ஃபாரென்ஹீட் 451.



புத்தகங்களுக்கு என்று உயிர் உண்டு. அது பார்வைக்கு அப்பாற்பட்டது. புத்தகங்களுக்கு என்று ஒரு தன்மை உண்டு. அது தொட்டு உணரக்கூடியது. ஆனால் அதை கையில் எடுப்பது என்பது தொலைந்துபோன பழக்கத்தில் ஒன்று. 

புத்தகம் தீப்பற்றி எரியும் வெப்பநிலையே ஃபாரென்ஹீட் 451.

இன்றை சுழலில் மக்களை கிறங்கடிக்கும் ஜனரஞ்சகக் கேளிக்கைகள் அதிகம். ஒரு சொடுக்கில் தேவையானதை பார்க்கவோ கேட்கவோ விளையாடவோ செய்யலாம். ஒரு சொடுக்கில் ஆடியோ பாடியோ பேசியோ அல்லது எதையாவது காட்டியோ இருப்பதை இவ்வுலகிற்கு தெரியப்படுத்தலாம். ஒரு சொடுக்கில் தூரத்திலிருப்பவர்களை அருகிலும் அருகிலிருப்பவர்களை தூரத்திற்கும் இடமாற்றலாம். ஒரு சொடுக்கில் உள்ளங்கையில் உலகத்தை கொண்டுவந்துவிடலாம். உயிரணுவை அனுப்பும் வசதி வாய்க்கப்பெற்றால் இனப்பெருக்கமும் இணையவழி சாத்தியமாகலாம். அத்தகைய கேளிக்கைகளைத் தவிர்த்து அவற்றில் கூட சிறு சிறு செய்திகளை நின்று நிதானித்து வாசிக்க தோன்றுவதேயில்லை. வாசிப்பது என்பது பலருக்குப் பிரமப்பிரயத்தனம். அதனால்தான் கல்வியறிவில் உலகத்தரத்திற்கு உயர்ந்திருந்தாலும் புத்தகங்களே இல்லாத வீடுகளில் வசிக்க பழகிவிட்டோம். இது தெரிந்தோ என்னவோ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அமேரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி என்பவர் தீர்க்கதரிசனமாக இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

புத்தகங்கள் வாசிப்பதும் அவற்றை வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டில் மோன்டாக் என்பவன் தீயணைப்பாளனாக வேலை செய்கிறான். தொழில்நுட்பத்தால் நன்கு முன்னேறிய அந்த நாட்டில் தீ ஏற்படுவது அறிதான ஒன்றாக இருந்த போதிலும் எங்கெல்லாம் புத்தகங்கள் இருக்கிறது என கண்டறிந்து அவற்றை தீயிற்று அழிப்பதே தீயணைப்பாளர்களின் வேலையாக இருக்கிறது. மோன்டாக்கும் அந்த வேலையை மகிழ்ச்சியுடனே செய்துவர ஒருநாள் தற்செயலாக வழியில் சந்திக்கும் இளம்பெண் அவனது வாழ்க்கையை சற்று திசைதிருப்புகிறாள். அதுவரை தன் தொழில்மீது அவனுக்கு இருந்த பிடிப்பு நழுவுகிறது. தான் எரிக்கும் புத்தகங்களில் ஒன்றையாவது எடுத்துக் கொண்டுவந்து தன் மனைவிக்கு கூட தெரியாமல் அவன் ஒளித்து வைக்கிறான். அவற்றின் ஒருசில பக்கங்களை வாசிக்கவும் தொடங்குகிறான். மோன்டாக் சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களும் ஒருநாள் வெளி உலகத்திற்கு தெரியவர அதனை அழித்து அவனை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அதிலிருந்து தப்பிக்கும் அவன் தன்னைப் போலவே பாதிக்கப்பட்டவர்களுடன் இணைகிறான். இந்நிலையில் நாட்டில் போர் தொடங்குகிறது. போருக்குப் பின்பு மக்களிடமும் அவர்களது மனங்களிடமும் ஆளும் அரசிடமும் எதாவது மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் புத்தகளை பாதுகாக்கும் நூலக இயக்கத்தில் அவன் சேருவதாக இந்த நாவலின் கதை முடிகிறது. 

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் வருங்காலத்தில் மக்கள் எப்படி வாழ்வார்கள் என கற்பனையோடு எழுதப்படும் கதைகளை விஞ்ஞான புனைவுக் கதைகள் என்பார்கள். ரே பிராட்பரி இந்த நாவலை அந்த வகை விஞ்ஞான புனைவு கதைபோல தொடங்கினாலும் வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் மையமாக கொள்ளாமல் எதிர்கால மக்களின் நடத்தையும் சிந்தனையும் மனதும் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு இந்த நாவலை கனவிலக்கியமாக (Utopian Literature) நாயகனின் மனதின் பரிணாமமாக படைத்திருக்கிறார். 

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு எரிகிற தீயில் கொள்ளியை பிடுங்கிய அமேரிக்காவின் பொருளாதாரம் கற்பனைக்கு எட்டாத உயரத்திற்கு வளர்ந்தது. மக்களின் கையில் காசு பணம் துட்டு மணி எல்லாம் சரளமாக புழங்க வாங்கும் திறனும் அதிகரித்தது. அதே வேளையில் தொழில்நுட்ப புரட்சியின் மிகப்பெரிய சாதனையான தொலைக்காட்சி சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு பிரபலமானது. இந்த தொலைக்காட்சி அதுவரை சுயமாக சிந்தித்து பொதுவாக வாழ்ந்த மக்களை தனிஅறைக்குள் தள்ளி ஜனரஞ்சக கேளிக்கைகளின் பக்கம் திருப்பியது. அந்த தொலைக்காட்சியை ஆளும் அரசும் அதிகாரமும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள மக்களின் சிந்தனையும் கலாச்சாரமும் அழிவை நோக்கி நடைபோடத் தொடங்கியது. ஒரு நாட்டில் வசிக்கும் மக்களை கண்காணித்து அடக்கி ஒடுக்கி சர்வாதிகாரத்தை புகுத்தி அவர்களின் சுதந்திரத்தை குறைக்கும் அரசை விட அந்த மக்களை போலியான கவர்ச்சியினால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சக கேளிக்கைகள் மிகவும் ஆபத்தானது. அவற்றின் மீது அச்சப்பட்டு மக்களிடம் வாசிப்பு என்ற பழக்கம் குறையத் தொடங்குவதையும், கேளிக்கைகள் வளர்வதையும் சுட்டிக்காட்டியே ரே பிராட்பரி இந்த நாவலை இன்றைய சூழலுக்கு பொருந்துமாறு எழுதியிருக்கிறார். அமேரிக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவரும், சிறுகதை  நாவல் நாடகம் திரைக்கதை கவிதை என எழுத்தை நேசித்தவருமான அவரின் இந்த நாவல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பலமுறை திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. அதனை தமிழில் புத்தகமாக கொண்டு வந்ததும் பாராட்டிற்கு உரியதே. 

Fahrenheit 451 (1966) Movie Trailer

Fahrenheit 451 (2018) Movie Trailer 

ஃ பாரென்ஹீட் 451
ரே பிராட்பரி
தமிழில்
வெ. ஸ்ரீராம்
க்ரியா பதிப்பகம்.