சில நேரங்களில் நான்.
வழக்கமாக சாப்பிடுவதைவிட ஒரு ரெண்டு பெக் எக்ஸ்ட்ரா சாப்பிட்டால் என்ன வரும்? ... அதேதான்.... தத்துபித்துக்களின் தொகுப்பு இந்த பகுதி.
சித்தார்த்தனின் ஆசையே
புத்தன்.
சொற்களை தொலைத்த நான்
மௌனத்தின் எச்சம்.
பூனைதான் ஆனால்
புலியினம்.
என்னிலை சாம்பாரிலும்
பெருங்காயம்.
பிழைக்கிற நாய்
கடிக்காது.
நரைத்த முடியைவிட
டை அடித்த முடிக்கு
விமர்சனம் அதிகம்.
சுடும்.
இரண்டு இலை துளிர்விட்டிருந்தது
எப்போதோ நான் புதைத்த இரகசியம்.
என்மேல் விழுந்த கற்களைக் குவித்து
அதன்மேல் நின்றுதான்
பேசிக் கொண்டிருக்கிறேன்.
எல்லாம் உணர்ந்து திருந்தியபோது
எனக்குள் இருந்த புத்தன்
சித்தார்த்தனாக மாறிக்கொண்டிருந்தான்.
அதி புத்திசாலித்தனத்திற்கு பிறந்த
குழந்தையின் பெயர்
திமிரு.
கோழைத்தனம்
செல்ஃபி எடுத்துக்கொள்கிறது
சுயநலத்தை.
ஊதிக் களைத்தபின் உணர்ந்தேன்
அடச்சே! ...செவிடன் காது.
எனது எல்லா தவறுகளையும்
தனிமையின் தலையில் கட்டிவிடுகிறேன்...
தனிமையோ!
என் தலையைக் கட்டிக்கொண்டிருக்கிறது...
மிதித்து உணர்வதே
ச்... சீய்... அசிங்கம்.
அளந்துதான் வைத்திருக்கிறான்
புலிக்கும் வால்.
மலமெது பழமெது தெரியாத
ஈக்கள்.
நாலுபேர்
நாலுவிதமாக பேசிவிட்டு போகட்டும்,
ஐந்தாவது ஆள்
என்ன சொல்கிறான் பார்ப்போம்.
தயவு செய்து
வெளிச்சம் வேண்டாம்.
இப்படிக்கு
என் இருட்டு பக்கம்.
ஆமை ஜெயிக்க
முயல் தூங்க வேண்டும்.
பேசியே மண்டியிட வைத்துவிட்டால்
முஷ்டியை உயர்த்த சிரமமிருக்காது.
நிம்மதியான தூக்கம் என்பது
முதல் கொசு கடிக்கும் வரைக்கும்தான்.
கடற்கரைக்கு
கால் நனைக்க மட்டுமே வந்தால்
யார்தான் சுண்டல் விற்பது?
ஓநாய் நனைகிறதென
ஆடு அழுதபோதுதான்..
முதல் வரியிலேயே என்னைத் தேடாதீர்கள்
முற்றுப்புள்ளியில் கூட நானிருக்கலாம்.
அது உண்மையாகி
அதுவே உண்மை என்றும் ஆகிவிடுகிறது.
ஆடுகள் யோசிக்கத் தொடங்கிவிட்டால்
மேய்ப்பவனுக்கு வேலையில்லை.
புறத்தோற்ற
புள்ளிகளும் கோடுகளும் மட்டுமே
தீர்மானிக்கின்றன
இது புலி
அது பூனை.
வேடிக்கை மட்டும் பார்க்கும்
வாழ்க்கை நகர்வில்
எந்த சலனமும் இல்லை.
எதிர்பாராமல் கடந்துபோனவைகள் பெரும்பாலும்
எதிர்பார்த்தவைகளே.
பச்சோந்திக்கு
அந்தப் பழக்கம் இருக்கலாம்,
ஓணான் நிறம் மாறுவதில்லை.
