உரிமைக் குரல்.

னநாயக கழுத்து நெறிக்கப்படும்போது உரிமைக்குரல் சப்தமாக ஒலிக்கத் தொடங்குகிறது. அது தனி ஒருவரின் குரலாகக்கூட இருக்கக்கூடும். இன்று நாம் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் இயற்கைக்கு ஆதரவாகவும் உரிமைக்குரல் எழுப்பி போராடிக் கொண்டிருக்கும் திட்டங்களான ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், நியூட்ரினோ, முல்லை பெரியார், மேகதாது, எட்டுவழிச்சாலை போன்றவற்றிற்கு பின்னலும் யாரோ ஒருவரின் எதிர்ப்பு குரல் முதலாவதாக ஒலித்திருக்கும். அப்படிப்பட்ட தனி ஒருவரின் கதைதான் இந்த திரைப்படம் Woman at War.



இந்திய சினிமாவின் டூயட் களமான ஐஸ்லாந்து தீவின் மலைப்பகுதியில் நியோ டின்டே என்ற அலுமினிய ஆலை செயல்படத் தொடங்குகிறது. தொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, அந்நிய முதலீடு என வழக்கமான பிதற்றல்களுக்கிடையே தொடங்கப்பட்ட அந்த ஆலையை எதிர்த்து ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஹல்லா என்பவள் முதலாவதாக உரிமைக்குரலை எழுப்புகிறாள். பாடகி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான அவள் தன் நாட்டின் இயற்கைவளம் கொள்ளை போவத்திற்கு எதிராக அந்த அலுமினிய ஆலைக்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை தனி ஒருவளாக துண்டித்து போராட்டத்தை தொடங்குகிறாள். அவளது போராட்டம் பலரது கவனத்திற்கும் செல்ல ஆலை நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கும் காவல்துறையின் கண்காணிப்பிற்கும் சட்டவிரோத நடவடிக்கைக்களுக்கும் உள்ளாகிறாள். தேடப்படும் குற்றவாளியாக இருந்த போதிலும் அந்த ஆலைக்கு அருகில் வசிக்கும் கிராமத்தாரிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் பாடல்களைப் பாடியும் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறாள். நியயமான மனுக்களின் மூலம் அரசாங்கத்தின் பூட்டிய கதவுகளை இயேசுநாதரின் அறிவுறைப்படி தட்டவும் செய்கிறாள். இடையில் தான் தத்தெடுக்க நினைக்கும் உக்ரைன் நாட்டு அநாதை குழந்தை ஒன்று அவளது போராட்டத்தை திசைதிருப்புகிறது. அந்த அநாதை குழந்தை, அவளது போராட்டம், அரசாங்கத்தின் மிரட்டல்கள் இவற்றிற்கிடையே அவள் வெற்றி பெற்றாளா? அந்த அலுமினிய ஆலை என்ன ஆனது? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை. 


இந்த திரைப்படத்தின் கதைக்கரு ஒரு டாகுமெண்டரி திரைப்படத்திற்கு உரித்தானது என்றாலும் இது ஒரு சிறந்த திரைப்படம் என்ற அந்தஸ்த்தை பெற இதயப் பூர்வமான சில காரணங்கள் இருக்கிறது. 

❤ ஒரு பெண் அவளது வாழ்க்கை அதனுடன் அவள் மேற்கொண்ட போராட்டத்தை அரசியல், நகைச்சுவை, இசை, கலந்து ஒரு சமூக நாடகமாக சலிப்புத்தட்டாமல் சொன்ன விதம்.

❤ ஆழும் அதிகார வகத்திற்கு எதிரான போராட்டமே கதை ஆகையால் கைத்தட்டல்களும் எச்சில் தெறிக்கும் வசணங்களும். பீரங்கி பிரச்சாரங்களும் இருக்கும் என்றில்லாமல் வெகு இயல்பாக நகரும் உரையாடல்கள். 

❤ இயற்கை அது கொள்ளைபோவதற்கு எதிராக போராடும் களம் ஆகையால் அந்த இயற்கையை ஒவ்வொரு காட்சியிலும் பின்புலமாக மறைபொருளாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நுணுக்கம். 

❤ அதே ஒளிப்பதிவில் நாயகியின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வானிலை அமைப்பு (இனிமையான தருணங்களில் வெளிச்சமான காட்சிகளும், சில நேரங்களில் மழை மற்றும் பனித்துளி என மங்கிய காட்சிகளும்). 

❤ கதையோடு இழையோடும் இசை (அந்த மூன்று உக்ரைன் பாடகர்களின் பாடல்கள் தனி அழகு).

❤ நாயகின் உணர்சிகளே திரைப்படத்தின் பலமாக இருக்க அந்த போராட்ட நாயகி ஹல்லாவாக நடித்த ஹால்டோரா ஜிராஹெர்ட்டோடிர் என்பவரின் நடிப்பு. 

- என சொல்லிக்கொண்டே போனாலும் இது ஒரு சிறந்த திரைப்படம் மட்டுமல்லாமல் இன்றைய சூழலுக்கு அவசியம் தேவைப்படும் திரைப்படமாகவும் தோன்றுகிறது. மேலும் கேரளாவில் பிலாச்சிமாடா என்ற ஊரில் இயங்கிவந்த கோகோ கோலா ஆலைக்கு எதிராக தனி ஒருத்தியாக போராடி வென்ற எரவாளர் பழங்குடியைச் சேர்ந்த மயிலம்மா என்ற பெண்மணியையும், அவரை போன்று இயற்கை மற்றும் சமூக நலனுக்காக ஏதோவொரு மூலையில் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும், ஒரு ஆலை, அதற்கு எதிரான போராட்டம், கலவரம், துப்பாக்கிச் சூடு, உயிர்பலி என சென்றவருடத்தில் நிகழ்ந்த நம்மால் மறக்கப்பட்ட அந்த சம்பவத்தையும் இந்த திரைப்படம் நினைவுபடுத்தவும் தவறவில்லை.
 Trailer

Woman at War
Directed by - Benedikt Erlings son
Written by - Benedikt Erlings son, Olafur Egill Egill Egill Egilsson
Music by - Davio Por Jonsson
Cinematography - Bergsteinn Bjorgulfsson
Country - Iceland
Language - Icelandic, Spanish, Ukrainian
Year - 2018