பூமிக்கு நிலவு என்ன உறவு?
வடிவம்
வளர தேய
இரவுக்காரி
வைத்திருக்கும்
அழகிய
வெள்ளைப் பொட்டு
நிலவு.
- நிலவு என்றதுமே உடனே கவிதைதான் வருகிறது...போகட்டும் விடுங்கள்... மற்ற கோள்கள் தூரத்தில் இருக்க தனியாக சுற்றுகிறதே என இரக்கப்பட்டு பிரபஞ்ச தேவன் படைத்த பூமியின் துணைக்கோள் இந்த நிலவு. அது இரவில் கொஞ்சம் வெளிச்சத்தையும் குளிர்ச்சியையும் தருகிறது. அதுபோக சிலருக்கு கவிதைகளையும் தருகிறது. இந்த நிலவு பகலில் கண்ணுக்கு தெரிவதில்லை என்றாலும் விடாமல் நம் வசிக்கும் பூமியை லோ லோ என 24X7 ஆன்லைனில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அப்படி என்றால் நமக்கும் அதற்கும் கண்டிப்பாக எதாவது உறவு இருக்கும்.
ஆமாம்! பூமிக்கு நிலவு என்ன உறவு?
பூமிக்கும் நிலவிற்கும் மூன்று விதமான உறவுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதாவது
1. பூமிக்கு நிலவு தம்பி.
2. பூமிக்கு நிலவு மகன்.
3. பூமிக்கு நிலவு அடிமை.
2. பூமிக்கு நிலவு மகன்.
3. பூமிக்கு நிலவு அடிமை.
வாருங்கள் அந்த உறவுக்குள் போகலாம்.
சூரியன் தோன்றியபோதே பூமி உட்பட மற்ற கிரகங்களும் தோன்றின, அதே நேரத்தில் அவைகளின் துணை கிரகங்களும் தோன்றின என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. நிலவை விட பூமி அளவில் பெரிது அல்லவா?. அதன்படி பூமியக்காவிற்கு நிலவு தம்பி.
ஆனால் பூமி மற்றும் நிலவின் உள்ளமைப்பை வைத்து பார்க்கையில் இந்த கருத்து வேறுவிதமாக உள்ளது. பூமியின் உட்புறத்தில் கொதிக்கும் குழம்பு நிலையில் இரும்புத் தாதுவும் நிக்கலும் உள்ளது. அது பூமியின் மொத்த எடையில் 30 சதவீத அளவிற்கு இருக்கிறது. சொல்லப்போனால் பூமி இரும்பிலே செய்த இதயம் கொண்டது. அதற்கு மாற்றாக நிலவின் உட்புறம் வெறும் 2 சதவீத அளவிற்கே இரும்பு இருக்கிறது. தவிர நிலவின் சுற்றுப்பாதை தளம் பூமியின் சுற்றுப்பாதை தளத்திற்கு இணையாக இல்லை அதனை வைத்து பார்க்கையில் பூமியும் நிலவும் ஒன்றாக உருவானது அல்ல என பல விஞ்ஞானிகள் அதனை மறுக்கின்றனர்.
இரண்டாவதாக பூமியிலிருந்து ஒரு பகுதி பிய்த்துக்கொண்டு சென்று தோன்றியதே நிலவு என்கின்றனர் ஒரு பிரிவினர். இதற்கு சான்றாக அவர்கள் பசிபிக் பெருங்கடலின் அகலமும் நிலவின் குறுக்களவும் சமமாக உள்ளதை குறிப்பிட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி வானில் தூக்கி வீசப்பட்டு உருவானதே நிலவு என்பது அவர்களின் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது. அதனை வைத்து பார்க்கையில் பூமித்தாய்க்கு நிலவு மகன்.
இந்த உறவிலும் சிக்கல்கள் இருக்கிறது. பூமியில் கடல்கள் சுருங்குவதும் விரிவடைவதும் தொடர்ந்து நிகழ்வதேயாகும். பசிபிக் பெருங்கடலின் அகலமும் நிலவின் குறுக்களவும் சமமாக இருப்பது தற்செயலே மேலும் நிலவில் இருக்கும் மண் மற்றும் பாறைகளை ஆராய்ந்ததில் பூமியின் ஒரு பகுதிதான் நிலவு என்பது சாத்தியமற்ற ஒன்று என்கின்றனர் பலர்.
மூன்றாவதாக இந்த பிரபஞ்சத்தில் சூரிய மண்டலம் பெரும் வெடிப்பிற்கு பின்பு தோன்ற அதுபோல் எங்கோ உருவான நிலவு பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு வேறு வழியில்லாமல் தேமே என்று இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் சிலர். மேலும் சிலரோ ஆகாயத்தில் இருக்கும் பல வின்கற்கள் ஒன்றாக இணைந்து நிலவாக மாறி பூமியை சுற்றுகிறது என்கின்றனர். அதன்படி பார்த்தால் எஜமான் பூமிக்கு நிலவு அடிமை.
இந்த மூன்றாவது உறவும் நிருபிக்கப்படாமல் இருக்க அதனையும் தாண்டி பூமிக்கும் நிலவிற்கும் ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட மூன்றுவிட்ட தூரத்து விட்ட உறவுமுறைகள் ஏதேனும் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் இன்றுவரை தொடந்து கொண்டிக்கிறது. அதற்கென விண்வெளி வீரர்களும் ஆளில்லாத விண்கலங்களும் வலது காலையும் வலது வீலையும் நிலவில் எடுத்து வைக்க, பூமிக்கும் நிலவிற்கும் என்ன உறவு இருந்தால் நமக்கென்ன நிலவு என்றாலே அழகு என அடுத்த கவிதைக்கு செல்வோம்.
கருப்பழகி
கண்ணத்தில்
வெள்ளைப் புள்ளி
திருஷ்டி.
கண்ணத்தில்
வெள்ளைப் புள்ளி
திருஷ்டி.