சதி.


னைவி என்பவளின் பெருமையைப் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அதில் மனைவி இறக்க இனி எப்படி வாழ்வேனோ என கணவன் பாடியதாக ஒரு புறநானூற்று பாடலை குறிப்பிட்டிருந்தேன். அதற்கென தகவல்களை சேகரிக்க இந்த பாடலையும் கடக்க வேண்டியிருந்தது. இந்த பாடலும் மனைவியின் பெருமையை பறைசாற்றுகிறது. இதில் கணவன் இறக்க இனி வாழ்தல் தகுமோ என மனைவி அவனுடன் சேர்ந்து எரிகிற சிதையில் வீழ்வதே சிறந்தது என பாடியதாக அமைந்திருக்கிறது. மேலும் இது சுதத்திரத்திற்கு முன்புவரை நமது நாட்டில் வெகுவாக நடைமுறையில் இருந்த சதி என்ற பழக்கத்தை பற்றியும் அது சங்ககாலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.


கணவன் இறந்தால் கைம்பெண் அல்லது விதவைக்கோலம் தறிப்பது மனைவியாக்கப்பட்டவளின் சாபம். அதுபோக கணவன் இறந்தவுடனே அவனுடன் சேர்ந்து எரிகிற தீயில் மனைவியும் சாம்பலாகுவதே சதி என அழைக்கப்பட்டது. சதி என்ற வடமொழி சொல்லுக்கு சத்தியமானவள் என்று பொருள். சக்தி என்றும் கூறலாம். சமஸ்கிருதத்தில் சட்டி (Satti) என்றால் நல்ல மனைவி. ஆங்கிலையோர்கள் இந்த பழக்கத்தை Widow Burning என அழைத்தனர். தமிழில் உடன்கட்டை ஏறுதல் என்று சொன்னால் தெளிவாகப் புரியும். தாமாகவே முன்வந்து பிராணநாதா என இதில் விழுவது ஒருவகை. வலுக்கட்டாயமாக சாஸ்திரம் சம்பிரதாயம் சாம்பிராணி ஊதுபத்தி என தள்ளப்படுவதும் உண்டு. அவ்வாறு இதனை மேற்கொள்ளும் பெண்கள் கடவுளாக கருதப்பட்டு அவர்கள் சதிமாதா என வணங்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

இந்தியாவில்தான் சதி என்ற செயல் தொடங்கியதாக கருத்து இருக்கிறது. ஆனால் கி.மு 317 -ல் ரஷ்ய நாட்டில் இது நடைமுறையில் இருந்ததாக Arthur Coke, Burnell and Henry Yule எழுதிய Hobson Jobson (The Anglo Indian Dictionary) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போர் முடிந்தவுடன் ஒரு நாட்டின் வெற்றிக்கு பின்பு தோல்வியடைந்த நாட்டின் மகாராணிகள் தீயில் விழுந்து உயிர்விட்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட சித்தூர் மகாராணி தீபிகா படுகோண் போல மன்னிக்கவும் பத்மினியைப் போல. கிரேக்கத்திலும் இது வழக்கத்திலிருந்தது. அங்கு மன்னன் இறந்ததும் அவரது மனைவி, துணைவி, துணை மனைவி என எல்லா வி-க்களின் தலை வெட்டி வீசப்பட்டிருக்கிறது. அல்லது அவர்களுக்கு உயிருடன் ஜீவ முக்தி பிரமிடு பவ அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு நோகாமல் பாலிலோ ஒயினிலோ பலரசத்திலோ துளி விஷம் கலந்து அப்படியே சாப்பிடவும் என  கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே விஷம் பிடிக்காத சில கணவன்களுக்கும் ஆசையாக ஊட்டப்பட்டிருக்கிறது. ஜெர்மனி நாட்டில் கணவன் இறந்ததும் மனைவியை தூக்கிலிடுவது நடைமுறையில் இருந்திருக்கிறது.

