Kathakaar - கதைசொல்லி.
விதவிதமான முகபாவனையில் ஏற்ற இரக்க குரலில் கதாபாத்திரமாக மாறி குழந்தைகளை மட்டுமல்லாமல் ஏன்? ஏதற்கு? எப்படி? எனத் தெரியாமல் வளர்ந்தவர்களும் ரசிக்கும்படியாக கதை சொல்லுதல் என்பது ஒரு கலை. அதை கையாளத் தெரிந்தவர்கள் கதைசொல்லிகள். இன்றைய சூழலில் கூட்டுக்குடும்ப உறவுகள் சிதைந்து தாத்தா பாட்டிகள் கூட தனிக்குடித்தனம் போக கதைகளும் தனிக்குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டன. நமக்கு வெகு அருகிலிருந்த கதைசொல்லிகளுக்கும் இடமில்லாமல் போயின. சரி..தற்போது இணைய வழியே இருந்த இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே!...ஆக...இந்த கதைகளும் கதைசொல்லிகளும் தேவையா என்றால்? கதை கேட்டறியும் குழந்தைகள் வாழ்வில் என்றுமே தோற்பதில்லை. இந்த குறும்படம் கதைகளின் அருமையைப் பற்றியும் கதை சொல்லியாக மாறிய ஒருவரைப் பற்றியும் அழகாக காட்டுகிறது.
திரையரங்கில் ஆபரேட்டராக பணிபுரியும் பிரகாஷ் என்பவருக்கு சினிமாவின் மீதும் கதைகளின் மீதும் ஆர்வம் இருக்கிறது. இருந்தபோதிலும் நவீனம் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒட்டாமல் அவர் வேலையை இழக்க நேரிடுகிறது. அதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார். வேலை இழந்த மனசோர்வுடன் அடுத்தது என்ன செய்வது என்ற குழப்ப நிலையில் இருக்கும் அவர் ஒருநாள் அழுகின்ற குழந்தையை சமாளிக்க எதேச்சையாக ஒரு கதையை சொல்லத் தொடங்குகிறார். அதுவரை தன் மனதில் பொதிந்து வைத்திருந்த கதைத் திறனை அதில் வெளிப்படுத்துகிறார். அவர் கதை சொல்லும் விதம் மற்றவர்களையும் கவர அந்த கிராமத்திற்கே அவர் கதை சொல்லியாக மாறுகிறார். திரையரங்குகளில் ஆபரேட்டராக இருந்து மக்களை மகிழ்வித்தது போல் கதை சொல்லியாக தன் காலத்தை மனப்பூர்வமாக கடத்துகிறார்.
இந்த குறும்படம் கதையின் அருமையை உணர்த்தினாலும் மல்டிபிளக்ஸ் வகை திரையரங்கம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றினால் சிதைந்து போன பல திரையரங்குகளின் நிலையையும் அதில் பணிபுரிந்தவர்களின் திசைமாறிய வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது.
📎
- Kathakaar
- Written & Directed by - Abhianu Kanodia
- Music - Madhur Padwal
- Cinematography - Mitesh Parvatneni
- Art - Kunal Ashok
- Country - India
- Language - Hindi
- Year - 2016.