சந்தர்ப்பமும் சரியான வார்த்தைகளும்
கல்லைக் கண்டால் நாயை காணோம்,
நாயைக் கண்டால் கல்லை காணோம்.
மறுக்கும் குரல் தெளிவாக கேட்காதவரை
திரும்பத் திரும்ப ஒலிக்கும் பொய்
உண்மை.
' இதுவும் கடந்து போகும்' என்பதை
ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தால்,
'அதுவா பழகிறும்'
தோற்றத்தை வைத்து
முடிவு செய்து விடாதீர்கள்.
ஒருவேளை நான்
மாறுவேடத்தில் இருக்கலாம்.
ஆடு நனைகிறது
ஓநாயின் கண்ணீரில்.
சொற்களில் தேன் தடவுகிறார்கள்,
வார்த்தைகளைச் சுற்றி
ஈ மொய்க்கிறது.
சிலர் ருசியோடு
திருப்தி அடைந்துவிடுகிறார்கள்,
சிலர் அடுப்படி வரை
ஆராய்ந்து பார்க்கிறார்கள்.
தெரிந்தே தொலைத்தவைகள்தான்
தொலைந்து போனவைகளின்
பட்டியலில்.
ஒன்றை மறக்க சிறந்த வழி
அட! விடுங்க
அது அப்படியே இருக்கட்டும்.
நாற்றம் பிடித்த ஊரில்
Axe அடித்தவன்
அதிசயமாகத்தான் தெரிவான்.
கோழைத்தனம் செல்பி எடுத்துக்கொள்கிறது
சுயநலத்தை.
ஊதிக் களைத்தபின் உணர்ந்தேன்
அடச்சே! செவிடன் காது.
சாதி என்பது மயிர்
மீசை மயிர்.
சிலர் முறுக்கிக் கொள்கிறார்கள்,
சிலர் குறைத்துக் கொள்கிறார்கள்,
சிலர் மழித்துக் கொள்கிறார்கள்.
பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள்
வாழத் தெரியாதவர்கள்.
நான் கடவுளை நாடிச் செல்வதில்லை
அவரும் என்னை எதிர்பார்ப்பதில்லை.
மதம்
கரடுமுரடான வாழ்க்கையைக் கடக்க
தைக்கப்பட்ட 'செருப்பு'
சிலர் கக்கத்திலும்
சிலர் தலையிலும்
தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
நல்ல விதைகளை நாம்
முளைக்க விடுவதேயில்லை.
நடந்து முடிந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால்
வருத்தமே மிஞ்சும்.
ஆராய்ந்தால் உண்மை மிஞ்சும்.
அட்வைஸ் என்பது
அனுபவம் + இயலாமை.
பயம் அதிகரிக்க அதிகரிக்க,
பாவம் அதிகரிக்க அதிகரிக்க,
வீட்டிலிருக்கு சாமி படங்களும்
அதிகரிக்கின்றன.
மரம் நகரவில்லை நாம்தான் நகருகிறோம் என
உணர்ந்தபோது
சன்னலோர இருக்கை
சுவாரசியமற்று போனது.
என் கண்களும் உதடுகளும்
அன்பின் பிரிவுகளை
பிறருக்கு அறிவிப்பதேயில்லை.
ஏனென்றால் எனக்கு கொஞ்சம் நடிக்க வரும்.
உண்மையான நட்பு வேண்டுமா?
6 வயதிற்கு மிகாமலும்
60 வயதிற்கு மேலும்
பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை
பல திருப்பங்கள் நிறைந்த
அழகிய பக்கங்கள் கொண்ட புத்தகம்.
எல்லோரும்
முன்னுரையையும் முடிவுரையையும் படித்துவிட்டு
மூடி வைத்துவிடுகின்றனர்.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்காதே
தரித்திரம் என்கின்றனர்.
உடையாமல் பார்த்தாலும்
அதுதான் தெரிகிறது.
சற்று இளைப்பாற
பாரத்தை இறக்கி வைத்தேன்,
கனத்தது தோள்.