இந்தியாவில் பதினென்றாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் இந்த வழக்கம் பிரபலமானது. பிறகுவந்த காலங்களில் காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இது ஒரு இந்து மத சடங்காக மாறி மத ரீதியான பார்வைகள் விழத் தொடங்கியது. இந்து மதம் மட்டுமல்லாது சமண மதம், ஜெயின் மற்றும் சீக்கிய மதத்திலும் பீகாரில் இஸ்லாமிய மதத்திலும் இதனை பின்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்தியாவிற்கு வந்த ஆங்கிலையோர்களே இதனை முதலில் எதிர்க்கத் தொடங்கினர். அவர்களில் மதபோதகரான வில்லியம் கேரி என்பவரே இந்த வழக்கத்திற்கு எதிராக குறல் கொடுக்க இங்கிலாந்து சட்டமும் இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த இராஜாராம் மோகன்ராய் போன்ற பலரும் இதற்கு எதிராக பாடுபட சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் சுதந்திரத்திற்கு பின்பு வெகுவாக குறையத் தொடங்கியது. ஆனாலும் 1987 -ல் ராஜஸ்தானில் உள்ள தேவ்ராலா கிராமத்தை சேர்ந்த ரூப் கன்வார் என்ற 18 வயது பெண் பலியானதற்கு பிறகே 1988 ஆண்டு இந்தியாவில் இதனை முற்றிலும் தடைசெய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இன்று கணவன் மனைவியை கொல்லவும், மனைவி கணவனை கொல்லவும் சதி திட்டம் தீட்டும் உன்னத வழக்கத்தைத் தவிர  உடன்கட்டை ஏறுதல் என்ற சதி முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

இந்த பாடல் அத்தகைய சதி என்ற வழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததை தெளிவுபடுத்தினாலும் சங்க காலத்தில் கணவனை தொலைத்த விதவை என்பவள் எப்படி நடத்தப்பட்டால் (பாடலில் குறிப்பிட்டபடி பழைய சாதம், எள் துவையல்,  வேளைக் கீரையை மட்டும் உணவாக உட்கொண்டு கல் படுக்கையில் படுத்து காலத்தை கடத்தியிருக்கிறாள்) என்பதையும் விவரிக்கிறது. மேலும் பெண்ணியத்தின் விவாத பொருளாகவும் இருக்கிறது.

இந்த பாடலுக்கு சொந்தக்காரி ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு (பூதப்பாண்டியனைப்பற்றி அடுத்த பதிவில் பார்போம்). அந்த பாண்டியன் இறந்ததும் அவனது உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுகிறது. அவனது மனைவியான பெருங்கோப்பெண்டு அவனுடன் அந்த ஈமத்தீயில் விழுந்து சாகத் துணிகிறாள். அங்கிருக்கும் சான்றோர்கள் அவளைத் தடுத்து கணவனுக்கு பின் நாட்டை ஆள  வேண்டுகின்றனர். ஆனாலும் அவள் சான்றோர்களின் அறிவுறைகளை கேட்காமல் விதவையாக இந்த சமுதாயத்தில் இன்னல்பட்டு வாழ்வதை விட இறப்பதே மேல் அதையே நான் விரும்புகிறேன் என இந்த பாடலை பாடியிருக்கிறாள்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

பொருள்,

பல குணங்கள் நிறைந்த பெரியோர்களே! பல குணங்கள் நிறைந்த பெரியோர்களே! உன் கணவனோடு நீயும் இறந்து போ என்று கூறாமல், நான் என் கணவனோடு ஈமத்தீயில் விழுவதை தடுக்க நினைக்கும் பெரியோர்களே! அணில்களைப் போல மேல்பக்கத்தில் கோடுகளை கொண்ட வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளை ஒத்திருக்கும் வெள்ளை நிறத்தோடு நெய் கலக்காது பானையின் அடிப்பகுதியில் நீருடன் இருக்கும் சோற்றைப் பிழிந்து, அதனுடன் வெள்ளை நிற எள்ளை அரைத்து செய்த துவையலை தொட்டுக்கொண்டு, புளி சேர்த்து சமைத்த வேளைக்கீரையை உணவாக உட்கொண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் படுத்து தினமும் வருந்தும் கைம்பெண்களைப் போன்று நானும் ஒருத்தியாக இருக்க மாட்டேன். அதற்கு பதில் அவனுடன் சேர்ந்து தீயில் எரிவேன். என் கணவனுக்காக சுடுகாட்டில் கட்டைகளை அடுக்கி செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் கொடுமையானதாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது அரும்புகளே இல்லாத தாமரை மலர்ந்த நீர் நிறைந்த குளத்தைப் போன்றது.