருவரும் மீண்டும் தெருக்களில் நடக்கத் தொடங்குகின்றனர். இப்ஃபு தன் மகளுக்கு உடைகளையும் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க நினைத்து அருகிலிருக்கும் கடைக்கு அழைத்துச் செல்கிறான். அவ்வேலையில் மீண்டும் உள்ளூர் ரவுடிகள் அவனைத் தேடி வருகின்றனர். அங்கிருந்து அவன் தப்பித்து ஓடுகிறான். இம்முறை அவன் அவர்களிடம் சிக்கிக்கொள்ள அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்படுகிறான். இந்த சம்பவத்தால் இருவரும் மீண்டும் பிரிகின்றனர்.
கஹாயா தன் தந்தையை காணாது தவிக்கிறாள். இப்ஃபு கடுமையாக தாக்கப்பட்டு ஒரு சிறிய தெருவில் கிடக்கிறான். இரவு தனது கருப்பு ஆடையை அவிழ்க்க பொழுது விடியத் தொடங்குகிறது. கஹாயா மீண்டும் இப்ஃபுவை சந்திக்க தந்தை மற்றும் மகள் இருவரும் இணைந்தார்களா? அல்லது அவள் கிராமத்திற்கே திரும்பிச் சென்றாளா? இப்ஃபு என்ன ஆனான்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படம் முழுவதும் இரவிலே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இரவில் நகரத்தில் ஒளிரும் விளக்குகளின் இயற்கையான மஞ்சள் வெளிச்சத்தால் அனைத்து காட்சிகளும் படம்பிடிக்கப் பட்டிருக்கிறது. அந்த மஞ்சள் வெளிச்சம் நம் மீதும் ஒட்டிக் கொள்வதை திரைப்படம் பார்க்கும்போது உணர முடிகிறது. காவல்துறை ரோந்து வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்களின் சைரன் உட்பட நகர சாலையில் சொல்லும் வாகனங்களின் இரைச்சல்களும் நள்ளிரவின் மயான அமைதியும் மிகத் துள்ளியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரவின் அந்த மாய ஒலி காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இரவில் நகரத்தில் சுற்றும் ஒரு பெண், பல வருடங்களுக்கு பின்பு தந்தையைக் காணும் ஒரு பெண் என இருவேறு உணர்ச்சிகளை முகத்தில் தாங்கி கஹாயாவாக நடித்த ஹஃபர் ரெய்ஹானுன் என்பவரின் நடிப்பு கவர்ந்திழுக்கிறது. அதைவிட பெண் வேடமிட்டு பாலியல் தொழில் செய்யும் ஆணாக, அன்பான இதயம் கொண்ட அப்பாவாக, இப்ஃபுவாக நடித்த டோனி தமராவின் நடிப்பு கட்டித் தழுவத் தோன்றுகிறது. தந்தை மகள் இருவருக்குமான எளிமையான பாசப் பிணைப்பே கதை என்றாலும் அதை பிரிவு மற்றும் திடுக்கிடும் சந்திப்புடன் ரோடு ஷோ என சொல்லக் கூடிய வகை திரைப்படமாக, இரவின் ஆபத்தான அந்த அழகுடன் சொன்ன விதம் ஒரு சிறந்த படைப்பு என்ற அந்தஸ்தையும் பல விருதுகளையும் இந்த திரைப்படத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறது. அற்புதமான இந்த திரைப்படத்தை தவறாமல் தரிசியுங்கள்.
Trailer
Lovely Man
Written and Directed by - Teddy Soeriaatmadja
Music - Bobby Surjadi
Cinematography - Ical Tanjung
Year - 2011
Country - Indonesia
Language - Indonesian.