சின்ன அரயத்தி.
ஆதிவாசிகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் என்றதும் அழுக்கானவர்கள் ஆடையில்லாதவர்கள், படிப்பறிவற்றவர்கள், நர மாமிசம் சாப்பிடுபவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்ற பிம்பம் நமக்குள் வந்து மறையும். ஆனால் இயற்கையை கடவுளாக கருதி அதனுடன் மட்டுமே மல்லுக்கட்டி நாமெல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு கள்ளங்கபடமில்லாமல் வாழும் வாழ்க்கை முறைக்கு அவர்கள் சொந்தக்காரர்கள். இந்திய மக்கள் தொகையில் 8.6 சதவீதத்தினர் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என ஆய்வரிக்கை குறிப்பிடுகிறது. அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், பூர்வ குடிகள், அட்டவணை ஜாதி இனத்தவர்கள் என 366 வது சட்டப்படி பிரிக்கப்பட்டிருக்க, அவர்களுள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் அந்த ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருப்பது சிறப்பிற்கு உரியது.
கேரளாவைச் சேர்ந்த நாராயண் என்பவர் கொச்சரேத்தி என்ற பெயரில் மலையாளத்தில் எழுதிய இந்த நாவல் தமிழில் சின்ன அரயத்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாராயண் இதில் ஆதிவாசி சமூகத்தைப் பற்றி வரலாறாகவோ அல்லது அனுபவமாகவோ அல்லது ஆய்வரிக்கையாகவோ குறிப்பிடாமல் கொச்சுராமன் என்ற ஒரு ஆதிவாசியின் அறுபது வருட வாழ்க்கையின் வழியே அந்த சமூகத்தை விவரித்துள்ளார்.
கொச்சுராமனின் பால்யத்தில் நாவலின் கதை தொடங்குகிறது. அவன் காட்டுச் செடியாக வளரத் தொடங்கி இளமைப்பருவம் அடைந்து குஞ்ஞிப்பெண்ணு என்பவளை திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று அவர்களும் வளர்ந்து ஒரு மரமென அந்த காடே கதியென அவன் முதுமையடையும் வரை நாவலின் கதை பயணிக்கிறது. அந்த கதை பயணத்தில் ஆதிவாசி சமூகத்தின் வாழ்க்கைமுறை, சடங்குகள், நம்பிக்கைகள், உணவுமுறை, தாம்பத்தியம், வேளாண்மை, மருத்துவம் இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் நூறு வருடங்களுக்கு முன்பு கேரள மக்களின் சமூகத்தில் நுழைந்த நவீன வாழ்க்கைமுறைக்கு ஒரு ஆதிவாசி சமூகம் எப்படி உடன்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த நாவலில் ஆதிவாசிகளைத் தவிர்த்து மன்னர்கள், ஜமின்தாரிகள், தம்புராண்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், வியாபாரிகள், வரி வசூலிப்பவர்கள், அவர்களின் கைகூலிகள் என மற்றவர்களும் வருகின்றனர். அவர்களின் ஆதிக்கம் கை ஓங்க அதுவரை விலங்குகளை மட்டுமே ஆபத்தான எதிரியாக கருதிய ஆதிவாசி மக்கள் அதைவிட ஆபத்தான மற்ற சமூகத்தை சாந்தவர்களை எப்படி எதிர்கொண்டனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே முற்போக்கு இலக்கியமாகவும் தலித் இலக்கியமாகவும் இந்த நாவலை அடையாளப்படுத்துகிறது.
இன்றைய சூழலில் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. மலைகள் கனிம வளங்களுக்காக சுரண்டப்பட்டுவிட்டன. சின்னத்தம்பியைப் போல பலரும் ஊருக்குள் புக ஆதிவாசி சமூகங்களும் நவீனத்துவத்திற்கு உட்பட தொடங்கிவிட்டன. பற்றாக்குறைக்கு அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையும் இதில் சேரும். அதனூடே பழையன கழிதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அது நடைமுறைக்கு வரும்போது ஏற்படும் மன உளைச்சல்களை தடுக்கவே இயலாது. மேலும் சமூக மற்றும் குடும்ப ரீதியிலான நம்பிக்கைகள் குறையாமல் நவீன மாற்றத்திற்குள் அடியெடுத்து வைக்கவே இயலாது. இந்த நாவலில் நாராயண் காட்டும் ஆதிவாசி சமூகத்தின் மாற்றமும் அத்தகையதே. இன்று எங்கோ! ஏதோ! எப்படியோ! எஞ்சியிருக்கும் ஆதிவாசிகள், பழங்குடியினர், மலைவாழ் மக்களுக்கும் இது பொருந்துவதே.
அற்புதமான இந்த நாவலை தவறாமல் வாசியுங்கள்.
சின்ன அரயத்தி
நாராயண்
தமிழில் - குளச்சல் மு. யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்.
நாராயண்
தமிழில் - குளச்சல் மு. யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்.